நியூஸிலாந்து தாக்குதலுக்கு பதிலடி என தற்கொலைதாரி தொலைபேசியில் கூறுகிறார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்
4/21 தொடர் குண்டுத் தாக்குதல்கள் கிறிஸ்ட் சேர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பதிலடி வழங்கும் முகமாகவே மேற்கொள்ளப்பட்டது என்பது சங்கிரிலா ஹோட்டல் தற்கொலைக் குண்டுதாரி ஏப்ரல் 21 ஆம் திகதி தனது மனைவியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களிலிருந்து தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அவசரகால சட்டத்ததை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சங்கிரிலா–ஹோட்டல் தற்கொலைக் குண்டுதாரி தனது மனைவியுடன் தாக்குதல் நடைபெறுவதற்கு முன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதன் காரணமாகவே இதனை அறிந்துகொள்ள முடிந்துள்ளது.
அந்த தொலைபேசி உரையாடலைக் கேட்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. அந்த உரையாடலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்தாரி ஏப்ரல் 21 தாக்குதல் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் கிறிஸ்ட் சேர்ச் பள்ளிவாசல் தாக்குதலுக்கும் பதிலடியாகவே மேற்கொள்ளப்படுகிறது என தெளிவாகக் கூறியுள்ளார். அவர் சிரியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களின் அவலநிலை தொடர்பாகவும் கதைத்துள்ளார். இவ்வாறான காரணங்களுக்குப் பதிலடி வழங்கும் முகமாகவே தாக்குதல் மேற்கொள்வதாக தெளிவாகக் கூறியிருக்கிறார்.
சஹ்ரான் குழுவினர் ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாக இருந்திருக்கிறார்களே தவிர பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்புள்ளவர் களாக இருந்திருக்கவில்லை’ என்றார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. இம்மாதம் (ஆகஸ்ட்) கண்டி எசல பெரஹரா மற்றும் மடு ஆலய உற்சவம் நடைபெறவுள்ளதால் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்)