தந்தை இறந்துவிட்டதால் நான்கு வயதுச் சிறுமியின் பராமரிப்பு தொடர்பில் எழுந்த முரண்பாட்டையடுத்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களின் இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான இட்லிப்பிலுள்ள நிர்வாகம் அச்சிறுமியை அவரது பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த தாயிடம் கடந்த திங்கட்கிழமை ஒப்படைத்தது.
இளம் சிவப்பு நிற மேலங்கியொன்றை அணிந்துகொண்டு கையில் கரடி பொம்மை பரிசினையும் சுமந்தவாறு துருக்கிய எல்லையிலுள்ள தனது தாயை சந்திப்பதற்காக அழைத்து வரப்படுவதை ஏ.எப்.பி. ஊடகவியலாளர் ஒருவர் நேரில் கண்டுள்ளார்.
இந்தக் கையளிப்பு சிரியாவின் முன்னாள் அல்-–கைதாவுடன் தொடர்புபட்ட கிளர்ச்சிக்காரர்களால் வழிநடத்தப்படும் சக்திவாய்நத ஹயாத் தஹ்ரீர் அல்–-ஷாம் அமைப்பின் சிவில் கிளையினரால் மேற்பார்வை செய்யப்பட்டது.
யஸ்மின் நேற்று அவரது பெல்ஜிய நாட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள அவரது பாதுகாவலர்கள் மற்றும் அவரது தாயாருக்கும் இடையேயான முரண்பாடு தீர்க்கப்பட்டதையடுத்து இவ்வொப்படைப்பு இடம்பெறுகின்றது என நிர்வாகத்தின் தலைமை அதிகாரி பவாஸ் ஹிலால் தெரிவித்தார்.
துருக்கியிலிருக்கும் அவரது தாயாரிடம் சிறுமியை கையளிக்குமாறு துருக்கி தரப்பிலிருந்து எம்முடன் தொடர்பு கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த தாய், தனது மகள் அவரது தந்தையின் இறப்பின் பின்னர் தன்னாலேயே பாராமரிக்கப்பட வேண்டுமென முறையீடு செய்திருந்தார் என கிளர்ச்சிக்காரர்களின் நிருவாகப் பிரிவின் மற்றுமொரு உறுப்பினரான இப்ராஹிம் ஷாஷோ தெரிவித்தார்.
சிறுமியின் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அவரது நண்பர்களால் யஸ்மின் பராமரிக்கப்பட்டு வந்தார் எனத் தெரிவித்த ஷாஷோ, அந்த நண்பர்கள் யார் என்ற விபரங்களை வெளியிடவில்லை.
நீதித்துறை, குறித்த வழக்கு தொடர்பில் ஆராய்ந்தது. பின்னர் அந்தத் தாயின் பக்கமே நியாயம் இருப்பதைக் கண்டறிந்ததென சிறுமியை புகைப்படம் எடுப்பதற்காக ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அகன்ற கண்களையுடைய அச்சிறுமியினை அழைத்துவந்த தாடிவைத்த நபர் தெரிவித்தார்.
சிறுமியின் தந்தை ஒரு போராளியா என்பது தொடர்பிலோ அல்லது அவர் எந்தப் பிரிவில் இருந்தார் என்பது தொடர்பிலோ எவ்வித கருத்துக்களையும் அதிகாரிகள் வெளியிட வில்லை. இது தொடர்பில் பல்கேரிய அல்லது துருக்கிய அதிகாரிகள் எவ்வித உறுதிப்படுத்தல்களையும் வெளியிடவில்லை.
-Vidivelli