வன்செயல் நஷ்டஈடுகள் தாமதப்படுத்தப்படக்கூடாது
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் பாரிய சொத்தழிவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் பள்ளிவாசல்களும் பாரியளவில் சேதங்களுக்குட்படுத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அரசாங்கம் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படும் என உறுதி வழங்கி வந்துள்ளது என்றாலும் அரசாங்கம் உரிய நஷ்ட ஈடுகள் வழங்குவதில் இதுவரைகாலமும் அசமந்தப் போக்கினையே கடைப்பிடித்து வந்தது.
என்றாலும் அண்மைக்காலமாக அரசு நஷ்டஈடுகளை வழங்குவதில் ஆர்வம்காட்டி வருகிறது. ஜனாதிபதித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் என்று தேர்தல்கள் அண்மித்த நிலையில் நஷ்டஈடுகள் வழங்குவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அம்பாறையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களுக்கு வயது ஒரு வருடமும் 5 மாதங்களுமாகும். அம்பாறை காசிம் ஹோட்டலில் கருத்தடை மாத்திரை கலந்த உணவுகள் விநியோகிக்கப்படுவதாக பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு வன்செயல்கள் அப்பகுதியில் அரங்கேற்றப்பட்டன.
வன்செயல்களினால் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் பெரும் சேதங்களுக்குள்ளாகியது. அத்தோடு மேலும் 13 சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
இந்தச் சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக மதிப்பீட்டுத் திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்களினால் சேத மதிப்பீட்டுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் 27 மில்லியன் ரூபாவெனவும் ஏனைய 13 சொத்துகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் 3.6 மில்லியன் ரூபாவெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நஷ்டஈட்டுத் தொகையினை வழங்கமுடியாது, பள்ளிவாசலுக்கு ஒரு மில்லியன் ரூபாவே வழங்க முடியும் என அமைச்சரவைக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. புனர்வாழ்வு அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைய ஒரு மில்லியன் ரூபாவே நஷ்ட ஈடாக பள்ளிவாசலுக்கு வழங்கமுடியும் என அமைச்சரவை தெரிவித்தது. அத்தோடு 13 சொத்துகளுக்கு ஏற்படுத்தப்பட்ட நஷ்டம் 3.6 மில்லியன் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் நஷ்டஈடாக அச்சொத்துக்களுக்கு 6 இலட்சம் ரூபாவே வழங்க முடியும் என அமைச்சரவை தெரிவித்தது.
இந்நிலையில் அம்பாறை பள்ளிவாசல் நிர்வாகத்தின் பல போராட்டங்களின் பின்பும் முஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தங்களின் பின்பும் பள்ளிவாசலுக்கு 27 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய 13 சொத்துகளின் நஷ்டஈட்டுத் தொகை பற்றி இன்னும் இறுதித்தீர்மானம் எட்டப்படவில்லை.
இதேபோன்று 2018 மார்ச் மாதம் இடம்பெற்ற கண்டி – திகன வன்செயல்களினால் பாதிக்கப்பட்டு நஷ்டஈடு வழங்கப்படாதுள்ள 173 சொத்துகளில் 119 சொத்துகளுக்கு எதிர்வரும் 6 ஆம் திகதி நஷ்டஈடாக 134 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. ஏனைய 54 சொத்துகளின் நஷ்டஈட்டு கோவையிலுள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதும் நஷ்டஈடு வழங்கப்படும் என புனர்வாழ்வு அமைச்சின் இழப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு குருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டியுள்ளது. நாத்தாண்டியா பகுதியில் பாதிக்கப்பட்ட 98 குடும்பங்களில் 50 குடும்பங்களுக்கு நஷ்டஈடாக 7 மில்லியன் ரூபா நேற்று வழங்கப்பட்டது.
கம்பஹா, குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் இடம்பெற்ற வன்செயல்களினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 30 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. இவற்றுக்கான நஷ்டஈடுகள் துரிதப்படுத்தப்படவேண்டும். அம்பாறை மற்றும் கண்டி – திகன வன்செயல்களுக்கான நஷ்டஈடுகள் தாமதப்படுத்தப்பட்டது போன்று தொடர்ந்தும் தாமதப்படுத்தக்கூடாது.
புனர்வாழ்வு அமைச்சுக்குப் பொறுப்பாக இருக்கும் பிரதமர் நஷ்டஈடுகளை மேலும் தாமதப்படுத்தாது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தினுள் அனைத்து நஷ்டஈடுகளும் வழங்கப்படவேண்டும். இதனை எதிர்பார்த்து பாதிக்கப்பட்ட சொத்துகளின் உரிமையாளர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.
vidivelli