பெரும்பாலானோருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில் காத்தான்குடி குறித்து இன்று பலரதும் உள்ளங்களில் மாற்றுக்கருத்தே குடிகொண்டுள்ளது. எந்தவொரு பிரதேசத்தைச் சேர்ந்தவராயினும் வந்து சுதந்திரமாக வியாபாரம் செய்யக்கூடிய வர்த்தகச் சந்தையொன்று காத்தான்குடியில் மட்டுமன்றி நாட்டில் எந்த இடத்திலேனும் உள்ளதென்றால், அபூர்வ நிகழ்வுதான்.
“இங்குள்ளவர்களிடம் நன்கு பணம் புழங்குகின்றது. அதனால் கையை விரித்து செலவு செய்கிறார்கள். நன்றாக உண்டு, குடிக்கிறார்கள். அதனால் இங்கு எதனைக் கொண்டுவந்து கொட்டினாலும் விற்பனை செய்து கொள்ளலாம்.”
இலங்கையில் ஒரு சதுர கிலோமீற்றர் பரப்பெல்லைக்குள் அதிக சனத்தொகைச் செறிவு கொண்ட மக்கள் வாழும் நகரம் காத்தான்குடியாகும். அங்கு பொலன்னறுவை, வெலிகந்தையைச் சேர்ந்த திலிண மதுசங்க என்பவரைச் சந்திக்கிறேன். அவரே மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி வியாபாரத்திற்குப் பிரசித்தி பெற்ற ஒரு நகராகும். இலங்கையில் புகழ்பெற்ற வர்த்தகர்கள் பிறந்த பிரதேசமாகும். வியாபாரி திலிண சுமார் 300 – 400 அன்னாசிப்பழங்களை இவ்வர்த்தக சந்தைக்கு எடுத்து வந்துள்ளார். அவர் தனதூர் வெலிகந்தையிலிருந்து, காத்தான்குடி நகர சபைத் தலைவரின் அழைப்பின் பேரிலேயே இங்கு வந்துள்ளார்.
அது குறித்து திலிண விபரிக்கையில்,
வெலிகந்த நகரிலிருந்து எனது தந்தைக்கு துண்டுப்பிரசுரமொன்று கிடைத்தது. தந்தை அதனை என்னிடம் தந்தார். அதனைப் படித்தேன். நாட்டிலுள்ள எந்த வியாபாரிக்கும் வந்து, வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு காத்தான்குடி வர்த்தக சந்தை கதவுகள் திறந்திருக்கும் என்ற தகவலே அந்தப் பிரசுரத்தில் காணப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டேன். அதன் போது, கிராமிய மற்றும் உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வார்த்தைகளைக் கேட்டதும் இச்சந்தைக்கு வந்து பார்க்க வேண்டும் என எண்ணினேன். அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கு வந்துள்ளேன். வியாபாரமோ நன்கு களை கட்டுகிறது என்று அவர் கூறினார்.
மாறுபட்ட பார்வை
இது பலருக்கு ஆச்சரியமிக்க கதையாக அமையலாம். காத்தான்குடி குறித்து பெரும்பாலானோர் உள்ளங்களில் இதற்கு முற்றிலும் மாறுபட்டதொரு சித்திரமே வரையப்பட்டுள்ளது. எந்தப் பிரதேசத்திலுள்ளவராயினும் சுதந்திரமாக வந்து வியாபாரம் செய்யக்கூடிய வர்த்தகச் சந்தையொன்று காத்தான்குடியில் மட்டுமல்ல நாட்டில் எந்த இடத்திலும் காண்பது அரிதான நிகழ்வாகும்.
திலிண மதுசங்க அண்மையில்தான் அன்னாசி வியாபாரத்தில் கால்பதித்துள்ளார். அன்னாசி விற்பனைக்கான நிரந்தர சந்தை வாய்ப்பின்மையே அவருக்கு சவாலாக இருந்தது. வியாபாரம் செய்ய அங்கு வரும்படி காத்தான்குடி நகராதிபதியால் அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு மதுசங்கவுக்கு மதுரமாக அமைந்தது.
