ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் உருவான நிலைமைகளை முன்னிறுத்தி அமைச்சுப் பதவிகளை துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் சிலர், சில நாட்களுக்கு முன்னர் தமது அமைச்சு பதவிகளை மீளப் பொறுப்பேற்றதில் குறைகாண்கின்றனர். இவர்களின் குற்றச்சாட்டுகளில் ஓரளவு நியாயம் உள்ளதென்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
சஹ்ரான் குழுவினரின் திட்டமிட்ட சதியின் விளைவாக முஸ்லிம் மக்கள் பல்முனை உள்மன தாக்குதல்களுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில், இந்த பதவியேற்புகள் விமர்சிக்கப்படுவதில் முழுமையாக பிழைகாண முடியாதுள்ளது. எனினும், பதவியேற்றபின் பின்னணியை அறிவிக்காது, அதற்கான நியாயங்களை முன்னுரைக்காது பதவியேற்றதன் விளைவே இப்படியான விமர்சனங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அமைச்சுகளை பொறுப்பெடுத்த மறுநாளே, புர்காவுக்கு தடைகோரி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலையீட்டால் பிற்போடப்பட்டது என்பதை பலர் கவனிக்கவில்லை.
அநியாயமாக கைதுசெய்யப்பட்டவர்களது விடயத்தில் அவர்களின் விடுதலைக்காக இயங்கிய ஒருவன் என்கிற அடிப்படையில், கைதானவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு முன் ஏன் பதவியேற்றார்கள் என்ற பரவலான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கலாம் என நினைக்கிறேன்.
குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் கைதுகள் நடந்தபோது, அப்பாவிகளின் விடுதலைக்கான சரியான திட்டமிட்ட முன்னெடுப்புகளை முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே செய்தது என்பதில் யாரும் குறைகாண முடியாது. நாம் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர், முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட மேலும் சிலர் கட்சி பேதங்களுக்கு அப்பால் இயங்கியதோடு தம்மாலான உதவி ஒத்தாசைகளை வழங்கினார்கள். இருப்பினும் சட்டமா அதிபர் அலுவலகத்துடனான தொடர்புகளில் 99% முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகளே பங்களிப்புச் செய்தனர்.
பிரதமர் ஏற்பாட்டில் பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், முன்னாள் சட்டமா அதிபரும் தற்போதைய அமைச்சருமான திலக் மாரப்பன போன்றோர் அடங்கிய குழுவுடன் ரவூப் ஹக்கீம், மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் போன்றோர் நடாத்திய தொடர் சந்திப்புகள் அப்பாவிகள் பலரை விடுதலை செய்ய வழிகோலியது.
சட்டத்தரணிகளான ரிஸ்வி ஜவஹர்ஷா, சிபான் மஹ்ரூப் போன்றோரின் அர்ப்பணிப்புடனான செயற்பாடு, கணினி மற்றும் கோவைப்படுத்தல் உட்பட தொடர்பாடல் பணிகளில் பேருதவியாக செயற்படும் ஸக்கி அஹமது போன்றவர்களின் சோர்வற்ற உழைப்பின் பிரதிபலனாக மனநிறைவு தரும் முடிவுகளை எட்டமுடியுமாக இருந்தது.
கைதுசெய்யப்பட்ட அனைவரினதும் தரவுகள் தாருஸ்ஸலாம் காரியாலயத்துக்கு கிடைத்தன என்று சொல்லமுடியாவிட்டாலும், நாட்டின் நாலாபுறம் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் எம்மை சந்தித்து, எமக்கு அவசியமான குற்றப் பத்திரிகை (B Report) உடனான தகவல்களை வழங்கினர். இவற்றில் 18 கோப்புகள் மாத்திரமே விடுதலை செய்யப்படாமல் எங்களிடம் எஞ்சியிருக்கின்றன. விரைவில் அவற்றையும் முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம். எஞ்சியுள்ள கோப்புகளில் பெரும்பாலானவை பாரதுரமான குற்றப் பத்திரிகை குறிப்புகளைக் கொண்டவையாக இருப்பதால், அவற்றுக்கான காலம் இன்னும் தள்ளிப்போகலாம்.
பாரதூரமான குற்றச்சாட்டுகளின் பாரதூரம் பற்றி விளக்குவதற்காக சிலவற்றை குறிப்பிடலாம்.
• சஹ்ரானின் மத்ரசாவில் விரிவுரையாளராக பணியாற்றியதுடன் ஐ.எஸ். பற்றியும் வகுப்பெடுத்தார் என்ற மாணவர்களின் வாக்குமூலம்.
• இப்ராஹீம் ஹாஜியாரிடம் பணம்பெற்று, பள்ளிவாசல் கட்டி சஹ்ரானை கொண்டுவந்து திறப்புவிழா நாடாத்தி, சஹ்ரானைக் கொண்டே குத்பா பிரசங்கம் நிகழ்த்தியது.
• சஹ்ரான் திறப்புவிழா நடாத்திய பள்ளிக்கு சவூதியிலிருந்து நிதியுதவி பெற்றுக்கொடுத்தமை.
• மாவனல்லை சிலை உடைப்பை நடாத்தியவர்களின் விரிவுரைகளில் பங்குபற்றியமை.
• ஐ.எஸ். பற்றி முகநூல் மூலமாக நண்பர் வட்டத்தை உருவாக்கி செயற்பட்டது.
• தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தவராக இருந்தமை.
