மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் வருவது பற்றி நாம் வீணாக அஞ்சத் தேவையில்லை
பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயில்
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாரந்தோறும் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) தொகுத்து வழங்கும் ‘மஜ்லிஸ் அஷ் ஷூரா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயில், இலங்கையில் மத்ரஸா கல்வி முறைமையில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை முக்கியத்துவம் கருதி ‘விடிவெள்ளி’ வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.
தொகுப்பு : எம்.ஏ.எம். அஹ்ஸன்
மத்ரஸா கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விடயத்தை பதற்றத்துடனோ உணர்ச்சிவசப்பட்டோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதோ ஒரு வெளிச்சக்தியின் தலையீட்டினால்தான் மத்ரஸா கல்வியில் மாற்றம் ஏற்படப்போகிறது என்ற அபிப்பிராயம் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மத்ரஸாக்கள் 1000 வருடங்களாக இயங்கி வருகின்றன. அது எங்களது சொத்து. அதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்ற பிடிவாதக்குரல் எழுவதற்கு மேற்சொன்ன பதற்றமும் உணர்ச்சிவசமுமேதான் காரணம் என நான் நினைக்கின்றேன்.
1000 வருடங்களாக மத்ரஸா கல்வி முறை முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மை. இந்த 1000 வருடத்திலும் முஸ்லிம்களின் மத்ரஸா கல்வி முறை முஸ்லிம்களின் அரசியல், சமூக , கலாசார தேவைகளுக்கு ஏற்றவாறு மாறி வந்திருக்கின்றது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த 1000 வருட கால கட்டத்தையும் 4 கட்டங்களாக பிரித்து குறிப்பிட்ட கால கட்டங்களில் மத்ரஸாக்களினுடைய அமைப்பு, இயக்கம் என்பன எவ்வாறு இருந்தன என்பது பற்றி சுருக்கமாக விளக்குகிறேன்.
முதலாவது கி.பி.12 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையான காலப்பகுதியாகும். அது இஸ்லாமியர்களின் ஆட்சிக் காலமாகும். இது சர்வதேச ரீதியாக முஸ்லிம்கள் ஆட்சி நிலவிய காலமாகும். இக்காலத்தில் இந்தியாவில், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் இஸ்லாமிய ஆட்சி காணப்பட்டது. இப்படியானதொரு காலப்பகுதியில் மத்ரஸா கல்வி முறை எப்படியிருந்தது என்பதை நாம் நோக்க வேண்டும். அப்போது மத்ரஸாக்கள் முக்கிய கல்வி நிலையங்களாக இருந்தன. உலக ரீதியான கல்வியும் மார்க்கக் கல்வியும் அங்கு கற்பிக்கப்பட்டன. இப்போது போல அன்று கல்வியானது மார்க்கக்கல்வி மற்றும் உலகக்கல்வி என்று கூறு போடப்படவில்லை.
மத்ரஸாக்களில் விஞ்ஞானம், வைத்தியம், வானியல், கட்டடக்கலை, சட்டம் என்பவற்றை கற்றவர்கள் உலகத்துக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் பொற்காலம் என்று அந்தக்காலத்தை சொல்வதற்கு மத்ரஸாக்களின் பங்களிப்பே காரணம். மத்ரஸா கல்வியின் பொற்காலம் என்று கூட அதைச் சொல்லலாம்.
அரபு மொழியில் அலி ஸீனா எழுதிய வைத்திய நூல் ஹிப்ரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இஸ்ரேல் போன்ற நாடுகளில் இன்னமும் உபயோகிக்கப்படுகிறது. அலி ஸீனா, அல் பராபி, இப்னு கல்தூன் போன்றோர் அரபியில் எழுதிய நூல்களை எமது உலமாக்கள் எத்தனை பேர் வாசித்து இருக்கின்றோம் என்பது எனக்குத் தெரியாது. அந்தக்காலத்தில் உலகக்கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரித்து நோக்காமல் வாழ்க்கைக்கு என்னவென்ன தேவையோ அத்தனைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
நீதிபதி வீரமந்திரி இஸ்லாமிய சட்டம் பற்றி ஒரு நூல் எழுதினார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான நூல்கள் இருந்த போது இஸ்லாமிய மத்ரஸாக்களிலே ஆயிரக்கணக்கான நூல்கள் இருந்ததாக அந்த நூலில் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தளவுக்கு முஸ்லிம்களிடம் அறிவு உயர்ந்த நிலையில் காணப்பட்டது. அந்தளவுக்கு மத்ரஸாக்களும் தரமுயர்ந்த நிலையில் காணப்பட்டன.
