சம்மாந்துறை செங்கல் கிராமத்திலும், கல்முனை சாய்ந்தமருதுவிலும் இயங்கிய வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இரு இடங்களை கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பொலிஸார் கண்டு பிடித்தனர். இவை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்படும் தேசிய தௌஹீத் அமைப்புக்குச் சொந்தமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிந்தவூரில் உள்ள ஆயுத களஞ்சிய நிலையம் பாதுகாப்புத் தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அங்கிருந்த தீவிரவாதிகளால் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. அதன்போது தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் எனக் குறிப்பிடப்படும் ஸஹ்ரான் ஹாஷிமின் இரு சகோதரர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்பில் படுகாயமடைந்திருந்த நிலையில் ஸஹ்ரானின் மனைவியும் அவரது இளையமகளும் பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்பட்டனர்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைப்போன்று தேசிய தௌஹீத் ஜமாஅத்தால் மற்றும் இருவேறு பயங்கரத் தாக்குதல்கள் தொடுக்கப்படவிருந்தமை மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளது. மேற்படி இரு வெடிபொருட் களஞ்சிய நிலையங்களும் கண்டறியப்பட்டதனாலேயே இடம்பெறவிருந்த தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அரச புலனாய்வுத் துறை அதிகாரியொருவருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் மூலமே மேற்படி களஞ்சிய இருப்பிடங்கள் கண்டறியப்பட்டன.
வெடிபொருட் களஞ்சியசாலைகள் பற்றி லொறிச் சாரதியொருவரே இரகசியப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பல இடங்களில் தாக்குதல் தொடுக்கப்பட்டு, பாரிய உயிர் அழிவுகள் தடுக்கப்படக் காரணமாக இருந்த லொறி சாரதி உண்மையிலேயே ஒரு தேசிய வீரன்தான்.
பாரிய அழிவிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்றிய அந்த வீரன் நிட்டம்புவையைச் சேர்ந்த ஜனககே சாந்தலால் என்பவராவார். இவரது இப்பணியை மேலானதாகக் கருதி இவருக்கு நன்கொடை வழங்கி கௌரவிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்கிரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்தார்.
இவ்வேண்டுகோள் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சாரதி சாந்தலாலுக்கு கடந்த ஜூலை 24 ஆம் திகதி ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் வைத்து ஜனாதிபதி 50 இலட்சம் ரூபா பணத்தினைக் கையளித்தார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சாந்தலாலுடன் மனைவியும் அவரது மூன்று பிள்ளைகளும் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்திருந்தனர். மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர். சாந்தலால் சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தன்னை இனம் காட்டிக் கொள்வதற்கு தான் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை என்று கூறியவாறு அவர் இது விடயமாக மேற்கொண்ட நடவடிக்கைகளை விபரித்தார்.
நான் எனது லொறியை கெப் சேவையில் இணைத்துள்ளேன். நான் நிட்டம்புவை யிலுள்ள எனது வீட்டில் இருக்கும் போது ஏப்ரல் 9 ஆம் திகதி அந்த கெப் சேவையிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.
நீர்கொழும்பிலிருந்து அம்பாறைக்குப் போவதற்கான ‘ஹயர்’ ஒன்று இருப்பதாகவும் நீர்கொழும்புக்குப் போய் அந்த ஹயரை எடுக்கும்படியே அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. ஹயருக்குரியவரின் தொலைபேசி இலக்கமும் தரப்பட்டது. கிலோமீற்றர் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் கட்டணம் பேசித்தீர்மானிக்கப்பட்டது. உரப்பசளை வகைகள் கொண்டு செல்வதென்றே ஆரம்பத்தில் கூறப்பட்டது.
ஏப்ரல் 9 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கிரிபத்கொடையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிப்புறப்பட்டேன். நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலய வீதிக்கு வரும்படி தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு வருவதற்கு எனக்குப் பாதை தெரியாது என்றேன். உடனே நீர்கொழும்பு நவலோக்க வைத்தியசாலை அருகே நிற்கும்படி கூறிஇ ஒரு மோட்டார் சைக்கிள் எனக்கு வழிகாட்டியாக வந்தது. அதனைப் பின் தொடர்ந்து கொங்கிறீட் வீதி வழியே சென்று இரு மாடிகள் கொண்ட வீட்டின் முன் எனது லொறியை நிறுத்தினேன். அப்போது இரவு 11.00 மணியிருக்கும்.
அவ்வீட்டில் 5 – 6 வாலிபர்களுடன் வயது முதிர்ந்த ஒருவரும் இருந்தார். நான் வீட்டின் உள்ளே சென்றதும் ஈச்சம்பழப் பெட்டியொன்று எனக்குத் தரப்பட்டது. பசியால் அதனைப் பிரித்துச் சாப்பிட முனைந்தேன். அப்போது, அதனை எனது வீட்டுக்குக் கொண்டு செல்லும்படி கூறியவாறு பிறிதொரு பாத்திரத்தில் போடப்பட்ட ஈச்சம்பழங்கள் தரப்பட்டன. அவற்றைச் சாப்பிட்டேன்.
நீண்ட தூரப்பயணம் என்பதால் சற்று உறங்கும்படி கூறினார்கள். இது விடயத்தில் நான் நன்கு பழக்கப்பட்டவன் என்று கூறி நான் தூங்கவில்லை.
வொஷின் மெஷின், பிரிஜ், கேஸ் சிலிண்டர், கேஸ் அடுப்பு, கதிரைகள், பிளாஸ்ரிக் பெரல்கள் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் லொறியில் ஏற்றினர். பிளாஸ்ரிக் பெரலில் என்ன உள்ளது என வினவினேன். அவற்றில் சல்பூரிக் அமிலம் இருப்பதாக ஒருவர் கூறினார். தாம் தங்க நகைக் கடையொன்று ஆரம்பிக்கப் போவதாகவும் அதற்கு சல்பூரிக் அமிலம் தேவைப்படுவதாகவும் விளக்கமளித்தனர். பிளாஸ்ரிக் பெரல்கள் நன்கு பாரம் கொண்டவையாகக் காணப்பட்டன. ரெஜிபோம் பெட்டிகளும் ஏற்றப்பட்டன. மேற்படி பொருட்களால் லொறி நிரம்பிவிட்டது.
அவ்வீட்டிலிருந்தவர்களில் நல்ல தோற்றமுடைய ஒருவரும் லொறியில் ஏறிக் கொண்டார். லொறி பயணத்தை ஆரம்பித்தது. கட்டானை பொலிஸ் நிலையத்தையும் தாண்டியது. அப்போது லொறியில் வந்தவரும் நானும் கதைத்தவாறு பயணித்துக் கொண்டிருந்தோம். நான் அவரின் வயதைக் கேட்டேன். 43 என்றார். நானும் அதே வயதுடையவன் என்றேன். பயணத்தின் இடையே பொலன்னறுவையூடாக மட்டக்களப்புக்கு செல்வோம் என்றார் அவர். மஹியங்கனை வழியாக அம்பாறையை அடைவதுதான் சரியான பாதை என்றேன் நான். கல்முனைக்கும் செல்ல வேண்டியுள்ளதால், பொலன்னறுவை வழியாகச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். நான் எமது கெப் சேர்விஸுக்கு இது குறித்து அறிவித்து விட்டு அவர் கூறியவாறே பயணித்தேன். எங்கள் உரையாடல் தொடர்ந்தது. இருவரதும் வாழ்க்கை வரலாறுகள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. லொறியில் வந்தவர் குறிப்பிடுகையில், அவர் முதலில் புடைவைக் கடையொன்றை நடத்தி அதன் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். இவரது வளர்ச்சி கண்ட கடைக் கட்டிட உரிமையாளர் பொறாமை கொண்டு கடையைக் கேட்டுள்ளார். அதனால் கடையை ஒப்படைத்து விட்டு தங்கநகை தயாரிக்கும் தொழிலில் இறங்கியுள்ளார். அதிலும் விருத்தியடைந்துள்ளார். இலங்கையிலுள்ள பெரிய நகை வியாபாரக் கடைகளுக்கும் தானே நகைகள் தயாரித்துக் கொடுப்பதாகவும் அவர் பெருமையாகக் கூறினார். மேலும் தனக்குக் கீழ் தொழில் புரிபவர்களுக்கும் இரண்டு மூன்று இலட்சம் ரூபா அளவில் மாதாந்தம் கொடுப்பனவு வழங்குவதாகவும் கூறினார்.
