பழைமைவாதத்திலேயே பிடிவாதமாக இருக்கின்ற அதிகமானோர் நமது சமூகத்தில் இருக்கின்றனர்
புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரப் போனால் கிளர்ச்சி வெடிக்கலாம்; அதற்காக விட்டுக்கொடுப்போடு விடயங்களைக் கையாள வேண்டும்
கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி இஸ்லாமிய தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.
முஸ்லிம்களாகிய எங்களை பொறுத்தவரை இது ஒரு நெருக்கடியான காலகட்டமாகும். நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றோம். இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற போது இதுபோன்ற பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் மாணவியர்களுக்கும் கூட நிறைய பொறுப்புகள் உள்ளன. ஆகையால், மாணவியர்களும், ஆசிரியைகளும் கூட தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன.
இஸ்லாம், முஸ்லிம், குர்ஆன், அரபு மொழி என்பனவற்றையெல்லாம் மூர்க்கத்தனமாக அணுகுகின்றவர்கள் மத்தியில் திட நம்பிக்கையோடும் மன உறுதியோடும் உரிய விளக்கங்களை முன்வைப்பது எங்களது கடமையாகும்.
நேற்றுக் கூட (6ஆம் திகதி) அமைச்சரவையில் பெண்கள் முகத்தை மூடுகின்ற ஆடைகளை பற்றிய நிரந்தரமான சட்டம் பற்றிய விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நாங்கள் அதனை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஏனையவர்கள் மத்தியில் எங்களை பற்றிய ஓர் அச்சமும் சந்தேகமும் இருந்து வருவதால் நாங்கள் அதனுடைய ஆணிவேரை கண்டறிந்து அதற்கேற்றவாறு அணுகவேண்டும். பிற மதத்தவர்கள் மத்தியில் மட்டுமல்லாது, எங்களது சமூகத்திற்குள்ளேயே வித்தியாசமான விதத்தில் சவால் விடுப்பவர்கள் இருக்கத்தக்கதாக இது பாரதூரமான விடயமாக ஆகியிருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் அண்மைக்காலமாக முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் சம்பந்தமான விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சீர்த்திருத்தங்களின் போது தீர்வுகள் வெளியிலிருந்து அல்லாது, எங்களது சமூகத்திற்குள்ளிருந்தே அவை வரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
இவ்வாறான அம்சங்களை அணுகுகின்ற போது பெண் தலைமைத்துவம் பற்றிய சர்ச்சையும் எழத்தான் செய்கின்றது. இதில் நாம் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களான உலமாக்களுடன் கருத்தாடலில் ஈடுபட்டு இணக்கப்பாட்டை எட்ட வேண்டிய நிலைமை ஏற்டுகின்றது.
நான் கூறியபடி, பெண்களின் தலைமைத்துவம் சம்பந்தமானதொரு புதிய விவாதம் இன்று சமூகத்திற்குள் நடந்து கொண்டிருக்கின்றது. பெண்கள் தலைமைத்துவம் சம்பந்தமாக அல் குர்ஆன் என்ன சொல்லுகின்றது. நபிகள் நாயகத்தின் வாழ்க்கைமுறை எங்களுக்கு எதைப் போதிக்கின்றது. வெவ்வேறு மத் ஹபுகளில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்ற விவகாரத்தில் எல்லாம் இன்று ஒரு புதிய கதையாடல் ஆரம்பித்திருக்கின்றது. இது குறித்த கருத்து முரண்பாடுகள் இன்னும் முற்றுப்பெறாத, இணக்கப்பாட்டை எட்டமுடியாத விடயமாக இருக்கத்தக்கதாக சில பொறுப்புக்கள் இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குர்ஆன் வசனங்கள் “அர்ரிஜாலு கவ்வாமூன அலன்நிசா” என சூரத்துன்னிஸா என்ற அத்தியாயத்தின் 34ஆவது திருவசனத்தை மேற்கோள்காட்டி பெண்கள் தலைமைத்துவம் என்கின்ற விவகாரம் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. கவ்வாமூன என்பது நிர்வகிப்பவர்களாக, நிர்வகிக்கின்ற விடயத்தில் ஆண்கள் பெண்களைவிடவும் தகுதி வாய்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அந்த குர்ஆன் வசனம் சொல்வதானதொரு வியாக்கியானம் அளிக்கப்படுகின்றது. இதற்கு மறுதலையாக உலமாக்கள் மத்தியில் இமாம் அபூஹனிபா, இமாம் தபரி போன்றவர்கள் இதை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இது குடும்பத் தலைமைத்துவத்தை மாத்திரம் கதைகின்ற குர்ஆன் வசனம். இதை பொதுமைப்படுத்தி எல்லா விவகாரங்களிலும் பெண்கள் தலைமைத்துவத்திற்கு தகுதியற்வர்கள் என்று சொல்லுகின்ற வாதம் பிழையானது என்கின்றனர்.