திலிண அவர் கடந்து வந்த பாதையை விளக்குகையில், “எனது வயது 27. நான் அன்னாசி வியாபாரத்தில் ஈடுபட்டு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமேயாகும். நான் கம்பஹா, கிரிந்திவெல பகுதியிலிருந்து அன்னாசிப்பழங்களைக் கொண்டுவந்து, வெலிகந்த, செவனபிட்டிய போன்ற பிரதேசங்களில் மொத்த விற்பனையிலேயே ஈடுபட்டு வந்தேன். இதில் கூடுதலான வருவாயைப் பெற முடியவில்லை. அதனால் சில்லறையாக விற்பனை செய்வதற்குரிய சந்தையொன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். என்னிடம் மொத்தமாக கொள்முதல் செய்தவர்களே வெலிகந்த, செவனபிட்டிய சந்தைகளில் அன்னாசிப்பழ விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.”
அதனால் அவ்விடங்களில் என்னால் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இந்நிலையிலேயே காத்தான்குடி சந்தை கைகொடுத்துள்ளது. இதனால் குறிப்பிடத்தக்க பணம் இப்போது கைகளிலே புழங்குகிறது. எல்லா அன்னாசிப் பழங்களும் விற்பனையாகின்றன. இங்கு கிடைக்கும் மீன், கருவாடு வகைகளை எனதூர் பொலன்னறுவைக்கு எடுத்துச் சென்று விற்பதற்கும் இப்போது உத்தேசித்துள்ளேன். இதே போன்று அன்னாசிக் கொள்வனவுக்காக கம்பஹா செல்லும் போது, பொலன்னறுவையிலிருந்து சோளம் எடுத்துச் சென்று அங்கு விற்கவும் எண்ணியுள்ளேன்.”
சிநேகபூர்வ அழைப்பு
காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் குறிப்பிடுகையில்,
“காத்தான்குடி என்றவுடனே நாட்டு மக்கள் மாறுகண்கொண்டே நோக்குகின்றனர். இதற்கு சஹ்ரானின் பிறந்த ஊர் காத்தான்குடியென்பதும் பிரதான காரணமாகும். அத்துடன் இங்கு முஸ்லிம் சனத்தொகை அதிகரித்துக் காணப்படுவதும் மற்றொரு காரணமெனலாம். அதேபோன்றே இங்கு வர்த்தகப் போட்டியும் அதிகரித்துக் காணப்படுகிறது. பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் இங்கு வியாபாரிகள் வருகை தருவதற்கு நாம் ஊக்கமூட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.
காத்தான்குடி நான்கரை சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட ஒரு நகராகும். அங்கு 18 கிராம அதிகாரிகள் பிரிவுகள் காணப்படுகின்றன. சுமார் 60 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
நகராதிபதி அஸ்பர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் புகழ்பெற்ற பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலரும் பிறந்ததும் காத்தான்குடியாகும். இங்கு பிறந்து, இங்கே வாழ்ந்து வரும் சுமார் இரண்டாயிரம் அளவிலான வியாபாரிகள் நாடு முழுவதிலும் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த வர்த்தகர்களின் நுகர்வுப் பொருட்களிலும் சேவைகளிலும் மேலோங்கிக் காணப்படும் சிறப்புத்தன்மையும் விலைகுறைவுமே எமது வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கு பிரதான காரணமெனலாம். இந்த வர்த்தக உயர்வை முடக்குவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த வியாபாரிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. காத்தான்குடியில் வேறு வியாபாரிகளுக்கு வர்த்தகத்தில் ஈடுபட இடமளிக்கப்படுவதில்லை என்று கூறினர். இதேபோன்ற பொய்ப் பிரசாரங்களை அள்ளிக்கொட்டினர். இதனாலேயே காத்தான்குடிக்கு வந்து பாருங்கள் என்று எல்லோருக்கும் பொது அழைப்பொன்றை விடுக்க நான் எண்ணினேன். அதேபோன்றே இங்கு யாரும் வந்து வியாபாரம் செய்யக்கூடிய சூழல் ஒன்றையும் உருவாக்கவும் கங்கணம் கட்டினேன். அதற்கமையவே, மூன்று வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் வாராந்த சந்தையொன்றை ஆரம்பித்து வைத்தேன்.
இதனை ‘நகர சந்தை’ (சிற்றி பொல) என்று அழைக்கின்றனர். ஆனால் இங்கு வரும் வியாபாரிகளோ இதனை ‘நட்புச் சந்தை’ என்று குறிப்பிடுகின்றனர்” என்று நகராதிபதி கூறினார்.
