வித்யார்த்தி –
‘ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட தினத்தில் ஏன் 15 பேர் இஸ்தான்புலில் இருந்தார்கள்’’?
‘அவர்கள் யாரிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக் கொண்டார்கள்”?
‘விசாரணைக்காக சவூதி தூதரகம் உடனடியாகத் திறக்கப்படாமல் பல நாட்கள் கழித்தே திறக்கப்பட்டது ஏன்?
‘கொலை செய்யப்பட்டவரின் உடம்பு ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை?’
‘ஜமாலின் உடம்பை அகற்றும் பணி துருக்கியைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுக்கப்பட்டது என்று சவூதியின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் கூறினார்கள். அப்படியானால் அந்த துருக்கியைச் சேர்ந்தவர் யார்’’?
சென்ற செவ்வாய்க்கிழமை துருக்கியின் ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது பாராளுமன்றப் பேச்சில் கேட்ட கேள்விகள் இவை. இந்தக் கேள்விகளுக்கான விடைகளையே உலகு இன்று தேடிக்கொண்டிருக்கிறது.
சென்ற ஒக்டோபர் 2ஆம் திகதி பிற்பகல் 1.45 மணியளவில் துருக்கிப் பெண்மணி ஹெடிஸ் செஞ்சிஸ் உடனான தனது திருமணத்திற்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சவூதி தூதரகத்திற்குள் நுழைந்த, அமெரிக்காவில் வசிக்கும், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையாளர் ஜமால் கஷோக்ஜி திரும்பி வரவேயில்லை. ஜமால் ஒரு சவூதிப் பிரஜை. சவூதி அரசாங்கத்தையும், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானையும் பகிரங்கமாக தனது கட்டுரைகளில் விமர்சித்தவர்.
ஜமால் கஷோக்ஜி சவூதி தூதரகத்திற்குள் காணாமல் போனது முழு உலகத்தையும் உலுக்கியது. ஜமால் எங்கே என்று முழு உலகமும் கேட்டது. ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் நடை பெற்றன. துருக்கி தனது புலன் விசாரணையை ஆரம்பித்தது. இரண்டு வாரங்களாக முழு உலகிலும், ஊடகங்களிலும் இதுவே பேச்சானது.
ஜமால் கஷோக்ஜி அன்றைய தினமே பின் கதவு வழியாக வெளியே சென்றுவிட்டார் என்று சவூதி கூறிக்கொண்டிருந்த போது மெதுமெதுவாக துருக்கியின் புலனாய்வுத்துறை துருக்கியின் அரசாங்கப் பத்திரிகையான அஸ் ஸபாவிற்கு தகவல்களை தெரிவித்துக் கொண்டிருந்தது.
சென்ற செப்டம்பர் 26 ஆம் திகதி சவூதி தூதரகத்திற்குச் சென்ற ஜமால் ஒக்டோபர் இரண்டாம் திகதி மீண்டும் வருமாறு சவூதி தூதரகத்தினால் திருப்பி அனுப்பப்பட்டமை, 15 பேர் கொண்ட ஒரு குழு ஒக்டோபர் முதலாம் திகதி இஸ்தான்புல்லிற்கு தனியார் ஜெட் ஒன்றிலும், வர்த்தக விமானத்திலும் வந்திறங்கியமை, அக்குழுவில் முடிக்குரிய இளவரசராகிய முஹம்மத் பின் சல்மானின் பாதுகாவலர்களும், சவூதி புலனாய்வுத்துறை அதிகாரிகளும், சவூதியின் பிரபலமான தடயவியல் நிபுணரும் இருந்தமை, துருக்கிக்கான சவூதித் தூதுவரை சவூதி உடனடியாகத் திருப்பி அழைத்துக் கொண்டமை, வந்த 15 பேரும் அடுத்த நாளே திரும்பிச் சென்றமை, துருக்கி அதிகாரிகள் சவூதி தூதரகத்திற்குள் நுழைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் துப்புரவு குழு ஒன்று உள்ளே நுழைந்தமை, தூதரகத்திற்குள் புதிதாக பெயின்ட் பூசப்பட்டிருந்தமை என்று பல தகவல்களை ஊடகங்கள் வெளிப்படுத்திய போது சவூதி அரசாங்கம் வேறு வழியின்றி ஜமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் நடந்த ஒரு சிறு கைகலப்பில் மரணித்துவிட்டார் என்று கூறியது.
சவூதி தூதரகத்திற்குள் சென்ற ஜமால் கஷோக்ஜி எங்கே என்று இதுவரைக்கும் தேடிக்கொண்டிருந்த உலகு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை சவூதி உறுதி செய்த போது அவர் ஒரு கைகலப்பில் கொல்லப்பட்டார் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
நாட்கள் செல்லச் செல்ல உண்மைகள் வெளிவந்த வண்ணமே இருந்தன. ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட ஓர் ஒலிப்பதிவினைப்பற்றி துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த ஒலிப்பதிவு துருக்கி புலனாய்வு அதிகாரிகளிடம் இருப்பதாகவும் அதன் அடிப்படையில் ஜமால் கஷோக்ஜி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது உடல் ஒரு வாளினால் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு பெட்டிகளில் வைத்து தூதரகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஜமாலின் உடம்பைக் கூறு போடுவதற்காகவே தடவியல் நிபுணரான டாக்டர் ஸலாஹ் அல் துபைகி அந்த பதினைந்து பேர் கொண்ட குழுவில் இருந்ததாகச் சொல்லப்பட்ட போது சவூதி அரேபியா வசமாக மாட்டிக் கொண்டது.