இரத்தக்கறை படிந்தவர் ஜனாதிபதியாக முடியாது
இலங்கை ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தல்ல என்கிறார் மங்கள
ஊடகவியலாளர்களினதும், மேலும் பல அப்பாவிகளினதும் இரத்தத்தை தமது கைகளில் கொண்டிருக்கும் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வர முடியாது.
கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட்டமையின் மூலம் மஹிந்த எதற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ‘இலங்கையும், அதன் மக்களும் ராஜபக் ஷ குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து’ என்பதாகவே மஹிந்தவின் மனதிலுள்ள எண்ணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக் ஷ ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக் ஷவினால் அறிவிக்கப்பட்டமையைத் தொடந்து அமைச்சர் மங்கள சமரவீர மிக நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இன்றை தினம் (நேற்று முன்தினம்) அவரது குடும்பத்தின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார். அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருப்பார் என்பது தொடர்பில் கடந்த சில வாரகாலமாகவே உலவிவந்த வதந்தி களுக்குப் பதிலளிப்பதை அவர் தவிர்த்து வந்தார். மஹிந்த ராஜபக் ஷவை நான் பல வருடகாலமாக அறிவேன்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து செயற்பட்டிருக்கின்றோம். ஒருமித்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டதுடன், ஒன்றாகவே அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். மஹிந்தவின் அமைச்சரவையிலும் நான் அங்கம் வகித்திருக்கிறேன்.
ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தைவிட்டு விலகிய போது நான் முன்னர் அறிந்திருந்ததை விடவும் அவர் வேறொரு மனிதராக இருந்தார். ஒரு ஜனாதிபதியாக நாட்டை முன்னிலைப்படுத்துவதிலும் பார்க்க தனது குடும்பத்தை வளப்படுத்திப் பாதுகாப்பதற்கே அவர் முக்கியத்துவம் வழங்கினார். முன்பொரு காலத்தில் அவர் உண்மையிலேயே இம்மண்ணின் மைந்தனாகவும், இந்நாட்டின் சாதாரண மக்களுக்காக சிந்திக்கின்ற ஒருவராகவும் இருந்தார்.
கடந்த 2015 ஜனவரியில் 400,000 இற்கும் அதிகமான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டு, மெதமுலானவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட போது மஹிந்த தனது செயற்பாடுகளில் காணப்பட்ட தவறுகளை இனங்கண்டிருப்பார் என்றும், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பார் என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருந்தேன்.
நாட்டின் நிர்வாகத்தில் தனது குடும்பத்தினரை அமர்த்தியமை தொடர்பிலும், மக்களின் பணம் கொள்ளையிடப்படும் போது அதனைத் தடுப்பதற்கு முற்படாமை குறித்தும், மீண்டும் காணமுடியாதபடி ஊடகவியலாளர்கள் வெள்ளை வான்களில் அடைக்கப்பட்டமை தொடர்பிலும் அவர் வருந்துவார் என்று கருதினேன். முதலில் தமிழர்களுக்கு எதிராகவும், அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகவும் இனவாதத்தைத் தூண்டியதன் ஊடாக தனது அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டமைக்காக வருந்துவார் என நினைத்தேன்.
ஆனால் கடந்த வருடம் அக்டோபரில் அவர் முறைகேடாகப் பதவிக்கு வரமுற்பட்ட போது மேற்கண்டவை அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் அல்ல என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.
அவரைப் பொறுத்தவரையில் சட்டத்தின் ஆட்சி என்பது ஒரு பொருட்டல்ல. அவரளவில் ஜனநாயகம் என்பது வெறும் வார்த்தை ஜாலம். அத்தருணத்தில் மஹிந்தவிற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தமையினாலேயே அவர் மீண்டும் பதவியிறங்கினார்.
