உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்னணியிலிருந்த சக்திகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக விரைவில் சுயாதீன ஆணைக்குழுவொன்றினை நியமிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சுயாதீன ஆணைக்குழு நியமனம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டு தற்போது மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் அது தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
அதனால் இந்த விவகாரத்தில் தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவது தொடர்பில் விரைவாக தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிப்பதற்கு இடமளிக்க முடியாது. கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
vidivelli