இம் முறை ஹஜ் யாத்திரிகர்களுக்கு 8 மில்லியன் குர்ஆன் பிரதிகளை சவூதி அரேபியா விநியோகித்துள்ளது.
ஹஜ் காலத்தை முன்னிட்டு இஸ்லாமிய விவகார, தஹ்வா மற்றும் வழிகாட்டல் அமைச்சு குர்ஆன்களை விநியோகிக்கும் செயற்பாட்டை தொடங்கியது. சவூதிக்கு ஹஜ் யாத்திரிகர்கள் வரும்போது அவர்களை குர்ஆனைக் கொடுத்து வரவேற்பது ஒரு சம்பிரதாயமாகும். அதனடிப்படையில் அவ்வமைச்சு மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன்களையும் யாத்திரிகர்களுக்கு வழங்கியுள்ளது. இறுதியாக யாத்திரிகர்கள் கடமைகளுக்காக புறப்படுவதற்கு முன்னரே குர்ஆன் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் நூலினை பெற்றுக் கொள்வர்.
இந்த செயற்பாட்டின் நோக்கம் யாத்திரிகர்கள் மத்தியில் முறையான விழிப்புணர்வை ஊட்டுவதும் நம்பிக்கை, வழிபாடு மற்றும் நடத்தை என்பவற்றை முறையாக பின்பற்றுவதும் ஆகும்.
வெளியீட்டு விவகாரம் மற்றும் கல்விசார் ஆய்வுத் திணைக்களத்தின் செயலாளர் ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அல் ஹம்தான் தெரிவித்ததன்படி ஹஜ் காலத்திற்காக வேண்டி இந்த வருடம் 30 மொழிகளில் 52 வகையான நூல்கள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. குர்ஆனின் 8 மில்லியன் பிரதிகள், பாரம்பரிய நூல்கள், மற்றும் வழிகாட்டல் நூல்கள் என்பன ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாமிய இலத்திரனியல் நூலகமானது அமைச்சினால் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் புத்தகங்களின் குரல் பதிப்புக்களை சவூதியில் ஹஜ்-உம்ரா யாத்திரிகர்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு சர்வதேச விமான நிலையத்திலும் வெளியேறும் இடங்களிலும் ஒருசில பள்ளிவாசல்களிலும் மற்றும் முக்கியமான இடங்களிலும் கிடைக்கக் கூடியவாறு செயற்படுத்தியுள்ளது. மேலும் www.islamic-ebook.com என்ற இணையத்தளத்தின் ஊடாக எந்தவெரு நபராலும் இந்த சேவையை பெற முடியும்.
எம்.ஏ.எம். அஹ்ஸன்
vidivelli