போன்ற பாரதூரமான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள்போக, மேலும் சிலர் பின்வரும் செயற்பாடுகளினால் பயங்கரவாதத்துக்கு துணைபோயிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைதாகியுள்ளனர்.
• உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமல் (கல் உடைப்பதற்கு) வெடிபொருட்களை வைத்திருந்தவர்கள்.
• வெளிநாட்டு தூதரகங்களினதும் பொலிஸ் உயரதிகாரிகளினதும் இறப்பர் முத்திரைகளை வைத்திருந்தவர்கள் (போலிக் கச்சேரி).
• பிறரின் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டு போன்றவற்றை வைத்திருந்தவர்கள்.
• அனுமதிப்பத்திரம் இல்லாது துப்பாக்கிகளை வைத்திருந்தவர்கள்.
• வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்தவர்கள் (மோப்ப நாய்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன)
• துப்பாக்கி ரவைகளை ஒளித்து வைத்திருந்தவர்கள்
• உயர் பாதுகாப்பு வலயங்களை வீடியோ எடுத்தவர்கள்.
• சஹ்ரான் சார்ந்தோருக்கு வீடுகளை வாடகைக்கு கொடுத்தவர்கள் மற்றும் ஏற்பாடு செய்தவர்கள்.
• மேற்படி வீடுகளில் பணிபுரிந்தவர்கள், அங்கு ஆயுதப் பயிற்சி நடத்தப்பட்டது பற்றி தெரிந்திருந்தும் பொலிஸாருக்கு அறிவிக்காதவர்கள்.
• சட்டவிரோதமாக புதையல் கண்டுபிடிக்கும் அதிநவீன இலத்திரனியல் கருவிகளை வைத்திருந்தவர்கள். (இதனைக் கொண்டு புதைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தோண்டியெடுத்து பயங்கரவாதிகளுக்கு கொடுத்திருக்கலாம்)
இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் ஏதோவொரு வகையில் நம்மவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், இவற்றுக்கும் பயங்கரவாதிகளுடனா தொடர்புகளுக்குமான பின்னணிகள் எதுவுமில்லை என்று மறுதலிப்பது இலகுவானதல்ல. குற்றப் பத்திரிகைகளில் இவர்கள் ‘சந்தேக நபர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இவர்களின் கடந்தகால தொடர்புகள் சம்பந்தமான விசாரணைகள், பொருட்கள் சம்பந்தமான இரசாயன பரிசோதனைகள், தொலைபேசி உரையாடல் விபரங்கள், நடமாடிய மற்றும் தொடர்பிலிருந்த நபர்கள் போன்ற விசாரணைகள் தொடர்கின்றன.
ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கைதாகி இன்னும் விடுதலை செய்யப்படாதுள்ளனர் என்பதில் எவ்வித உண்மையும் கிடையாது. சாதாரண சந்தேகங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளியில் வந்துவிட்டனர். இவ்வளவு பெருந்தொகையானோரை விடுதலை செய்வதற்கு அமைச்சு பதவிகளை துறந்து, கொடுத்த அழுத்தமே காரணமாகும். பிரதமரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கக்கூடிய அமைப்பொன்றின் மூலமாக முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகளுக்கு இவ்வளவு தூரம் இதனை சாதித்துக்கொள்ள வழியமைத்ததும் அதுவே என்பதை எவராலும் மறுக்க முடியாது.
அப்பாவிகள் என்ற சொற்பதத்துக்குள் அடங்காதவர்களே இன்னும் மீதமுள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டியுள்ளது. இருப்பினும் அவர்களின் விடுதலை பற்றி தினந்தோறும் எம்மை தொடர்பு கொள்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆறுதல் வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருப்பதுடன் நின்றுவிடாது, எமது சட்டத்தரணிகள் தொடர்ந்தும் சட்டமா அதிபரின் காரியாலய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இனியும் ‘அப்பாவிகள் விடுதலை செய்யப்படவில்லை’ என்று பகிரங்கமாக கோஷம் எழுப்பிக்கொண்டு, அமைச்சுகளை மீள பொறுப்பேற்கமுடியாது என்பதற்கு அதனை ஒரு காரணமாக முன்வைப்போமாயின்,
பயங்கரவாதிகளை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் பாராளுமன்ற குழுவினர் அரசுக்கு அழுத்தம்’ என்ற தலைப்புச் செய்திகள் நாளிதழ்களை அலங்கரிக்கும் அளவுக்கு மீதமுள்ளவர்களின் குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை.
அப்படி ஏதும் நடந்தால், அதன் விளைவுகள் விபரீதமாக அமைவது மாத்திரமன்றி தொடர்ச்சியான எமது முன்னெடுப்புகளுக்கான வாசல் முழுமையாக மூடப்பட்டுவிடும். சர்வதேச அழுத்தங்கள், தொடர் உண்ணாவிரதங்கள், வீதிமறியல் போராட்டங்கள் வெளியிலிருந்து தமிழ் தரப்பு அரசுக்கு வழங்கும் ஆதரவு போன்ற விடயங்கள் இருந்தும், யுத்தகாலத்தில் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் இன்றுவரை விடுதலை செய்யப்படாது இருக்கும் சூழலில் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிவிலகி, குறுகிய காலத்துக்குள் இதனை சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றமற்ற எவரும் இன்னும் விடுதலையாகாமல் இருந்தால், அவர்களின் விடுதலை விரைவில் நடந்தேறவும் எங்களது பணி வெற்றிபெறவும் பிரார்த்தியுங்கள்.
ரவூப் ஹஸீர்
vidivelli