புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுவது தனியொரு இனத்தை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல. இது நாட்டின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினையாகும். ஆனால், “கொழும்பில் முஸ்லிம்களே பெருமளவில் வாழ்வதால் அவர்களே அதிகளவில் குப்பைகளை வெளியேற்றுகிறார்கள். எனவே, அந்தக் குப்பைகளை முஸ்லிம் பிரதேசமொன்றுக்கே கொண்டுசெல்ல வேண்டும்” என்றுகூறி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக இப்பிரச்சினையை இனவாத மயப்படுத்துகின்றார் என்று சூழலியலாளர் ஷஹீட் மொஹமட் முபாரக் தெரிவித்தார்.
புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாகப் போராடிவரும் சூழலியலாளர்கள் உள்ளடங்கிய குழுவினரால் கடந்த புதன்கிழமையன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் 30 ஆம் திகதி பிரதிவாதிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்துத் தொடர்ச்சியாகப் போராடி வருபவரும், வழக்கைத் தாக்கல் செய்தவருமான சூழலியலாளர் ஷஹீட் மொஹமட் முபாரக்கிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது,
புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுவது என்பது குறித்தவொரு இனத்தை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல. இது நாட்டின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினையாகும். ஆனால் பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக, “கொழும்பில் முஸ்லிம்களே பெருமளவில் வாழ்கின்றனர். எனவே, அவர்களே அதிகளவில் குப்பைகளை வெளியேற்றுகிறார்கள். அந்தக் குப்பைகளை முஸ்லிம் பிரதேசமொன்றுக்கே கொண்டுசெல்ல வேண்டும்” என்றுகூறி இதனை இனவாதமயப்படுத்துகின்றார். ஆனால் குப்பைகளைக் கொட்டுவதற்குத் தீர்மானித்திருக்கின்ற பிரதேசத்தில் வாழ்பவர்கள் 98 சதவீதமானவர்கள் சிங்களவர்கள் என்பதே உண்மையாகும்.
தற்போது அமைச்சர் சம்பிக்க ரணவகவின் உத்தரவின் கீழ் செயற்படும் சிலர் பணமோ அல்லது வேறு வசதிகளோ வழங்குவதாகக்கூறி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிராகப் போராடுபவர்களை அடக்குவதற்கு முற்படுகின்றார்கள். கொழும்பிலிருந்து நாளாந்தம் 26 கொள்கலன்களில் சுமார் 1200 மெட்ரிக் தொன் கழிவுகளை அருவக்காலு பிரதேசத்தில் கொட்டுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகளும், உடலியல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் நோய்களும் ஏற்படும்.
இந்நிலையிலேயே நாங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். அவர்கள் எமக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றார்.
vidivelli