மாவனல்லை கிருங்கதெனிய பதுரியா மத்திய கல்லூரியின் கேட்போர் கூட நிர்மாணப் பணிகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இடையில் கைவிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அப்போதைய சப்ரகமுவ மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த மஹீபால ஹேரத் சுமார் 3 கோடியே 94 இலட்சம் ரூபா அளவில் நிதி ஒதுக்கி இந்த கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்தார்.
ஆனாலும் இந்த கட்டிட நிர்மாணம் இடையில் கைவிடப்படுள்ள நிலையில், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டதாக உள்ள கட்டிடத்தை சூழ பற்றைக்காடுகள் வளர்ந்துள்ளன.
பதுரியா மத்திய கல்லூரியானது சப்ரகமுவ மாகாணத்தில் மாத்திரமன்றி இலங்கை முழுவதற்கும் தரமான கல்வியியலாளர்கள், அறிஞர்கள், பல்துறை சார்ந்த நிபுணர்களை உருவாக்கும் பணியில் முன்னணியில் இருக்கும் ஒரு பாடசாலையாகும். 1918 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 100 வருடங்கள் நிறைவடைந்துள்ள ஒரு பாடசாலையாகும்.
ஆனாலும் இப்பாடசாலையின் கல்விப் பணிக்கு 100 வருடங்கள் நிறைவடைந்திருந்தாலும் பாடசாலை இன்றும் நிவர்த்தி செய்யப்படாத பல குறைபாடுகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது. அதிலும் பிரதான குறைபாடாக இருந்து வருவது 100 வருடங்களாகியும் இதுவரையில் ஒரு கேட்போர் கூடம் இல்லாமையாகும்.
இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக அப்போதைய முலமைச்சராக இருந்த மஹீபால ஹேரத் சுமார் 3 கோடி 94 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கி இக்கல்லூரிக்கான கேட்போர் கூடம் ஒன்றை நிர்மாணித்து தர நடவடிக்கை எடுத்தார். ஆனாலும் கட்டிட நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டு ஒருபகுதி வேலைகள் நிர்மாணிக்கப்பட்டதாயினும் உரிய முறையில் திட்டமிடப்பட்ட காலத்தில் முழுமையான பணிகள் பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலை காணப்படுகின்றது.
பதுரியா மத்திய கல்லூரியில் சுமார் 3500 மாணவர்கள் அளவில் கல்வி கற்கின்றனர். இந்த மாணவர்களது கலை கலாசாரம் மற்றும் பல்வேறு துறைகளிலுமான திறமைகளை வெளிப்படுத்த மட்டுமல்லாது ஆசிரியர்களது திறன் விருத்திக்கான செயலமர்வுகள், கருத்தரங்குகள், மாணவர்களுக்காக பரிசளிப்பு உட்பட பெரியளவிலான நிகழ்வுகளை நடத்த அயலில் உள்ள பிரதேச சபை கேட்போர் கூடத்தை கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த கட்டிட நிர்மாணம் தொடர்பாக மாவனல்லை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு 2019 ஜூலை 07 ஆம் திகதி சமர்ப்பித்த தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலான விண்ணப்பப் படிவத்திற்கு 2019.07.22 என்று திகதியிட்டு மாவனல்லை வலய பிரதி கல்வி பணிப்பாளர் பீ.தம்மிக அநுரகுமார வழங்கியுள்ள பதிலில் கேட்போர் கூட நிர்மாணம் தொடர்பாக பின்வரும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
”இந்த கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதற்காக 3 கோடி 94 இலட்சத்து 89 ஆயிரத்து 832 ரூபா நிதியை சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு ஒதுக்கியிருக்கின்றது. கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மியுச்சுவல் எஞ்சினியரிங் என்ற கட்டிட நிர்மாண கம்பனிக்கு கட்டிட நிர்மாணத்திற்கான ஒப்பந்தத்தை 2016.11.11 இல் செய்து கட்டிட வேலைகளை 2018.08. 11 ஆம் திகதி நிறைவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த கட்டிட நிர்மாண கம்பனி இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் இதுவரையில் 19 வீதமான வேலைகளை மாத்திரமே நிறைவு செய்திருப்பதோடு அதற்காக 50 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா செலவு செய்திருக்கின்றது. அதற்கான நிதி வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் இந்த கட்டிட நிர்மாண வேலைகளை கண்காணிக்கும் பொறுப்பு ரம்புக்கனையில் உள்ள நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
நிறைவேற்று பொறியியலாளர் ஹசங்க என்பவரைச் சந்தித்து தகவல் அறிவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து தகவல் கோரிய போது குறிப்பிட்ட பொறியியலாளர், வேலைகளை பொறுப்பேற்ற இந்த கம்பனி வேலைகளை உரிய காலத்தில் நிறைவு செய்யாமல் தாமதித்ததால் அக் கம்பனியுடனான ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் புதிய விலை மனு கோரப்பட்டு புதிய கட்டிய நிர்மாண கம்பனியொன்றை தெரிவு செய்து மீண்டும் கட்டிட நிர்மாண வேலைகளை ஆரம்பிக்க சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றார். அத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ள வேலைகளை உடன் ஆரம்பித்து பூர்த்தி செய்யுமாறு 2018.09. 13 ஆம் திகதி அவரால் உரிய மியுச்சுவல் கட்டிட நிர்மாண கம்பனிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். அதற்கும் அந்த கட்டிட நிர்மாண கம்பனி நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
அதன் பின்னர் சப்ரகமுவ மாகாண கல்வி தகவல் தொழில்நுட்ப மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரியவும் இந்த கட்டிட நிர்மாண கம்பனிக்கு 2019.05.06 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி 2016.11.11 ஆம் திகதி ஒப்பந்தம் செய்து கட்டிட நிர்மாண வேலைகள் ஒப்படைக்கப்பட்டு 2017.11.11 இல் நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனாலும் உரிய கட்டிட நிர்மாண கம்பனி குறிப்பிட்ட காலத்தையும் கடந்து பணிகளை நிறைவு செய்ய தவறிவிட்டதால் குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கம்பனி ஒப்பந்தக்காரருக்கு அறிவித்துள்ளது.
நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் மேற்குறித்த இரண்டு கடிதங்களதும் பிரதிகளை என்னிடம் சமர்ப்பித்தது. இவ்வாறாக பார்க்கும் போது நிதி ஒதுக்கப்பட்டும் கேட்போர் கூட நிர்மாண வேலைகளை நிறைவு செய்து உரிய கட்டிடத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டமை இந்த பாடசாலையின் வரலாற்றில் அடைந்த ஒரு துர்ப்பாக்கியமான நிகழ்வாகும்.
அதனால் கூடிய சீக்கிரம் இந்த கேட்போர் கூட நிர்மாணம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் ஊருக்காக உழைக்கக் கூடிய அரசியல் செல்வாக்குள்ள பிரமுகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கூடுதல் கரிசனை காட்டி ஒதுக்கப்பட்ட மீதமுள்ள பணத்தை முழுமையாக செலவிட்டு கேட்போர் கூட நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்ய அழுத்தம் வழங்க வேண்டும் என இப்பாடசாலை மாணவர்களது பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
எம்.எஸ்.அமீர் ஹுசைன்
vidivelli