புர்கா-நிகாப் நிரந்தர தடை வரக்கூடாது

அமைச்சர் ஹக்கீம் திட்டவட்டம்

0 720

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்­தர தடை­யுத்­த­ரவு வரக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் நாங்கள் இருக்­கிறோம். பிராந்­தி­யத்தில் முதன்­மு­றை­யாக இலங்­கையில் மாத்­திரம் இந்த சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்கு அவ­சி­ய­மில்லை. நிரந்தர தடைக்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­்டபோது, அதற்­கான மாற்­று­வழி குறித்து தீர்­மா­னிப்­ப­தற்கு ஒரு­வாரம் கால அவ­காசம் கோரி­யி­ருக்­கிறேன். அதற்குள் இதற்­கான நிரந்­தரத் தீர்­வு­கு­றித்து நாங்கள் ஒரு முடி­வுக்கு வர­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ளனம் ஏற்­பாட்டில் நேற்­று­முன்­தினம் தெஹி­வளை முஹைதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற, முஸ்­லிம்­களின் உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கான மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது; ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்­குதல் என்­பது வெளிச்­சக்­தி­களின் சதியின் ஒரு வெளிப்­பாடு. அதில் பக­டை­க­ளாகப் பாவிக்­கப்­பட்­ட­வர்கள் ஒரு கூலிப்­ப­டை­யினர். இந்த தீவி­ர­வாதம் வெளிப்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றிகள் விட­யத்தில் நாங்கள் சிறிது அசட்­டை­யாக இருந்­து­விட்டோம். ஆனால், ஜம்­இய்­யதுல் உலமா ஜன­வரி மாதத்­தி­லேயே இது­ கு­றித்து அபாய அறி­விப்பை விடுத்­தி­ருந்­தது.

பயங்­க­ர­வா­தத்­துக்கும் இஸ்­லாத்­துக்கும் முடிச்­சுப்­போ­டு­வ­தற்கு எத்­த­னிப்­ப­வர்கள், முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மைகள் மீது கை வைப்பதற்கு முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த விட­யங்­களைப் பார்த்து பதற்­றப்­ப­டு­வதை நாங்கள் முதலில் நிறுத்­த­வேண்டும். இஸ்லாம் வளர்ந்­த­மைக்கு பிர­தான காரணம் சகிப்­புத்­தன்­மை­யாகும். ஒரு­சில பித்­த­லாட்­டக்­கா­ரர்­களின் செயற்­பா­டு­க­ளினால் நாங்கள் எல்­லா­வற்­றையும் இழந்­து­வி­டுவோம் என்ற மனப்­பாங்கை கைவி­ட­வேண்டும்.

பல்­லின சமூ­கங்கள் வாழும் நாட்டில் எங்­க­ளது உரி­மை­க­ளுக்­காக அத்­தனை பலங்­க­ளையும் பிர­யோ­கித்துப் போராட வேண்டும். இந்தப் போராட்டம் அர­சியல், ஆன்­மீக, தொழில்சார் ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். தெளி­வான முறையில் பேசு­வ­தன்­மூலம் இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணலாம் என்­பதில் நாங்கள் பூரண நம்­பிக்­கை­கொள்ள வேண்டும்.

அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பெ­டுத்த மறுநாள் நடை­பெற்ற முத­லா­வது அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில், நிகாப் மற்றும் புர்கா உடையை நிரந்­த­ர­மாக தடை­செய்­வ­தற்­கான உத்­த­ரவை அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள சமர்ப்­பித்­தி­ருந்தார். அவ­ச­ர­கால சட்டம் தளர்த்­தப்­பட்டால் நிகாப், புர்கா தடை இல்­லாமல் போய்­விடும். அதன்­பின்னர் நாட்­டி­லுள்ள பேரி­ன­வாத அமைப்­புகள் அதை தூக்­கிப்­பி­டித்து பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தலாம் என்ற அச்­சத்தில் அதை நிரந்­த­ர­மாக தடை­செய்­வ­தற்கு அர­சாங்கம் முனைப்புக் காட்­டு­கி­றது.

குறித்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை நான் வாசித்துப் பார்த்­தபின், இந்தப் பிராந்­தி­யத்தில் நிகாப், புர்கா ஆடை­களை தடை­செய்யும் முத­லா­வது நாடாக இலங்கை வரு­வ­தற்கு எந்த தேவை­யு­மில்லை என்­பதை நான் சுட்­டிக்­காட்­டினேன். ஜனா­தி­ப­திதான் இந்த விட­யத்தை அவ­ச­ரப்­ப­டுத்­து­வ­தாக தலதா அத்­துக்­கோ­ரள சொன்னார். நான் ஜனா­தி­ப­தி­யி­டமும் விட­யத்தை எடுத்­துக்­கூறி, சம்­பந்­தப்­பட்ட தரப்­பிடம் பேசி மாற்­று­வழி குறித்து தீர்­மா­னிப்­ப­தற்கு ஒரு­வாரம் கால­அ­வ­காசம் கேட்­டி­ருக்­கிறேன். இந்த சட்­ட­மூலம் குறித்தும் நான் பிர­த­ம­ரிடம் சில விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறேன்.

இந்த நெருக்­க­டி­யான கால­கட்­டத்தில் முஸ்லிம் பெண்­களின் உரிமை­க­ளுக்கும் கண்­ணி­யத்­துக்கும் சில சோத­னைகள் வரலாம். இந்த சூழ்­நி­லையில் முகம் மூடு­வதை தற்­கா­லி­க­மாக தவிர்ந்­து­கொள்­ளு­மாறு ஜம்­இய்­யதுல் உல­மாவும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் பெண்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யி­ருந்­தன. நிகாப், புர்­கா­வுக்கு நிரந்­தர தடை­யுத்­த­ரவு வரக்­கூ­டாது என்­ப­துதான் எங்­களின் நிலைப்­பாடு. தனி­ம­னித உரி­மை­களில் கைவைக்க முடி­யாது. அது அடிப்­படை மனித உரிமை மீற­லா­கவே கரு­தப்­பட வேண்டும்.

முஸ்லிம் விவா­க, விவா­க­ரத்து சட்­டத்தில் இரு அறிக்­கைகள் இருப்­ப­தா­கவும், எங்­க­ளுக்குள் உள்­மு­ரண்­பாடு காணப்­ப­டு­வ­து­மான தோற்­றப்­பாடு வெளியில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், இருக்­கின்ற ஓர் அறிக்­கையில் சில விவ­கா­ரங்­களில் உடன்­பாடு காணப்­ப­டாமல் இருப்­பதே உண்­மை­யாகும். முன்­வைக்­கப்­படும் மாற்றுத் தீர்­வு­களில் ஷரீஆ சம்­பந்­த­மான பிரச்­சி­னைகள் குறித்து நாங்கள் கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்தி வரு­கிறோம். இதில் ஓர் இணக்­கப்­பாட்­டுக்கு வந்து, இதனை சட்­ட­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான முயற்­சி­களை நாங்கள் மேற்­கொண்டு வரு­கிறோம்.

முஸ்லிம் விவா­க, விவா­க­ரத்து சட்டம் முழு­வதும் ஷரீஆ அல்ல. அதற்கு முர­ணான சில விட­யங்­களும் அதில் காணப்­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக, இஸ்­லாத்தில் இல்­லாத சீதனம் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதை இல்­லாமல் செய்­ய­வேண்டும். சமூ­கத்தில் செய்­யப்­பட்ட சில வழக்­காறு விட­யங்­க­ளையும் உள்­வாங்கி செய்­யப்­பட்ட இந்த சட்­டத்தில், இன்னும் ஓரிரு விட­யங்கள் மாத்­தி­ரமே இணக்­கப்­பா­டில்­லாமல் இருக்­கி­றது. இவற்­றுக்கும் விரைவில் விடை­கா­ணலாம் என்ற நம்­பிக்­கை­யுடன் இருந்­து­கொண்­டி­ருக்­கிறோம்.

மத்­ர­சாக்­களை நெறிப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­களை அர­சாங்கம் மேற்­கொள்­வ­தற்­கான சட்டவாக்கம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. மத்ரசாக்களில் காணப்படும் சமூகம் சார்ந்த பலவீனங்களை களைவதுதான் இதன் நோக்கமாகும். மத்ரசாக்களிலிருந்து வெளியேறும் ஆலிம்கள் தரமானவர்களாவும் தொழில்பயிற்சி பெற்றவர்களாவும் இருப்பதற்கான திட்டங்களை அரசாங்கத்தினூடாக செய்வதற்கு துறைசார்ந்தவர்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

இக்கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் நாடளாவிய ரீதியிலிருந்து வருகைதந்த பெருந்திரளான சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.