குப்பை சேகரிக்கும் தொழில் மூலம் 26 ஆண்டுகளாக பணம் சேமித்து ஹஜ்ஜை நிறைவேற்றும் இந்தோனேசியப் பெண்
இஸ்லாத்தின் புனிதத் தலங்களை தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியிருந்த குப்பை சேகரிப்பதை தொழிலாகச் செய்து கடந்த 26 வருடங்களாக பணம் சேமித்த 64 வயதான இந்தோனிசியப் பெண்ணின் கனவு இவ்வருடம் நனவாகின்றது.
ஹஜ்ஜினை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு எப்போதும் இருந்தது என மர்யானி என்ற பெண்மணி கடந்த வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவை நோக்கி புறப்படுவதற்கு முன்னதாகத் தெரிவித்தார்.
1980 ஆம் ஆண்டு தனது கணவர் மரணமடைந்ததன் பின்னர் ஹஜ் யாத்திரையினை மேற்கொள்ள வேண்டும் என்ற அவா மேலும் உறுதியடைந்ததாக தெரிவிக்கும் மர்யானி 1993 ஆம் ஆண்டு தொடக்கம் பணம் சேமிக்கத் தொடங்கியதாகவும் குறிப்பிடுகின்றார்.
நான்கு பிள்ளைகளை வளர்க்க வேண்டிய விதவைத் தாயான தனக்கு அந்த நேரத்தில் எப்படி பணத்தைச் சேகரிப்பதென தெரியவில்லை. எனவே குப்பைகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன் என மர்யானி தெரிவித்தார்.
தினமும் அதிகாலையில் தனது குப்பை சேகரிக்கும் பணியை ஆரம்பிக்கும் மர்யானி லுஹர் தொழுகைக்கான அதான் ஒலிக்கும் வரை அப்பணியில் ஈடுபடுவார்.
பயன்படுத்திய பிளாஸ்ரிக் கோப்பைகள், போத்தல்கள் மற்றும் கடதாசி அட்டைகளையும் சேகரித்து இப் பெண்மணி விற்பனை செய்வார். பெரும் மழை பெய்யும்போது மணலை சேகரித்து விற்பனை செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜகார்த்தாவை ஊடறுத்துச் செல்லும் பிரதான நதியான சிலிவுங்கிற்கு அருகே இவர் வசித்து வருவதால் ஆற்றில் குவியும் மண்ணை எடுத்து கட்டட மூலப் பொருளாக விற்பனை செய்வார். இவரால் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மண் மூடைகளைச் சேகரிக்க முடியுமாக இருந்தது. ஒரு மண் மூடையினை 8,000 இந்தோனேசிய ரூபியாவுக்கு (0.56 அமெரிக்க டொலர்) விற்பனை செய்வார்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கடின உழைப்புக்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டு அந்தக் காலத்தின்போது இந்தோனேசியாவில் ஹஜ் யாத்திரைக்குச் செல்வதற்காக பதிவு செய்துகொள்வதற்குரிய ஆகக் குறைந்த முதற்கட்டக் கொடுப்பனவுத் தொகையான 25 மில்லியன் ரூபியாவினை (1,750 அமெரிக்க டொலர்) சேமித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மீதித் தொகையான 10 மில்லியன் ரூபியாவினை (699.82 அமெரிக்க டொலர்) செலுத்துவதற்காக குப்பை சேகரிப்பிலும் மண் சேகரிப்பிலும் கடுமையாக உழைத்தார்.
அவர் தான் பணம் சேமிக்கும் இரகசியத்தை தனது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நீண்ட காலமாக மறைத்தே வந்துள்ளார்.
ஹஜ் யாத்திரையினை மேற்கொள்வதற்கான பணத்தை சேர்ப்பதற்கு குப்பை சேகரிப்பிலும் மண் சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்ததை அவரது பிள்ளைகள்கூட அறிருந்திருக்கவில்லை.
சமய விவகார அமைச்சிலிருந்து பயணிக்கும் பட்டியலில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைத்ததன் பின்னர் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில்தான் இந்த விடயத்தை தனது பிள்ளைகளிடம் மர்யானி தெரிவித்திருக்கிறார்.
மர்யானியின் திட்டம் தொடர்பில் கேள்வியுற்ற அயலவர்கள் ஏன் அவரது பிள்ளைகள் மர்யானி ஹஜ் செய்வதற்காக குப்பை சேகரித்து பணம் சேர்க்க அனுமதித்தார்கள் என கவலையுடன் வினவினார்கள்.
யாத்திரை மேற்கொள்வதற்கு தாயார் பணம் சேமிக்கிறார் என்பது எனக்கே தெரியாது, அப்படியிருக்க நான் எப்படி உதவுவது என கேட்கிறார் வாகனத் தரிப்பிட உதவியாளராகக் கடமையாற்றும் அவரது பிள்ளைகளுள் ஒருவரான தானி முல்யானா.
26 வருடங்கள் என்பது மிக நீண்ட காலந்தான் என ஏற்றுக்கொண்ட மர்யானி புனித தலத்திற்கு எப்போது போக முடியும் என்பது தொடர்பில் கவலைப்பட்டதில்லை. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நான் பணம் சேமித்தேன், நான் முழு உற்சாகத்துடன் இருந்தேன் அதனால் முயற்சியைக் கைவிடவுமில்லை சோர்வடையவுமில்லை எனவும் தெரிவித்தார்.
மர்யானி தான் சேகரிக்கும் பொருட்களை உடனடியாக விற்பனை செய்வதில்லை, சுமார் ஒரு வருடம் குவித்து வைத்திருந்து அதன் பின்னரே விற்பனை செய்வார்.
அவற்றை விற்பனை செய்தால் எனக்கு வருடாந்தம் 1.2 மில்லியன் ரூபியா (84 அமெரிக்க டொலர்) கிடைக்கும் அதில் 1 மில்லியன் ரூபியாவினை (70 அமெரிக்க டொலர்) சேமிப்பேன், மீதியைச் செலவு செய்வேன் என அவர் தெரிவித்தார்.
மர்யானியின் நாளாந்த செலவுக்கு அவரது பிள்ளைகள் உதவி வருகின்றனர், அவரது பிள்ளைகளுள் அதிகமானோர் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகின்றனர்.
எம்.ஐ.அப்துல் நஸார்
vidivelli