அதி உச்ச சம்பளம் அல்லவா கொடுக்கிறீர்கள் என்று நான் ஆச்சரியத்துடன் கூறினேன். அவர்கள் செய்கிற நகைகளுக்குரிய கமிஷனாகவே தான் மேற்படி பாரிய தொகை வழங்கப்படுகிறது. இப்போது நாம் சம்பாதித்தது போதும். எமது ஊழியர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகவே அவர்களை நன்கு கவனித்து வருகிறேன் என்று அவர் கூறினார்.
நான் எனது நிலைமையையும் எடுத்துக்கூறினேன். வியாபாரம் செய்யப்போய் நான் நாலாபுறங்களிலும் கடனாளியாகிவிட்டேன். மிகவும் கஷ்டத்துடனே காலம் கடத்தி வருகிறேன். லொறிக்குரிய பினான்ஸ் பணத்தைச் செலுத்தவும் கூட சிரமப்படுகிறேன் என்றெல்லாம் எனது நிலையையும் எடுத்துரைத்தேன். இவ்வாறு கதைத்தவாறு பயணித்து, மறுநாள் 10 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் கதுருவெலையை அடைந்தோம். அங்கு ஒரு பள்ளியருகே வாகனத்தை நிறுத்தும்படி கூறினார். அவர் பள்ளிக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு மீண்டும் வந்தார். அங்கிருந்து மட்டக்களப்பை நோக்கிப் போய்க்கொண்டிருக்கையில், பெரிய காட்டு யானையொன்று பாதைக்குக் குறுக்கே நின்றது. நான் சிரமத்துடன் பிரேக் அடித்து லொறியை நிறுத்தினேன். யானையின் அருகேதான் வாகனம் போய் நின்றது. ஆனால் அது உதைவிட்டிருந்தால் வாகனமும் நாமும் நாசம்தான். ஒருவாறு அது பாதையை விட்டகன்றதும் தப்பினோம் பிழைத்தோம் என்றவாறு பயணத்தைத் தொடர்ந்தேன். காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பை அடைந்தோம்.
அங்கு தனியார் வங்கியொன்றுக்குச் சென்று பணம் எடுத்து வந்தார். தொடர்ந்து கல்முனையை நோக்கிப் பயணித்தோம். கல்முனைக்குப் போகும் பாதை எனக்கும் தெரியவில்லை. அவருக்கும் தெரியவில்லை. வீதியில் ஒவ்வொருவரிடமும் பாதையைக் கேட்டவாறே சென்றோம். பின்னர் ஒருவாறு சம்மாந்துறையை அடைந்தோம். அங்கு பள்ளிவாசல் ஒன்றின் அருகே வாகனத்தை நிறுத்தினேன். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த முஸ்லிம் ஒருவருடன் சுமார் 10 நிமிடங்கள் வரையில் லொறியில் வந்தவர் கதைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளைப் பின் தொடருமாறு கூறவே நான் அவ்வாறு சென்று ஒரு வீட்டை அடைந்தேன். அங்கு அழகான பெண் பிள்ளையும் வயதான தாய் ஒருவரும் இருந்தனர். அப் பெண்பிள்ளையே வீட்டு முன் கேட்டைத் திறந்தார். இரசாயன திரவ பெரல்கள், உரப் பசளை மூடைகள் போன்ற பாதிப் பொருட்கள் அங்கு இறக்கப்பட்டன. அங்கு கைகளைக் கழுவியதன் பின்னர் கல்முனைக்குப் போனோம். அப்போதும் கைப்பேசியில் பெண்ணொருவருடன் மிகவும் அன்பொழுகக் கதைப்பதை என்னால் உணர முடிந்தது. கல்முனையிலும் ஒரு வீட்டருகே நிறுத்தும்படி பணிக்கப்பட்டேன். அங்கும் வயதான ஒரு தாய் இருந்தார். லொறியில் எஞ்சியிருந்த எல்லாப் பொருட்களும் அங்கு இறக்கப்பட்டன. இது வரை 360 கிலோமீற்றர் பயணித்திருந்தோம். வாகனக் கட்டணமாக 28000 ரூபா எனக்குத் தரப்பட்டது. என்னுடன் லொறியில் வந்தவர் மோட்டார் சைக்கிளில் வந்தவருடன் பயணமாக நானும் நிட்டம்புவையை நோக்கித் திரும்பினேன்.
நான் திரும்பி வரும்போதும் நன்றிக் கடனுக்காக என்னுடன் வந்தவருடன் தொலைபேசியில் பல முறை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் பதிலளிக்கவேயில்லை. வீட்டுக்கு வந்த பின்னரும் நான் வீடு வந்ததை அறிவிக்கத் தொடர்பு கொண்டபோதும் பதிலளிக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னரான தனது மனோ நிலையை சாரதி சாந்தலால் கூறுகையில்,
ஏப்ரல் 21 ஆம் திகதி காலையில் எனது நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. கொழும்பில் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடக்கின்றன. கொழும்புக்கு வரவேண்டாம் என்று நண்பர் தொலைபேசி மூலம் தெரிவித்தார். உடனே நான் வீட்டுத் தொலைக்காட்சியில் நிகழ்வுகளைப் பார்த்தேன். நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கட்டுவாபிட்டிய, மட்டக்களப்பு ஆகிய பகுதி தேவாலயங்களில் குண்டு வெடிப்புக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானித்தேன். நான் கட்டுவாபிட்டிக்குச் சென்று பொருட்கள் ஏற்றிச்சென்ற சம்பவம் என் நினைவுக்கு வந்தது. அங்கு போய்ப் பார்த்து வருவோமா என்று என் மனம் தூண்டியது. என்றாலும் பயம். அத்துடன் என் மனைவியும் என்னைத் தடுத்தார். பின்னர் நொச்சியாகமயில் அமோனியா திரவத்துடன் ஒருவர் கைதான தகவல் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. நான் லொறியில் ஏற்றிச்சென்ற சல்பூரிக் அமிலம் குறித்து எனது சிந்தனை பலமாக இயங்கியது. குண்டுகள் தயாரிக்கத் தானோ இவை கொண்டு செல்லப்பட்டன என்ற சந்தேகம் என்னை ஆட்கொண்டது.
இது குறித்து பொலிஸாரிடம் முறையிட்டால் என்னைக் கைது செய்வார்களோ என்ற பீதி இதற்கு மத்தியில் வெயாங்கொடை நைவலயில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிரிவர்தன என்பவர் விமானப் படையிலிருந்து, ஓய்வு பெற்றவர். இவர் உட்பட இதர நண்பர்களிடம் விடயத்தை முன்வைத்தேன். அதன் மூலமே அவர்களால் இரகசியப் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரச புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னிடம் அடியிலிருந்து நுனிவரையிலும் விபரங்களைக் கேட்டறிந்து செயலில் இறங்கினார்.
நான் பொருட்கள் இறக்கிய வீடுகளைக் காண்பிப்பதற்காக என்னை கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். நான் கூறிய பாதைத் தடயங்களை வைத்து சிரமங்களுக்கு மத்தியில் குறித்த வீடுகளை அடையாளம் காட்டினேன். அதன் மூலமே அங்கிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. எனது இந்த உதவிக்காகவே ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் 50 இலட்சம் ரூபா அன்பளிப்புக்கிடைத்தது என்று சாந்தலால் கூறினார்.
சிங்களத்தில்: ஸ்ரீனாத் பிரசன்ன ஜயசூரிய
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
நன்றி: லங்காதீப வார இதழ்
vidivelli