ஆனால் இன்று (நேற்று முன்தினம்) தான் மஹிந்த ராஜபக் ஷ எதிரணியில் இருந்த காலப்பகுதியில் உண்மையிலேயே எதனைக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். மஹிந்த தனது குடும்பத்திற்கு மட்டும் மீறிய அதிகாரங்களைக் கொடுத்தமையை உணரவில்லை. தனது குடும்பத்திற்குப் போதியளவு அதிகாரங்களை வழங்கவில்லை என்றே அவர் உறுதியாக நம்புகின்றார். அவரைச் சார்ந்தவர்கள் பல மில்லியன் பெறுமதியான மக்கள் பணத்தை மோசடி செய்ததை அவர் உணரவில்லை. அவர் இந்த நாட்டை அதிகளவில் தீவிரவாதமயப்படுத்தினார் என்பதை உணரவில்லை. நாட்டின் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியமை குறித்து அவர் வருந்தவில்லை.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை, கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டமை மற்றும் மேலும்பல எண்ணற்ற ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ வருந்தவில்லை. மாறாக ஏனைய ஊடகவியலாளர்கள் இக்குற்றச்செயல்களைப் புரிந்த மனிதரைக் கண்டறிவார்களாயின் அவர்களுக்கும் இதே கதிதான் என்பதே அவரின் எண்ணமாகவுள்ளது.
சுமார் 5 வருடகாலமாக எதிரணியில் இருந்த பின்னரும் தன்னுடைய சகோதரன் நாட்டின் ஜனாதிபதி, தானே பிரதமர், மற்றொரு சகோதரன் சபாநாயகர், பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பாக நான்காவது சகோதரன், மகனுக்கு அவர் விரும்பும் பதவி என்பது தான் மஹிந்த ராஜபக் ஷ இந்நாட்டு மக்களுக்கு வழங்குகின்ற செய்தியாக இருந்தால், இதிலிருந்து ‘இலங்கை நாடும், அதன் மக்களும் ராஜபக் ஷ குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து’ என்பதே மஹிந்தவின் மனதிலுள்ள எண்ணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான, இந்நாட்டின் குடியுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடப்பட்டமை குறித்து வெட்கமடைகிறேன்.
அரசியல் என்பது அதிக தூரத்திற்கு ஓடுபவர்களுக்கானதே அன்றி, வேகமாக ஓடுபவர்களுக்கானது அல்ல. மரதன் ஓட்டப்போட்டியில் ஆரம்பத்தில் முன்னணியில் இருப்பவர் இறுதியில் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும். தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்னர் மஹிந்தவின் தற்போதைய செயற்பாடு அவர் எதற்கு முக்கியத்துவம் வழங்குகின்றார், அவரது சொத்துக்கள் என்ன, அவரது நேர்மை எங்கே பொய்யாகிறது உள்ளிட்ட அனைத்தையும் முழு நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கான விடை ராஜபக் ஷ, ராஜபக் ஷ மற்றும் ராஜபக் ஷவே.
இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவாகவோ அல்லது வேறெந்த ராஜபக் ஷவாகவோ இருக்க முடியாது. பல ஊடகவியலாளர்களினதும், மேலும் பல அப்பாவிகளினதும் இரத்தத்தை தமது கைகளில் கொண்டிருக்கும் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முடியாது. இந்நாட்டில் பிறந்த ஒருவரும், நாட்டைவிட்டுத் தப்பியோடாத ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும்.
தனது குடும்பத்தை விடுத்து நாட்டை முன்னிறுத்துவதுடன், ஜனநாயகத்தைப் பாதுகாத்து நீதித்துறை, அரசதுறை என்பவற்றின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படுபவரே ஜனாதிபதியாவார். எம்முடைய வேட்பாளரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாவார்.
யார் எம்முடைய வேட்பாளர்? ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு, மதச்சார்பற்ற வகையில் அனைவரையும் ஒன்றிணைப்பதுடன் ராஜபக் ஷ குடும்பம் மற்றும் அவர்களின் வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக நேருக்கு நேராக நின்று போராடத்தக்கதும், கொடுங்கோண்மை மற்றும் ஒடுக்குமுறை என்பவற்றுக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து வெல்லும் ஒருவரே எமது வேட்பாளராவார்.
vidivelli