முகத்திரை அணிய நிரந்தர தடை விதிக்க அமைச்சரவை அனுமதி
மேலும் ஆராய ஒரு வார கால அவகாசத்தை கேட்டுப்பெற்றார் அமைச்சர் ஹக்கீம்
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப், புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்வதற்கான யோசனையை நீதியமைச்சர் தலதா அத்துகோரள நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சடடமா அதிபர் திணைக்களத்தினால் வரையப்பட்டுள்ள நிகாப் நிரந்தரச் சட்ட வரைபுடன் கூடிய அமைச்சரவைப் பத்திரத்தையே நீதியமைச்சர் இதன்போது சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய போதிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் உள்ளடக்கம் குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும் என்றும் அதற்கு கால அவகாசம் தருமாறும் கோரிக்கை விடுத்தார்.
எனினும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குபற்றிய ஏனைய அமைச்சர்கள், இதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் தடைச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இறுதியில் குறித்த சட்டமூலத்துடன் தொடர்புடைய ஆவணத்தை ஆராய்வதற்கு அமைச்சர் ஹக்கீமுக்கு ஒரு வார கால அவகாசத்தை வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்தது. கடந்த ஜூன் 3 ஆம் திகதி அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த பின்னர், கடந்த திங்கட் கிழமை ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்தே நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார். எனினும் இக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பங்கேற்கவில்லை. புர்கா மற்றும் நிக்காப் தற்போது அமுலிலுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அதனை சட்டத்தின் மூலம் நிரந்தரமாக தடை செய்வதற்கே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 4/21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் பெண்கள் அரச நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் முகத்திரை அணிவதற்கு சுற்றுநிருபம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli