புனித ஹஜ் கடமை அடுத்த வாரம் நிறைவுக்கு வரவுள்ளது. இவ்வருடம் கடந்த புதன்கிழமை வரை 1.8 மில்லியன் ஹஜ் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவை சென்றடைந்துள்ளனர் என சவூதி அரேபிய ஹஜ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
1,725,455 ஹாஜிகள் வான்மார்க்கமாகவும் 95,634 பேர் தரைமார்க்கமாகவும் 17,250 பேர் கடல்மார்க்கமாகவும் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 2.5 மில்லியன் ஹாஜிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருடம் சவூதி ஹஜ் அமைச்சினால் ஆரம்பத்தில் 3500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டது. பின்பு மேலதிக கோட்டாவாக 500 வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு கடந்த 15 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜித்தா நோக்கிப்பயணமானது. இறுதியாக கடந்த 7 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுடன் இரு சவூதி அரேபிய விமானங்கள் ஜித்தாவுக்குச் சென்றடைந்தன.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் சிலர் கடந்த 27 ஆம் திகதி சவூதி அரேபியாவைச் சென்றடைந்தனர்.
மேலும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸி, அமைச்சர் ஹலீமின் பிரத்தியேக செயலாளர் எம்.எச்.எம்.பாஹிம் ஆகியோர் கடந்த 5 ஆம் திகதி சவூதி அரேபியாவைச் சென்றடைந்தனர்.
இலங்கை ஹாஜிகளின் மருத்துவ சேவைகளுக்காக ஒரு பெண் டாக்டர் உட்பட 5 டாக்டர்கள் மக்கா, மதீனாவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு இலங்கை ஹாஜிகளுக்கென பிரத்தியேக மருத்துவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வருடம் ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 93 ஹஜ் முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வருடம் ஹஜ் ஏற்பாடுகள் எவ்வித பிரச்சினைகளுமின்றி முன்னெடுக்கப்பட்டாலும் இறுதி நேரத்தில் இரண்டு ஹஜ் முகவர்களினால் ஹஜ் யாத்திரிகர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
இறுதி நேரத்தில் கைவிடப்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள்
இவ்வருட ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹஜ் முகவர்களிடம் உரிய கட்டணங்களைச் செலுத்தி ஹஜ் பயணத்துக்குத் தயாரான நிலையிலுள்ள 123 ஹஜ் யாத்திரிகர்களை இரண்டு ஹஜ் முகவர்கள் இறுதி நேரத்தில் ஏமாற்றியுள்ளதால் அவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களில் 30 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள் கடந்த 6 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை முற்றுகையிட்டு முறைப்பாடுகளை முன்வைத்தனர். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலீக் ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள ஹஜ் பயணிகள் உதவிப் பணிப்பாளர் அன்வர் அலியிடம் நியாயம் கோரினார்கள்.
123 ஹஜ் யாத்திரிகளில் 8 ஹஜ் யாத்திரிகர்கள் ஒரு ஹஜ் முகவரிடம் ஹஜ் கட்டணங்களைச் செலுத்தியுள்ள நிலையில் அவர்கள் செலுத்திய கட்டணங்கள் அவர்களை ஹஜ் கடமைக்கு அழைத்துச் செல்லும் ஹஜ் அனுமதிப்பத்திர உரிமையாளரான மற்றுமோர் ஹஜ் முகவருக்கு குறிப்பிட்ட முகவரினால் வழங்கப்படவில்லை. இதனால் குறிப்பிட்ட 8 ஹஜ் யாத்திரிகர்களின் பயண ஏற்பாடுகளைச் செய்ய முடியாது என ஹஜ் அனுமதிப்பத்திர உரிமையாளரான ஹஜ் முகவர் மறுத்துள்ளார். இந்தப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நீண்டநேரம் இடம்பெற்றாலும் தீர்மானம் எட்டப்படவில்லை. ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து அறவிடப்பட்ட கட்டணத்தை அனுமதிப்பத்திரம் கொண்ட முகவரிடம் செலுத்துவதாக குறிப்பிட்ட ஹஜ் முகவர் உறுதியளிக்கவில்லை. இதனால் 8 ஹஜ் யாத்திரிகர்களையும் பணம் பெற்றுக்கொண்ட ஹஜ் முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, மேலும் 115 ஹஜ் யாத்திரிகர்கள் கடந்த 6 ஆம் திகதி மாலைவரை உரிய விமான டிக்கட் வழங்கப்படாது ஒரு ஹஜ் முகவரினால் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹஜ் முகவருக்கு உரிய கட்டணங்களை செலுத்தியிருந்தாலும் சவூதி அரேபியா விமானத்தில் பயணிப்பதற்கான விமான டிக்கட்டுக்குப் பணம் வழங்கப்படவில்லை. இதனால் சவூதி அரேபிய விமான சேவை விமான டிக்கட்டுகளை விநியோகிக்கவில்லை.
விமான டிக்கட்டுகள் வழங்கப்படாததால் ஹஜ் யாத்திரிகர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து பயணத்தை மேற்கொள்ள வந்தவர்கள் ஆவர்.
115 பேர் பயணம் 8 பேர் ஹஜ் யாத்திரை இழப்பு
ஹஜ் முகவர்களால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டிருந்த 123 ஹஜ் யாத்திரிகர்களில் 115 பேர் 7 ஆம் திகதி காலை சவூதி விமான சேவையூடாக ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியா நோக்கிப் பயணமானார்கள்.
ஏனைய 8 ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் முகவர் ஒருவருக்கு செலுத்திய ஹஜ் கட்டணம் தொடர்பான பிரச்சினை குறிப்பிட்ட ஹஜ் முகவரினால் தீர்க்கப்படாமையினால் அவர்கள் 8 பேரும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு தடையேற்பட்டது.
இறுதி நேரத்தில் ஹஜ் முகவர்களால் கைவிடப்பட்டிருந்த ஹஜ் யாத்திரிகர்கள் விவகாரம் 6 ஆம் திகதி முன்தினம் இரவு 11 மணி வரை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உதவிப்பணிப்பாளர் அன்வர் அலியின் தலைமையில் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட ஹஜ் யாத்திரிகர்களில் ஒரு தொகுதியினர் சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
115 ஹஜ் யாத்திரிகர்களுக்கான சவூதி அரேபிய விமான சேவையின் பயணச்சீட்டுகளுக்குரிய கட்டணத்தை செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர் உடன்பட்டார். அதற்கிணங்க 115 ஹஜ் யாத்திரிகர்கள் 7 ஆம் திகதி சவூதி நோக்கி பயணமாகினர்.
ஏனைய 8 ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் முகவரொருவருக்குச் செலுத்திய கட்டணங்கள் ஹஜ் அனுமதிப்பத்திரத்துக்கு உரித்தான ஹஜ் முகவருக்கு செலுத்துவதில் தீர்வொன்று எட்டப்படாமையினால் அவர்களது ஹஜ் பயணத்தில் தடையேற்பட்டது.
குறிப்பிட்ட 8 ஹஜ் யாத்திரிகர்களுக்கும் ஹஜ் முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.
இதேவேளை, இவ்விவகாரம் ஹஜ் கடமையில் தற்போது ஈடுபட்டிருக்கும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சர் ஹலீம் சவூதியிலிருந்து தேவையான அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
ஊழல் முகவர்களுக்கு சட்ட நடவடிக்கை
ஊழல்களில் ஈடுபட்டுள்ள ஹஜ் முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹஜ் குழு உறுப்பினர் எம்.எச்.எம்.பாஹிம் தெரிவித்தார். ஹஜ் முகவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
8 ஹஜ் விண்ணப்பதாரிகளை ஏமாற்றிப் பணம் பெற்றுள்ள முகவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஹஜ் விண்ணப்பதாரிகள் குறிப்பிட்ட முகவருக்கு கட்டணமாக தலா 6 இலட்சத்து 70 ஆயிரம் கடந்த மே மாதம் செலுத்தியிருந்தும் அவர்கள் ஹஜ் வாய்ப்பை இழந்துள்ளமை அனுமதிக்கப்பட முடியாதது என்றும் தெரிவித்தார்.
மக்காவிலிருந்து எஸ்.என்.எம்.ஸுஹைல்
vidivelli