குறைந்த விலையில்கூடிய பயன்
காத்தான்குடி நட்புச் சந்தையில் பொருட்கள் மலிவான விலைகளிலே விற்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இங்குள்ள விற்பனைப் பொருட்களில் குறித்துள்ள விலையை விடவும் குறைந்த விலைக்கு அவற்றை விற்பனை செய்வது இச்சந்தையில் ஈண்டு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அத்துடன் வியாபாரிகளுக்கிடையே கடும் போட்டியும் நிலவுகிறது. இதனால் வாடிக்கையாளர்களைப் போன்றே வியாபாரிகளும் கூடுதலான பயன்பாடுகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
காத்தான்குடி வாராந்த சந்தைக்கு வந்துள்ள மற்றொரு வர்த்தகரான மொஹம்மட் அன்வர் பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரசாரங்களைத் தொடர்ந்து இவரின் வியாபாரத்திலும் மண் விழுந்துள்ளது. இவர் தனது நிலைமை குறித்துக் குறிப்பிடுகையில்,
“நான், ஹேன்ட் பேக், பணப்பை போன்ற பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தேன். என்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள்தான். எனது தொழில் ஸதம்பிதமடைந்ததால் என்னைப் போன்றே எனது ஊழியர்களும் நன்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வர்த்தகம் தடைப்பட்டதால் எனது தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்காக பிறிதொரு சந்தை தேவைப்பட்டது. இந்நிலையில்தான் இந்த சந்தை குறித்து தெரிய வந்தது. தற்போது போகிற போக்கிலே இச்சந்தை இன்னும் சில மாதங்களில் இந்நாட்டின் பிரபல சந்தைகளில் ஒன்றாக உருவாவது திண்ணம். காரணம், இப்பிரதேசத்தில் பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். இங்கு பொருட்கள் நியாய விலையிலும் மலிவாகவும் விற்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் தாராளமாக வருகிறார்கள். இதனால் கூடுதலாக விற்பனையும் நடந்தேறுகிறது” என்று மன ஆதங்கத்தை வெளியிட்டார் அன்வர்.
இச்சந்தையிலுள்ள மற்றொரு வியாபாரியான அறுபத்தாறு வயதுடைய சோதிமணி என்னும் மாதுவைச் சந்தித்தோம். இவர் கல்லாறு பகுதியிலிருந்து இங்கு வந்துள்ளார். சிறிய மீன், சிறு கருவாடு போன்றனவற்றை விற்கும் சிறு வியாபாரி; அவர் கூறியதாவது,
“நான் சுண்டுவால் அளந்துதான் சிறு மீன், சிறு கருவாடுகளை விற்பனை செய்கிறேன். ஒரு சுண்டளவு மீன், கருவாடு. நூறு ரூபா, வசதியுள்ள குடும்பத்தினரும் வந்து என்னிடம் இந்த சுண்டளவையிலேயே மீன், கருவாடுகளை வாங்கிச் செல்கின்றனர். எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஐயாயிரம் ரூபாவுக்கு விற்பனை நடந்தேறுகிறது; எமது குடும்ப சீவனோபாயத்திற்கு இத்தொகை தாராளமாகப் போதுமானதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் எமது தமிழ் மக்களால் நிருவகிக்கப்படும் சந்தைகளில் விற்பனை செய்வதற்கு முஸ்லிம் வியாபாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் நாம் இந்த சந்தைக்கு வந்த போது, எம்மை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்” என்று அந்த தமிழ் பெண் வியாபாரி கூறினார்.
உள்ளூர் உற்பத்தியாளர்கள்
மிகவும் பாரிய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நிகரான பொருட்களை இச்சந்தையிலும் காணக்கூடியதாகவுள்ளன. பெரிய தொழில் நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலே இச்சந்தையில் விற்பனைக்குள்ள பொருட்களும் உள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்க விடயமாகும். தரம் ஒரு புறமிருக்க குறித்த பொருட்களின் குறிப்பிடத்தக்க விலை வித்தியாசமும் மற்றொரு சிறப்பம்சமாகும்.
