இந்த நாட்டில் மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் பாராளுமன்றத்தை கூட்டும் சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்துவது சிறைவாசம் அனுபவிக்கும் குற்றமாகும். ஆகவே சபாநாயகர் சிறைக்கு செல்லத் தயாராக வேண்டுமென ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். தனது சுயபுத்தியுடனா சபாநாயகர் செயற்படுகின்றார் என்ற கேள்வி எழும்புகின்றது. ஆகவே அவரை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். இது குறித்து அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,
பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக சபாநாயகர் பின்பற்றியுள்ள நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கும், பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கும் முரணானது என நாங்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றோம். சபாநாயகர் தொடர்ந்தும் பக்கசார்பாக செயற்பட்டு வருகின்றார். சபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் நிலையியல் கட்டளைக்கமைவாக செயற்படும் வரை ஆளும் கட்சியினர் பாராளுமன்றத்தில் அவர் எடுக்கும் தீர்மானங்களை நிராகரித்து சரியான தீர்மானத்திற்கு வருமாறு அவரை வலியுறுத்தியுள்ளோம். இன்றைய தினத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை பார்த்தால் பத்திரம் வெற்றுப் பத்திரமாகவே இருக்கின்றது. இதன்படி சபாநாயகர் நினைத்தவாறு நடவடிக்கையெடுப்பதால் எங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்க முடியாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளதுடன் அமைச்சரவையொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தில் முறையற்ற வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைகள் தொடர்பாக ஜனாதிபதி சபாநாயருக்கு அறிவித்துள்ளார். இதன்படி முறையற்ற வகையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நீக்கப்பட்டு முறையாக பாராளுமன்றத்தை நிலையியல் கட்டளைக்கமைய நடத்திச் செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்தும் சபாநாயகர் தவறான முறைமையையே பின்பற்றுகின்றார். இன்று பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவில்லை. அத்துடன் அவரால் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவும் கூடவில்லை. இதன்படி இன்றைய தினமும் பாராளுமன்றம் நிலையியல் கட்டளையை பின்பற்றி கூடவில்லை. இதனால் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென நாங்கள் தீர்மானித்துள்ளோம். சபாநாயகர் சரியான முறையில் பாராளுமன்றத்தை நடத்திச் செல்லும் வரை மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம் எனக் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா,
பாராளுமன்றம் என்பது கேலிக் கூத்துக்கான இடமில்லை. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும். இதுவே உலக நாடுகளிலுள்ள பாராளுமன்றத்தின் சம்பிரதாயமாக இருக்கின்றது. இந்நிலையில் சபாநாயகர் செயற்படும் முறைமையை பார்த்தால் ஆளும் கட்சியோ, பிரதமரோ, அமைச்சர்களே இல்லையென்பது போன்றே இருக்கின்றது. அப்படியென்றால் எவ்வாறு பாராளுமன்றம் செயற்பட முடியும். சபாநாயகரின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தனது சுய புத்தியுடனா செயற்படுகின்றார் என்ற கேள்வி எழும்புகின்றது. ஆகவே அவரை மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்த வேண்டும் போலிருக்கின்றது. இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலை பார்த்தால் நிலையியல் கட்டளைக்கமைய பாராளுமன்றம் நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கமைய எங்களால் செயற்பட முடியாது என்பதனாலேயே நாங்கள் கூட்டத்தை பகிஷ்கரித்துள்ளோம். அவர் மத்தியஸ்தமாக நடந்து கொண்டு ஆளும் கட்சியை ஏற்றுக்கொண்டு செயற்படுமாறு அவரை கோருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச,
சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கரு ஜயசூரிய மக்கள் பணத்தை பயன்படுத்தி இன்று ரணில், அனுர, சுமந்திரன் குழுவின் அரசியல் பிரசார செயற்பாடுகளுக்காக பாராளுமன்ற சபா பீடத்தை பயன்படுத்தி வருகின்றார். முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் கணவன் அரச வங்கியொன்றில் தலைவராக இருந்த போது மேற்கொண்ட செயற்பாட்டை அடிப்படையாக கொண்டு 5 வருட சிறைத்தண்டனைக்கு இலக்காகியுள்ளார். இதேபோன்று தனக்கு சம்பந்தமில்லாத அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பணம் மற்றும் வரிப் பணத்தை அரச நிறுவனத்தின் பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்ட விரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று சபாநாயகர் ஆசனத்தில் இருக்கும் கரு ஜயசூரியவும் மிக விரைவில் அதேபோன்ற வழக்குகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இந்த நாட்டில் மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் ரணில், அனுர, சுமந்திரன் உள்ளிட்ட குழுவின் அரசியல் செயற்பாட்டு பிரசாரத்தை முன்னெடுத்தமைக்கான பொறுப்பை அவர் ஏற்க நேரிடும். ஆகவே விரைவில் தண்டனைக்குத் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli