மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் : பல்கலையாக அங்கீகரிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது
உயர் கல்வி அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
பட்டிக்கலோ கம்பஸ் நிறுவனத்தினால் தனித்து இயங்க முடியாத நிலையில் அவர்களுக்கு சர்வதேச நிதி உதவிகளே தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் சர்வதேச நிதிகள் முறையாக திரட்ட முடியாத காரணத்தினால் பட்டிக்கலோ கம்பஸ் நிறுவனம் முறையாக இயங்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு பட்டிக்களோ கம்பஸ் நிறுவனத்தை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கும் கோரிக்கையை உயர்கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது என உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹகீம் சபையில் தெரிவித்தார். இந்த நிறுவனத்தை அரசாங்கம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அமைச்சரவை தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பட்டிக்கலோ கம்பஸ் நிறுவனம் குறித்து ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
பட்டிக்கலோ கம்பஸ் நிறுவனம் குறித்து பலர் உணர்வுபூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். உயர்கல்வி அமைச்சு இதனை எவ்வாறு கையாள்கின்றது என்பதை நான் கூறியாக வேண்டும். பட்டிக்கலோ கம்பஸ் நிறுவனம் குறித்து அமைச்சரவை உபகுழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு அமைச்சர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களின் கீழ் தான் முதலீட்டுசபை விடயங்களும் வருகின்றன. குறித்த நிறுவனத்தை ஒரு பட்டம் வழங்கும் நிறுவனமாக கருதி இதனை பல்கலைக்கழகமாக மாற்றும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது குறித்து ஆராயப்பட்டு இறுதிக் கூட்டத்தில் இந்த நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்க முடியாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுயமாக இயங்க முடியாத நிலையில் வெளிநாட்டு நிதி உதவியுடன் இது இயங்க வேண்டியுள்ள நிலையில் இதற்கான நிதியை திரட்டுவது சாத்தியமற்றது என்பதை கருத்தில் கொண்டு இதனை நாம் நிராகரித்துள்ளோம். அமைச்சரவையிலும் இதனை நாம் கூறியுள்ளோம். அமைச்சரவை இது குறித்து ஆராய்ந்து வருகின்றது. குறிப்பாக இந்த கட்டிடத்தொகுதியை என்ன செய்வது என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.
மேலும் இந்த நிறுவனத்திற்கு எவ்வாறு பணம் வருகின்றது என்ற கேள்வி உள்ளது. அத்துடன் இந்த நிறுவனத்தின் கட்டடத்தை என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆகவே இது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே சைட்டம் குறித்தும் இவ்வாறான பிரச்சினை எழுந்தது. பட்டிக்கலோ கம்பஸ் நிறுவன உரிமையாளர் இதனை அரசாங்கம் பங்குதாரராக ஏற்றுகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆகவே இது குறித்து அமைச்சரவை தீர்மானம் ஒன்றும் எடுக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்படும் வேளையில் அவை குறித்தும் ஆராய வேண்டிய நிலைமை உருவாகின்றது. ஹிஸ்புல்லாஹ் மற்றும் முதலீட்டு சபை அதிகாரிகள், இலங்கை வங்கி அதிகாரிகள் தெரிவுக்குழு முன்னிலையில் விசாரிக்கப்பட்டனர். இது குறித்து இறுதி அறிக்கை வரும் வரையில் காத்திருக்க வேண்டும். அத்துடன் அமைச்சரவை தீர்மானம் எடுக்கும் நிலையில் இந்த நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றார்.
ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்
vidivelli