எனவே, இதை மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இதற்கு மாற்றமாகவும் கருத்துச் சொல்கின்றார்கள். எனவே, இது ஒரு தர்க்கத்துக்குரிய விடயமாக ஆகியது. என்னைப் பொறுத்தமட்டில் “அர்ரிஜாலு கவ்வாமூன அலன்னிஸா” என்ற வாக்கியத்தை எடுத்துப் பார்த்தால் சூரத்துன்னிஸாவின் 34ஆவது திருவசனத்தின் முந்திய பிந்தியவை எல்லாம் குடும்பத்தைப் பற்றித்தான் பேசுகிறது. ஒரு குடும்பத்தில் இருக்கின்ற ஆண் அந்த குடும்பத்தை நிர்வகிப்பதற்கு அவரை முன்னிலைப்படுத்துவதற்கான காரணம் அந்த குடும்பத்திற்கு செலவு செய்கின்றார் என்ற காரணத்தினால் என்றும் அதன் பின்னால் குறிப்பிடப்படுகின்றது.
அதைப் பொதுமைப்படுத்தி தலைமைத்துவத்திற்கு பெண்கள் தகுதியில்லை என்று எடுத்த வாக்கில் சொல்லப் போனால், ஆண்கள் கடமையாற்றும் இடங்களில் குறிப்பாக, பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் தலைமை பொறுப்பில் இருக்க முடியாது போகும். அவ்வாறானால், தலைமைப்பதவியில் பெண்கள் இருக்க முடியாது. ஏனென்றால், இதேமாதிரி நீதிபதிகளாகவும் வரமுடியாது என்ற வாதமும் முன்னெடுக்கப்படுகின்றது. வியாக்கியானங்கள் வித்தியாசப்படலாம். சபா நாட்டு அரசி- பாரசீக தேசத்திலிருந்த அந்த அரசி சம்பந்தமாக நபியவர்கள் அவர்களுடைய ஒரு ஹதீஸையும் மேற்கோள் காட்டுகிறார்கள். சபா நாட்டு அரசியின் ஆட்சியில் எந்தப் பெண் ஆட்சிக்கு வருகிறார்களோ அந்த நாடு முன்னேறாது என்று சொல்லப்பட்டதாக நபியவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் மேற்கோள் காட்டப்படுகிறது.
அதேவேளை, அதற்கு மாற்றமாக அல்குர்ஆனில் சுலைமான் நபியவர்களுடைய காலத்தில் வாழந்த பல்கீஸ் அரசியுடைய ஆட்சி பற்றி கூறப்படுகிறது. அந்த ஆட்சிக் காலத்தில் அந்த அரசி யுத்தத்திலிருந்து தவிர்ந்து கொண்டதனால் பாரிய அழிவிலிருந்து தன்னுடைய மக்களைக் காப்பாற்றினார் என்று அல்குர்ஆன் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றை ஒரு முன்னேற்றகரமான நோக்கில் மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் ஒரு தெளிவை பெறலாம். ஏனென்றால் அந்தக் காலத்திலே பெண்கள் சமூக பொறுப்புகள் குறித்த விவகாரங்களில் போதிய தேர்ச்சி இல்லாதிருந்த நிலையில் சில விடயங்களை வியாக்கியானம் செய்கின்ற போது அவற்றிற்கு அந்தந்த சந்தர்ப்பங்களில் மற்றும் காலகட்டங்களில் கொடுக்கப்பட்ட வியாக்கியானங்கள் சகல காலத்துக்கும் உரியவையாக ஒரு பொதுப்படையான விடயமாக மாறுகின்ற போது தெளிவற்ற தன்மை தோன்றலாம்.
பெண் குழந்தைகளைப் பிறந்த உடனேயே உயிரோடு கொன்று புதைத்துக் கொண்டிருந்த அறியாமை சமூகத்தில் இருந்து பெண்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த மார்க்கம் எங்களுடைய மார்க்கம் என்று நாங்கள் எல்லோரும் வியந்து கூறுகின்றோம். அப்படிச் சொல்பவர்கள் இன்று பெண்களின் சமூக செயற்பாடுகளிலே அறிவியல் ரீதியான முன்னேற்றங்களோடு நவீன கால சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு தங்களை தயார்படுத்துகின்ற விவகாரத்தில் தர்க்கித்துக் கொள்கின்றனர். இந்த அடிப்படையில் தான் இவற்றிற்கு மீள்பார்வை அவசியம் என்று ஏராளமான உலமாக்கள் இவற்றை கேள்விக்குட்படுத்துகின்றனர். ஆனால், இன்னும் பழைமை வாதத்திலேயே பிடிவாதமாக இருக்கின்ற அதிக எண்ணிக்கையானோரும் எங்களுடைய சமூகத்தில் இருக்கின்றனர்.
இவர்களை இணக்கப்பாட்டிற்கு கொண்டுவருவது தேவைப்பாடாக இருக்கின்றது. ஏனென்றால், சமூகத்துக்குள் எடுத்த எடுப்பிலேயே ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரப் போனால் அங்கு ஒரு கிளர்ச்சி வெடிக்கலாம். அதற்காக ஓரளவு விட்டுக்கொடுப்போடு இந்த விவகாரங்களைக் கையாளவேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் எல்லோரும் தீவிரமாக செயற்பட வேண்டியிருக்கிறது.