ஓட்டமாவடியை வசிப்பிடமாகக் கொண்ட அலியார் முஹம்மட் அன்ஸார் சிறு தொழில் உற்பத்தியாளராவார். இவர் 16 சிறு தயாரிப்புக்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறார். அவற்றுள் சுத்திகரிப்புத் திரவ வகை பிரதான இடம் வகிக்கிறது. அவர் குறிப்பிடுவதாவது,
“இதோ, மலசலகூட பாத்திரங்களை சுத்தப்படுத்தும் திரவ போத்தல் காணப்படுகிறது. இதன் சந்தை விலை 260 ரூபா. ஆனால் இதனை இச்சந்தையில் 100 ரூபாவுக்கே விற்பனை செய்கிறேன். எனது 16 தயாரிப்புக்களும் கிட்டத்தட்ட பாதி விலைகளிலேயே விற்கப்படுகின்றன. நாம் அநேகமாக வீடுகள் தோறும் சென்றே விற்பனை செய்து வந்தோம். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக அவ்வாறு சென்று விற்பனையில் ஈடுபடும் அளவுக்கு நாட்டு நிலைமை சீராக அமையவில்லை. அதனால் எமது தொழில் சீர்குலைந்து போனது. தற்போதுதான் இச்சந்தையால் நாம் தலைதூக்கிக் கொண்டு வருகிறோம். இங்கு நல்ல சந்தைவாய்ப்புள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி, இங்கு இதர பொருட்களை விற்கவரும் வியாபாரிகளும் கூட எனது தயாரிப்புக்களை வாங்கிச் செல்கின்றனர். பெரிய தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தும் இரசாயனக் கலவைகளை விடவும் உயர்தரமான இரசாயனச் சேர்வைகளுடனே எனது தயாரிப்புகள் உள்ளமையே தரச் சிறப்புக்குக் காரணமாகும்” என்று அன்ஸார் கூறினார்.
வேறு வாராந்த சந்தைகளில் காணக்கிடைக்காத கிராமிய உற்பத்திகள் பலவும் இந்தச் சந்தையில் காணக்கூடியதாக உள்ளன. அவற்றுள் சப்பாத்து, செருப்பு, சவர்க்கார வகைகள், திரவ வகைகள், கைப்பைகள் மற்றும் தோல் பொருட்கள் பலவும் இங்கு விற்பனைக்குள்ளமை விசேடமாகும்.
வந்து பாருங்கள்
இந்த வாரச்சந்தையில் சந்தித்த நுகர்வோரில் பெரும்பாலானோர் காத்தான்குடி மக்களே. ஆனால் வியாபாரிகளில் பெரும்பாலானவர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களேயாவர். இவர்களிடையே சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்று சகல இனத்தைச் சேர்ந்த வர்த்தகர்களும் அடங்குகின்றனர். இவ்வாறிருந்தும் இவர்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகளோ, பாகுபாடுகளோ இல்லாது உற்சாகத்துடன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. இச்சந்தை இதுவரையில் மூன்று வாரங்கள் நடைபெற்றுள்ளன.
நாம் வியாபாரிகளைச் சந்தித்தது போல வாடிக்கையாளர்களில் ஒருவரான சித்தி பாத்திமா என்ற பெண்மணியொருவரையும் சந்தித்து வினவியபோது அவர் கூறியதாவது,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் எல்லோர் கண்களும் திறக்கப்பட்டுள்ளன. நாம் வாழ்வது சிறிதுகாலம் தான். இக்குறுகிய காலத்திற்குள் நாம் சந்தோசமாக வாழ வேண்டும். உண்மையிலேயே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு எமது மக்கள் நன்கு சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
எம்மால் தனித்து வாழ முடியாது என்பதை இப்போது எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். இப்பகுதியில் பிறர் எவருக்கும் வர்த்தகம் செய்ய இடமளிப்பதில்லை என்றொரு போலிப் பிரசாரம் தெற்கிலே பரப்பப்பட்டு வருகிறது. அது தவறானதொரு கருத்தாகும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நடந்திருப்பது என்னவென்றால், இங்கு மலிவு விலைகளில் பொருட்கள் விற்கப்படுவதால் தெற்கிலிருந்து பொருட்கள் கொண்டுவந்து இங்கு போட்டி போட முடியாமையைக் குறிப்பிடலாம்.
ஆனாலும் இங்கு எங்கிருந்து எவரும் வந்து வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையுமில்லை. இங்கு வந்து பாருங்கள் என்றே நாம் அறைகூவி அழைக்கிறோம்” பாத்திமா கூறினார். இதனையே நகராதிபதி அஸ்பரும் கூறுகிறார். மேலும் இச்சந்தையில் நாம் சந்தித்த பலரும் மேலே கண்டவாறான ஒரே கருத்தையே முன்மொழிந்தார்கள்.
சிங்களத்தில்: பிரஸாத் பூர்ணாமல் ஜயமான்ன
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
நன்றி: த.கட்டுமரன்
vidivelli