உளவு பார்த்தமை மற்றும் வெளிப்புற செயற்பாட்டாளர்களுக்கு முக்கியமான பாதுகாப்புத் தகவல்களை வழங்கியமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த மத்தியூ ஹெட்ஜஸுக்கு ஆறுமாத துயரத்தின் பின்னர் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து ஐக்கிய இராச்சியத்திற்கு வந்து சேர்ந்தார்.
31 வயதான கல்வியியலாளரை ஏற்றிவந்த விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அபூதாபியிலுள்ள சமஷ்டி மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை மத்தியூ ஹெட்ஜஸுக்கு ஆயுள்தண்டனை விதித்தது.
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஹலீபா பின் ஸெயிட் அல்-நஹ்யானின் கருணை அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நூற்றுக்கணக்கான ஏனையோருடன் பிரித்தானிய கல்வியியலாளருக்கும் இப்பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரது கைது உறுதியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே இடம்பெற்றதாக கடந்த புதன்கிழமை அமீரக அதிகாரிகள் வலியுறுத்தியதோடு அவர் தனது உளவுப் பணிகள் தொடர்பில் விபரிக்கும் காணொலியையும் காட்சிப்படுத்தினர்.
ஒரு காணொலியில் தான் எம்.ஐ.6 என்ற பிரித்தானிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் என தன்னை விபரிக்கின்றார். மற்றுமொரு காணொலியில் தான் மேற்கொள்ளும் ஆய்வின் மூலம் இலகுவாக உள் நுழைய முடிவதாக அலுவலகமொன்றில் அவர் கூறுகின்றார்.
அதன் பின்னர் அவர் தனது விரல்களைச் சொடுக்கி அதுதான் எம்.ஐ.6 எனக் குறிப்பிடுகின்றார்.
அந்த காணொலியை ஒளிப்பதிவு செய்வதற்கு அமீரக அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை
ஆவர் பகுதி நேர கலாநிதி பட்ட ஆய்வாளர், பகுதி நேர வர்த்தகர். ஆனால் அவர் முழுநேர நூறு சதவீத உளவுச் சேவைச் செயற்பாட்டாளர் என ஐக்கிய அரபு அமீரக தேசிய ஊடக சபையின் அதிகாரியான ஜாபெர் அல்-லம்கி தெரிவித்தார்.
உளவு பார்த்தமைக்காக ஹெட்ஜஸ் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவர் மிகவும் இரகசியமான தகவல்களைத் திரட்டியதோடு தனக்கு நிதிவழங்கும் முதலாளிமார்களுக்காக அவற்றைத் திருடினார் என ஜாபெர் அல்-லம்கி மேலும் தெரிவித்தார்.
அவருக்கு பொது மன்னிப்பளிக்கப் பட்டுள்ளது என்பது மிகவும் நல்ல செய்தியாகும் எனத் தெரிவித்த ஹெட்ஜஸின் மனைவியான டெனிலா டெஜாடா, அவர் ஓர் உளவாளியாக இருப்பாரென நான் நம்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli