முகவர்களால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ள 123 யாத்திரிகர்கள்
பணம் செலுத்தியும் ஹஜ் செல்ல முடியாத நிலை; இறுதி விமானம் இன்று
ஏ.ஆர்.ஏ. பரீல்
இவ்வருட ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹஜ் முகவர்களிடம் உரிய கட்டணங்களைச் செலுத்தி ஹஜ் பயணத்துக்குத் தயாரான நிலையிலுள்ள 123 ஹஜ் யாத்திரிகர்களை இரண்டு ஹஜ் முகவர்கள் இறுதி நேரத்தில் ஏமாற்றியுள்ளதால் அவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
இவர்களில் 30 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள் நேற்றுமாலை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை முற்றுகையிட்டு முறைப்பாடுகளை முன்வைத்தனர். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலீக் ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள ஹஜ் பயணிகள் உதவிப் பணிப்பாளர் அன்வர் அலியிடம் நியாயம் கோரினார்கள்.
123 ஹஜ் யாத்திரிகளில் 8 ஹஜ் யாத்திரிகர்கள் ஒரு ஹஜ் முகவரிடம் ஹஜ் கட்டணங்களைச் செலுத்தியுள்ள நிலையில் அவர்கள் செலுத்திய கட்டணங்கள் அவர்களை ஹஜ் கடமைக்கு அழைத்துச் செல்லும் ஹஜ் அனுமதிப்பத்திர உரிமையாளரான மற்றுமோர் ஹஜ் முகவருக்கு குறிப்பிட்ட முகவரினால் வழங்கப்படவில்லை. இதனால் குறிப்பிட்ட 8 ஹஜ் யாத்திரிகர்களின் பயண ஏற்பாடுகளைச் செய்ய முடியாது என ஹஜ் அனுமதிப்பத்திர உரிமையாளரான ஹஜ் முகவர் மறுத்துள்ளார். இந்தப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நீண்டநேரம் இடம்பெற்றாலும் தீர்மானம் எட்டப்படவில்லை. ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து அறவிடப்பட்ட கட்டணத்தை அனுமதிப்பத்திரம் கொண்ட முகவரிடம் செலுத்துவதாக குறிப்பிட்ட ஹஜ் முகவர் உறுதியளிக்கவில்லை. இதனால் 8 ஹஜ் யாத்திரிகர்களையும் பணம் பெற்றுக்கொண்ட ஹஜ் முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்று புதன்கிழமை கடைசி இரண்டு ஹஜ் விமானங்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளன. இன்று காலையிலும் மாலையிலும் புறப்பட்டுச் செல்லவுள்ள விமானங்களில் அவர்கள் பயணிப்பதற்கான விமான டிக்கட் பெற்றுக் கொள்ளப்படாவிட்டால் அவர்களது ஹஜ் யாத்திரை தடைப்படும்.
இதேவேளை, மேலும் 115 ஹஜ் யாத்திரிகர்கள் நேற்று மாலைவரை உரிய விமான டிக்கட் வழங்கப்படாது ஒரு ஹஜ் முகவரினால் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹஜ் முகவருக்கு உரிய கட்டணங்களை செலுத்தியிருந்தாலும் நேற்று மாலைவரை சவூதி அரேபியா விமானத்தில் பயணிப்பதற்கான விமான டிக்கட்டுக்குப் பணம் வழங்கப்படவில்லை. இதனால் சவூதி அரேபிய விமான சேவை விமான டிக்கட்டுகளை விநியோகிக்கவில்லை.
இதனால் விமான டிக்கட்டுகள் நேற்று மாலை வரை வழங்கப்படாததால் ஹஜ் யாத்திரிகர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து பயணத்தை மேற்கொள்ள வுள்ளவர்கள் ஆவார்கள். இச்செய்தி எழுதப்படும்வரை பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தீர்வு வழங்கப்படவில்லை. திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அன்வர் அலியைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
vidivelli
These innocents cheated by NM TRAVELS.
This company name should be published . otherwise these corrupted businessmen will not learn the lesson