முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடை செய்வதற்குத் துணைபோக வேண்டாம். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தற்போது அமுலிலுள்ள சட்டங்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றுபடுங்கள் என கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் இணைந்து நேற்றைய தினம் தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் நடாத்திய விசேட மாநாட்டில் கோரிக்கை விடுத்ததுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜரையும் கையளித்தன.
முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடைசெய்வதற்கு சட்டமொன்றினை இயற்றிக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினை நீதியமைச்சர் தலதா அத்துகோரள சமர்ப்பித்திருக்கின்ற நிலையில் அதற்கு எதிர்ப்புத்தெரிவிப்பதற்கும், தடைசெய்ய வேண்டாம் எனக் கோருவதற்குமான கூட்டமொன்று நேற்றுக் காலை தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்துக்கு நாடெங்கிலுமிருந்து பள்ளிவாசல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 6000 பேர் கலந்துகொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள், முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மகஜரில் முஸ்லிம் பெண்களின் உரிமையான நிகாபை தடை செய்யக்கூடாது. ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும்.
எமது முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களால் வடிவமைத்துத் தரப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றைப் பாதுகாப்பதை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடமையாகக் கருதவேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிகாபை தடை செய்வதற்கு பாராளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டு வரப்பட்டால் அதனை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதியளித்தனர்.
நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், இம்ரான் மஹ்ரூப், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் மேல்மாகாண அளுநர் எம்.ஜே.எம்.முஸம்மில், முன்னாள் ஆளுநர் அசாத்சாலி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இம்மாநாட்டில் குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷாபியும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ஏ.பரீல், ஏ. எஸ்.எம். ஜாவித், அஷ்ரப் ஏ சமத்
vidivelli