குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்றுப் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சிஹாப்தின் மொஹமட் ஷாபியும் அவரது சட்ட குழுவினரும் பலருக்கு எதிராக டாக்டர் சாபியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியமை மற்றும் உரிமையியல் பாதிப்புகள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யவுள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், பேராசிரியர் சன்ன ஜயசுமன, பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத், டாக்டர் ஷாபிக்கு எதிராக பொய் பிரசாரங்களைப் பரப்பிய சிங்கள பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் இரு ஊடகவியலாளர்களுக்கு எதிராகவே வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளன.
டாக்டர் மொஹமட் ஷாபி இந்த வழக்குகளை குருநாகல் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யவுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தன்னை, பலரைக் கொன்ற கொலையாளி என எனக்கெதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களின் போது தெரிவித்திருக்கிறார் என டாக்டர் மொஹமட் ஷாபி கடந்த திங்கட்கிழமை பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவிடம் புகார் செய்துள்ளார். மேலும் ஒரு புகார் குருநாகல் மேயர் துஷார விதாரனவுக்கெதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் குருநாகல் மேயர் தான் பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர் சன்ன ஜயசுமன தனது முகநூலில் பதிவேற்றியிருந்த மாறுபாடான தவறான கருத்துகளால் முகநூல் பாவனையாளர் களால் டாக்டர் மொஹமட் ஷாபியின் குடும்பத்துக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டதாக பேராசிரியர் சன்ன ஜயசுமனவுக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பத்திரிகை ஆசிரியர் மற்றும் இரு ஊடகவியலாளர்களுக்கு எதிராக தனியான முறைப்பாடுகள் பதில் பொலிஸ்மா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளன. பத்திரிகையில் பிரசுரமான கட்டுரையில் டாக்டர் ஷாபி தனது வகுப்புத் தோழிகளுக்கு விஷம் கலந்து மாதவிடாய் காலத்தில் அணியும் நெப்கின்கள் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ்மா அதிபர், பிரதம நீதியரசர் ஆகியோரிடமும் சட்டத்தரணி இந்திரசிரி சேனரத்னவுக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் என்பவற்றிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி சட்ட விதிகளை மீறியுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சானக அபேவிக்ரமவுக்கு எதிராகவும் தனியான முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணியின் சமூக வலைத்தளத்தில் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான சாட்சியங்களை முன்னிலைப்படுத்தி குற்றங்களை நிரூபிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தவறியுள்ளது என பதிவேற்றியிருந்தார்.
டாக்டர் ஷாபியின் வழக்கை நீதியாகவும், நியாயமாகவும் நடாத்துவதற்கு இவர்கள் பல்வேறு தடைகளை விதித்துள்ளார்கள். இவர்களுக்கு எதிராக டாக்டர் ஷாபியின் மனைவி டாக்டர் இமாரா ஷாபி கடந்த ஜூன் 25 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். டாக்டர் ஷாபியும் இவ்வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இவர்களுக்கு எதிராக மனுவொன்றினைக் கையளிக்கவுள்ளார்.
பொய்யான சாட்சியங்களைச் சோடித்து டாக்டர் ஷாபியைக் கைது செய்த குருநாகல் பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் நிசாந்த வீரசிங்க தெரிவித்திருந்தார்.
பதில் பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்னவின் உத்தரவுக்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழு குருநாகல் பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தை திருகோணமலைக்கு இடமாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. குற்றப்புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமையவே பதில் பொலிஸ்மா அதிபர் இந்த உத்தரவினை வழங்கியிருந்தார். என்றாலும் அவரது இடமாற்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பதில் பொலிஸ்மா அதிபரின் விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டாக்டர் ஷாபிக்கு எதிரான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜயலத்தின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபரின் இடமாற்றம் நியாயமானதா என்று நாம் ஆராய வேண்டியுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆராயும் என அக்குழுவின் செயலாளர் வீரசிங்க தெரிவித்தார். குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்றுப் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் மொஹமட் ஷாபி வருமானத்தை மீறி பாரியளவில் சொத்து சேர்த்துள்ளதாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்பு குருநாகல் பிரதி பொலிஸ்மா அதிபர் ஜயலத், பொலிஸ் அத்தியட்சகர் திசாநாயக்க ஆகியோர் டாக்டர் ஷாபி சட்டவிரோத கருத்தடை செய்திருந்தால் அது தொடர்பான முறைப்பாடுகளை பொலிஸில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
சிங்கள பத்திரிகையொன்று குருநாகலைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் சிங்கள தாய்மாருக்கு சட்ட விரோதமாகக் கருத்தடை செய்துள்ளதாக செய்தி வெளியிட்டதை யடுத்தே இவ்விவகாரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் செய்தி வெளியிடப்பட்டதை யடுத்து உடனே ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர் சன்ன ஜயசுமன தனது முகநூல் பதிவில் குறிப்பிட்ட டாக்டரின் பெயர் ஷாபி என்று பதிவேற்றியதுடன் அவரது புகைப்படத்தையும் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli