- இவ் வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு நேற்று முன்தினம் வரை 1.7 மில்லியன் யாத்திரிகர்கள் மக்காவுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை வரை விமானம் மூலம் 1,664,974 பேரும், தரை மார்க்கமாக 92,844 பேரும் கடல் மார்க்கமாக 17,249 பேருமாக 1,775,067 யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளதாக சவூதி அரேபிய உத்தியோகபூர்வ செய்தித் தாபனமான சவூதி ஊடக முகவரகம் தெரிவித்துள்ளது.
- சவூதி அரேபிய சிவில் விமான அதிகார சபை இம்முறை நடைமுறைப்படுத்திய உயர்தரமான நியமங்கள் காரணமாக ஜித்தாவிலும் மதீனாவிலும் யாத்திரிகர்கள் விமான நிலையங்களில் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொண்டனர். குறிப்பாக ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் விமான நிலையம் ஊடாக 805,290 பேர் வருகை தந்துள்ளனர். விமான நிலையங்கள் ஊடாக மாத்திரம் இம்முறை வெளிநாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 1,755,768 ஆகும். சவூதி விமான நிலையங்களில் யாத்திரிகர்கள் அதிக நேரத்தைச் செலவிட அவசியமேற்படாத வகையில் துரித சேவையை வழங்கும் வகையில் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
- ஹஜ் யாத்திரிகர்களுக்குப் பயனளிக்கும் வகையில் சவூதி ஹஜ் அதிகாரிகள் இரு வேறு அப்ளிக்கேஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 9 மொழிகளில் இயங்கக் கூடிய இந்த அப்ளிக்கேஷன்களை ஹாஜிகள் தமது கையடக்கத் தொலைபேசியில் நிறுவிக் கொள்வதன் மூலம் அவசர உதவிகள், புனித தலங்கள் ,நாணயமாற்றுகள், உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் போன்றவற்றை இலகுவில் கண்டறியக் கூடியதாகவிருக்கும். இணையத்தள இணைப்பு இன்றியே இயங்கக் கூடிய வகையில் இந்த அப்ளிக்கேஷன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த அப்ளிகேஷன்கள் 10 ஆயிரம் தடவைக்கும் மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டி மூலம் கிப்லா, தொழுகை நேரம், காலநிலை போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
- சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சர் ஷெய்க் அப்துல் லதீப் அஷ் ஷெய்க் இவ்வருட ஹஜ் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்தக் கண்காட்சியில் மக்காவின் வரலாறும் குடியேற்றமும் ஸம்ஸம் நீரூற்றின் கதை மற்றும் கஃபதுல்லா கட்டப்பட்ட முறை போன்றவற்றை விளக்கும் அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. மேலும் ஹஜ்ஜின் வரலாற்றைக் கூறும் அம்சங்கள் மற்றொரு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மக்கவிலிருந்து எஸ்.என்.எம். ஸுஹைல்
vidivelli