இரண்டாவது காலகட்டம் முஸ்லிம்களுடைய ஆட்சி முடிவடைந்து அதிகமான முஸ்லிம் நாடுகள் காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்த 1400-–1900 வரையான காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில் நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமையாகிவிட்டோம். அப்போது மேற்கத்தேய கலாசாரத்தையும் மிஷனரிக்கல்வி முறையையும் முஸ்லிம்கள் மீது திணித்தார்கள். அதனால் நாம் எமது சுய அடையாளத்தை இழந்தோம். எமது ஈமானை பாதுகாக்க நாம் மேற்கத்தேய கல்வியை புறக்கணித்தோம்.
பேராசிரியர் சுமதிபால இலங்கை கல்வி வரலாறு என்ற நூலிலே, இலங்கை முஸ்லிம்கள் 200 வருடங்களாக கல்வியில் பின்னடைந்து காணப்பட்டார்கள். ஏனென்றால் முஸ்லிம்கள் உலகக்கல்வியை காட்டிலும் மார்க்கக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தக்காலத்தில் முஸ்லிம்கள் மதம் மாறுவதை தடுக்க தமக்கென கல்வி நிலையங்கள் தேவைப்பட்டன. அதன்போதுதான் இலங்கையில் மத்ரஸாக்கள் ஏராளமாக அமைக்கப்பட்டதுடன் அதனை அமைப்பது ஒரு முக்கியமான தேவையாகவும் இருந்தது என்று எழுதியிருந்தார்.
மூன்றாவது காலகட்டமாக 1950 இற்கு பிற்பட்ட காலப்பகுதியைக் குறிப்பிடலாம். இது முஸ்லிம் நாடுகளும் இலங்கையும் சுதந்திரம் அடைந்த காலகட்டமாகும். இதன்போது இலங்கையில் மனசாட்சிச்சட்டம் என்ற ஒன்று வந்தது. அதில் எந்தவொரு பெற்றோருக்கும் தங்களது பாடசாலைகளில் தமது சொந்த மதம் தொடர்பான கல்வியை கற்பிக்க முடியும் என்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அதேநேரம் எந்தவொரு பிள்ளைக்கும் கிறிஸ்தவ மதம் பலாத்காரமாக கற்பிக்கப்படக் கூடாது என்ற சட்டமும் அமுல்படுத்தப்பட்டது. இதன்போது எங்களுக்கு முன்னர் இருந்த கஷ்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. அப்போது சித்திலெப்பை, ரி.பி.ஜாயா, ஏ.எம்.ஏ. அஸீஸ், சேர் ராஸிக் பரீத் போன்றோர் முஸ்லிம்களைத் தூண்டினார்கள். அவர்களின் தூண்டலினால் முஹம்மதிய (முஸ்லிம்) பாடசாலைகளை அமைக்கத் தொடங்கினோம். இவற்றின் செல்வாக்கினால் மத்ரஸாக்களின் அத்தியாவசியம் குறைக்கப்பட்டது.
இக்காலத்தில் தேசிய தலைவர்கள் தமது மக்களை மத ரீதியாக விழிப்புணர்வூட்ட முனைந்தனர். அதன் விளைவாக அநகாரிக தர்மபால போன்றோர் பௌத்த பாடசாலைகளையும் பொன்னம்பலம் இராமநாதன் போன்றோர் இந்துப் பாடசாலைகளையும் அமைத்தது போன்று சித்திலெப்பை போன்ற தலைவர்களும் தமது சமூகத்துக்காக முஸ்லிம் பாடசாலைகளை அமைத்தார்கள். அவ்வாறு அவர்கள் அமைத்த பாடசாலைகள் ‘முஹம்மதிய பாடசாலைகள்’ என்று அழைக்கப்பட்டன. இவை 1956 இற்கு பிற்பாடு முஸ்லிம் பாடசாலைகள் என்ற பெயர் பெற்றன.
இப்போது பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய கல்வி போதிக்கப்படுகின்றது. அதனால் மத்ரஸாக்களின் தேவை குறைந்து வருகிறது. மத்ரஸாக்களில் படித்தவர்கள் மாத்திரம்தான் குத்பா உரை நிகழ்த்த வேண்டும் அல்லது அங்கு படித்தவர்கள் மாத்திரம்தான் பத்வா கொடுக்க வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது. பேராசிரியர் குர்ஷித் அஹமத் இலங்கை வந்த போது தன்னை ஒரு மௌலவி என்று குறிப்பிட்டார். அதேவேளை அவர் ஒரு பொருளியல் விரிவுரையாளரும் கூட. அந்த கோணத்தில்தான் நாம் அனைவரும் பார்க்க வேண்டும். மத்ரஸாக்களில் படித்தவர்களை நாம் குத்பா ஓத மாத்திரம்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிடையாது. அவர்களும் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக வருவதில் தவறில்லை.
1960 இற்கு பிறகு பேசப்பட்ட விடயங்களுள் ஒன்றுதான் இஸ்லாமிய கல்விமயமாக்கம். நான் அந்த விடயத்துக்கு கொஞ்சம் முரண்பட்டவனாகவே இருந்தேன். ஏனென்றால் அனைத்து கல்வியையும் இஸ்லாமிய மயமாக்க முடியாது. வேண்டுமென்றால் ஒருங்கிணைக்க முடியும். உலகக் கல்வியையும் இஸ்லாமிய கல்வியையும் ஒன்றிணைத்து நோக்குவதுதான் அது. அதனை நாம் இஸ்லாமிய விஞ்ஞானம் என்று கூறுவோம். இதன் பின்னரே இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டன. இந்தோனேஷியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இவ்வாறான பல்கலைக்கழகங்கள் உள்ளன. உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒன்றிணைத்துச் செல்வதே இப்போதைய நடைமுறையாகும். இவ்வாறு செய்வதே சமூகத்தின் எழுச்சிக்கு காரணமாக அமைவதுடன் ஓதியவர்கள் சுயகௌரவத்துடன் வாழவும் வழிவகுக்கும்.
நான்காவது கட்டமாக 90 இற்கு பிற்பட்ட காலப்பகுதியைக் குறிப்பிடலாம். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள மத்ரஸாக்களில் இஸ்லாமிய இயக்கங்களுடைய தலையீடு அதிகமாக பரவியது. இதற்கு ஒருசில அரசியல் நகர்வுகளும் காரணமாக அமைந்துள்ளன. இதனால் மத்ரஸாக்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்துப் போனதுடன் அவற்றினுடைய தரமும் குறைந்து போனது. அப்படியானதொரு கால கட்டத்தில்தான் நாங்கள் இப்போது இருக்கின்றோம்.
நாட்டின் நடைமுறையிலுள்ள ஏனைய கல்விமுறைகளை மற்றாது ஏன் மத்ரஸா கல்விமுறையை மாற்றும்படி அரசு கோருகிறது என சில முஸ்லிம்கள் வினா எழுப்புகின்றனர். என்னைப்பொறுத்தவரை அவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பௌத்தர்களின் பிரிவெனாக் கல்வியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1980 இற்குப் பின்னர் பிரிவெனாக்களின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் கல்வி அமைச்சிடம் ஒப்படைத்து விட்டார்கள். தற்போது பிரிவெனாக்களின் முழு விடயங்களையும் அரசாங்கம்தான் பார்க்கின்றது. 1980 இல் இருந்து 2016 வரையான காலப்பகுதிக்குள் பிரிவெனாக்களின் பாடத்திட்டம் 10 முறைக்கு மேல் மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது. காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு அவை மாற்றப்பட்டுள்ளன.
பாலர் பாடசாலைகள் நடத்துவது தொடர்பாகவும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது. சாதாரணதரம் கூட சித்தியடையாதவர்கள் உளவியல் தெரியாதவர்கள் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கிறார்கள். இது தொடர்பாக ஆராய வேண்டும். அடுத்ததாக சர்வதேச பாடசாலைகள் தொடர்பாகவும் நாம் ஆராய்ந்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தவுள்ளோம். அவை வருமானத்தை மாத்திரம் எதிர்பார்த்த ஒரு துறையாக மாறி விட்டது. இது எமது நாட்டுக்கு ஆபத்து. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அந்தக்குழுவிலும் நான் அங்கத்தவராக இருக்கின்றேன்.
அத்துடன் நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறான தனியார் பல்கலைக்கழகங்கள் அவர்கள் நினைத்தவாறு நடந்து கொள்கின்றார்கள். இவை அனைத்தையும் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மத்ரஸாக்கள் தொடர்பான சட்டவரைபு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இது தொடர்பாக அமைச்சர்கள் தமது அபிப்பிராயங்களை தெரிவித்தார்கள். இதில் பெரும்பான்மையான அபிப்பிராயத்தின்படி புதிய சட்டங்கள் எதுவும் இன்றி இருக்கின்ற சட்டங்களை வைத்துக்கொண்டு மத்ரஸா கல்வியை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு இணங்கினர். கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் இது பற்றி நான் கலந்துரையாடினேன். அவர்கள் என்னிடம் இலங்கையில் இஸ்லாமிய கல்வியை போதிக்க 4 வகையான கல்வி நிலையங்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள். அஹதிய்யா, குர்ஆன் பள்ளிக்கூடங்கள் , ஹிப்ழு மத்ரஸாக்கள், கிதாப் மத்ரஸாக்கள் என்பவையே அவையாகும்.
அஹதிய்யா, குர்ஆன் பள்ளிக்கூடங்கள், ஹிப்ழ் மத்ரஸாக்கள் இவைபற்றி யாரும் வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கட்டாயக்கல்வி என்ற ஒரு விடயம் இருக்கின்றது. ஒவ்வொருவரும் 14 வயது வரை பாடசாலைக்கல்வியைக் கற்க வேண்டும் என்பதே அதுவாகும். இனிவரும் காலங்களில் இலங்கை கல்வி முறையில் பாலர் வகுப்பில் இருந்தே விஞ்ஞானம், கணிதம் தொழில்நுட்பம் போன்ற விடயங்கள் போதிக்கப்படவுள்ளன. அவற்றை நிச்சயமாக மத்ரஸாக்களால் செய்ய முடியாது. மத்ரஸாக்களில் அரபு மொழியை ஆழமாக கற்பிக்க வேண்டும். ஆனால் அரபு மொழி போதனா மொழியாக அமைய வேண்டும் என நாம் கேட்பது நாட்டின் கல்வி தொடர்பான கொள்கைகளில் சில சிக்கல்களை ஏற்படுத்தும்.
தற்போது மத்ரஸாக்களுடைய வெளிப்படைத்தன்மை பற்றி பெரும்பான்மை மக்களிடத்தில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாம் அந்த சந்தேகங்களை எளிதில் தீர்த்து வைக்க முடியாது. நாம் இதன் செயற்பாடுகளை முஸ்லிம் கலாசார திணைக்களம் அல்லாத பிறிதொரு திணைக்களத்திடம் ஒப்படைக்கும் போது பெரும்பான்மையினரின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். மத்ரஸா கல்வி செயற்பாடுகளும் இலகுவாகிவிடும்.
கல்வி அமைச்சின் கீழ் மத்ரஸாக்களை கொண்டுவர வேண்டும் என்றால் அரசாங்கம் மத்ரஸாக்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக செலவு செய்ய வேண்டும். இது பற்றி கல்வி அமைச்சில் நான் பேசிய போது அவற்றுக்கான போதுமானளவு நிதி தற்போது இல்லை என்று கூறினார்கள். ஆனால் பல மத்ரஸாக்களில் போதுமானளவு அல்லது தேவைக்கு அதிகமான மேலதிக வளங்களும் காணப்படுகின்றன. இருக்கின்ற உட்கட்டமைப்பு வசதிகளை நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்று நான் கூறினேன்.
சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்வதற்கு சில நியமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது பற்றி அறிக்கைகள் சமர்பிக்க 6 மாதங்கள் வழங்கப்படும். இரு வருடத்துள் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத பாடசாலைகள் மூடப்படும். சர்வதேச பாடசாலைகள் வெறும் வியாபார நோக்கில் செய்ய இடமளிக்க முடியாது. அங்கு போதுமானளவு உடகட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். அங்குள்ள ஆசிரியர்களுக்கு முறையான கல்வித் தகைமைகள் இருக்க வேண்டும். அங்கு கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள அளவு அவ்வாறு இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளை அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும். அதே போன்றுதான் மத்ரஸாக்களுக்கும் அவ்வாறு நிபந்தனைகள் உண்டு. இந்த நிபந்தனைகள் மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
மத்ரஸாக்களின் கலைத்திட்டத்தை பொறுத்தவரையில் அதில் முக்கிய பல மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அதில் முதலாவது மொழி தொடர்பான மாற்றம் வர வேண்டும். அதிலும் குறிப்பாக அரபு மொழி கற்கைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். அரபு என்பது முஸ்லிம்களின் சமய மொழி என்பதைத் தாண்டி அது ஒரு சர்வதேச மொழியாகும். அரபு மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பிக்கும் பல நுட்பங்கள் சூடான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எங்களது நாட்டில் அதற்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மாணவர்கள் கிதாபுகளை வாசிப்பதன் ஊடாக அரபை ஓரளவு தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அதைத் தவிர கற்பித்தல் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. மத்ரஸா கல்வியில் 4 வருடங்களில் 2 வருடங்களை அரபு மொழி விருத்திக்காக பயன்படுத்த வேண்டும். மத்ரஸாவில் 50 வீதம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அத்துடன் தொழில்நுட்பம், விஞ்ஞானம் போன்ற விடயங்களையும் இதனுள் உள்ளடக்க வேண்டும்.
ஒருமுறை கண்டியில் என்னை ஒரு விரிவுரை நிகழ்த்த அழைத்தார்கள். அங்கு எனக்கு தந்த தலைப்பு காதல் , திருமணம் மற்றும் கலவி ஆகும். நான் அங்குள்ள மதகுருவிடம் ஏன் இதுபோன்ற ஒரு தலைப்பைப் பற்றி பேச வேண்டும் என்று கேட்டேன். இந்த 3 விடயங்களிலும் தோல்வியைத் தழுவியவர்கள் இங்கு தாராளமாக இருப்பார்கள். அவர்களுக்கு விளக்கமளிப்பது எமது கடமை என அவர் தெரிவித்தார். நாமும் இதுபோல உலகம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நான் அண்மையில் பிரிவெனாக்களின் இயக்குனரான குணரத்ன தேரரை சந்தித்தேன். அவரிடம் பிரிவெனாக்கள் பற்றி வினவிய போது அரசாங்கம் ஏற்றுக்கொண்ட 658 பிரிவெனாக்கள் தற்போது சேவையில் உள்ளதாக தெரிவித்தார். 6000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேவையாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 60000 பிள்ளைகள் இந்த சேவைகளைப் பெறுகிறார்கள். தொழில்நுட்பக் கல்வியின் தாக்கத்தால் பிரிவெனாக் கல்வியில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் எங்களது மத்ரஸாக்களிலும் கலைத்துறையில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
மத்ரஸாக்களில் கற்பிப்பவர்கள் மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயங்களை மாத்திரம் அறிந்து வைத்திருப்பதால் அந்த ஒரு விடயத்தில் கல்வி பூரணப்படுத்தப்பட்டுவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மத்ரஸாவுக்கு வெளியே கற்பிக்கின்ற விடயங்களை அவர்கள் தரக்குறைவாகத்தான் எண்ணுகிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள மத்ரஸாக்கள் தொடர்பாக அண்மையில் ஓர் ஆய்வு இடம்பெற்றது. அங்கு அதிகமாக காணப்பட்ட கற்பித்தல் முறை நெட்டுருக்கற்பித்தல் மனப்பாடம் செய்தல் ஆகும். அதாவது இருக்கின்ற புத்தகத்தை வைத்து அதனை அப்படியே விளங்கப்படுத்துவதாகும். அதைப் பிள்ளைகள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தேசிய கல்வி நோக்கங்கள் பற்றி இங்கு எடுத்து நோக்க வேண்டும். அந்த வரையறைகளை மீறாமல் தேசிய கல்வி நோக்கங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
தேசிய கொள்கை எனும் போது அதில் நாட்டு நலன், தேசப்பற்று, சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமையை இனங்காணல் போன்ற பல தேசிய இலக்குகள் உள்ளன. இவற்றை நாம் எமது குர்ஆன், ஷரீஆவுக்கு அமைய பின்பற்ற முடியும். உதாரணமாக நாட்டினுடைய தேசிய கீதத்துக்கு நாட்டினுடைய பிரஜை என்ற வகையில் மரியாதை கொடுக்க வேண்டும். இது போன்ற பல விடயங்கள் உள்ளன. நம்மில் பலரிடம் இவை பற்றி பேசும்போது குறுகிய சிந்தனை உருவாகி விடுகின்றது.
அந்த வகையில் எங்களது மத்ரஸாக்கள் அரசாங்கத்தின் கல்வி அமைச்சுக்குக் கீழ் வருவது தொடர்பாக நாம் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது எங்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பே தவிர அச்சம் கொள்ள வேண்டிய ஒரு விடயமல்ல.
vidivelli