இன்று முஸ்லிம் சமூகம் சம்பந்தமான மோசமான விமர்சனங்கள் எங்களது சமூகத்திற்கு வெளியிலிருந்து ஏன் சொல்லப்படுகின்றதென்றால், எங்களுடைய இஸ்லாமிய அடிப்படை குறித்த மீள்வாசிப்பு என்ற விடயத்தில் இன்று தோன்றியுள்ள புதிய சவால்களையும் அடிப்படையாக வைத்துத்தான் அவ்வாறு கூறப்படுகிறது. இதற்கு நாங்கள் உரிய முறையில் விளக்கமளிக்க வேண்டும். இவை போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு இங்கு சில நிமிடங்களில் பேசி முழு விளக்கமளிப்பதென்பது கஷ்டமான காரியமாகும்.
பெண் ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்கின்றபோது ஏற்படுகின்ற சவால்கள், வாழ்க்கை வழிமுறை தொடர்பாக நான் எனது பாட்டி, தாய், மனைவி மற்றும் மகள்மார் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்ட விடயங்கள் ஆண்களிடமிருந்து தெரிந்துகொண்ட விடயங்களை விட மிகவும் முக்கியமானவையாகும். என்னுடைய பாட்டனார் ஒரு பள்ளிவாசலின் கதீபாக 35 வருட காலம் சேவை செய்திருக்கிறார்.
எங்களது பாட்டன் ,பாட்டி ஆகியோர் அணிந்த ஆடை அணிகலங்கள், நடை உடை பாவனைகள் என்பன இன்னமும் எங்களுடைய உள்ளங்களில் பசுமையாக பதிந்துள்ளன. அவை மிகவும் ஒழுக்கத்தை பிரதிபலிக்கக் கூடியவையாகத்தான் அமைந்திருந்தன. அதேபோல காலப்போக்கில் வேறு விதமான உடைகள் ஒரு முன்மாதிரியான வடிவமாக செல்வாக்குப் பெற்றுள்ளன. அவற்றையே நாம் இன்று காணக்கூடியதாகவுள்ளது. இவற்றை சிலர் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கலாசாரம் என்றும் கூறுகின்றனர்.
அதேவேளை, பாரம்பரிய முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் நமது ஆடை கலாசாரம் மறுபடியும் மாற்றப்பட வேண்டுமென்றும் கூறி வருகின்றனர். அதேபோல் எமது ஆடை கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என்ற ஒரு விமர்சனம் அந்நிய சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
விசேடமாக முஸ்லிம்களின் ஆடை கலாசாரத்தை விமர்சிக்கும் பௌத்த குருமார்கள் உட்பட பல்வேறு கூட்டத்தினர் காணப்படுகின்றனர். எனவே. இவை வாத விவாதங்களுக்கு உட்படுத்தக்கூடிய விடயங்களாக இருந்த போதிலும், விமர்சிப்போருடன் நட்புறவோடு கருத்துப் பரிமாறி விளங்க வைப்பதே சிறந்ததாகும்.
அழகான முறையில் நல்ல வார்த்தைகளில் இது தொடர்பில் கலந்துரையாடலாம் என நபி பெருமானார் (ஸல்) கூறியிருக்கின்றார்கள். இது தவிர்த்து எடுத்த எடுப்பிலேயே முட்டி மோதிக்கொள்ள முன்வரக் கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு எங்களுடைய செயற்பாடுகளை நாம் வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் யதார்த்தங்களை சரிவர புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். பெண் உரிமை ஆர்வலர்கள் சிலர் வாதவிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு பேசப்படுகின்றவை சர்ச்சைக்குரியவையென கருதப்படுபவை மட்டுமல்ல சவாலுக்குரியவையும் சமகால விவகாரமும் ஆகும். ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.
மாறிவரும் காலத்தின் தேவைக்கேற்ப சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தை பொறுத்தவரை முன்னேற்றகரமான சீர்திருத்தங்கள் உள்வாங்கப்படுவது பற்றி சீர்தூக்கிப்பார்க்கப்பட வேண்டும்.
பெண்களுடைய இயல்பு, உடல்வலிமை சிந்திக்கும் ஆற்றல் என்பவற்றிற்கு ஏற்றதாக அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறான சீர்திருத்தங்கள் இந்தோனேசியாவில் 1961 ஆம் ஆண்டிலேயே உள்வாங்கப் பட்டுவிட்டன. சிலவருடங்களுக்கு முன்னர் அவை மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
எங்களது முன்னோரைவிட அதிகமான சவால்களை நாங்கள் எதிர்நோக்குகின்றோம். பெண்களாகிய உங்களது வழிகாட்டலில் அடுத்துவரும் சந்ததியினர் இவற்றைவிட அதிகமான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு எமது பெண்கள் சமூகம் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனக்கூறி வைக்கவிரும்புகிறேன்.
vidivelli