கட்டுநாயக்க ஏற்றுமதி ஒழுங்குபடுத்தல் வலயம் இன்று கழிவுகளால் சூழப்பட்ட ஒரு இடமாக மாறியுள்ளது. ‘மீள் ஏற்றுமதிக்கானது’ என்ற பெயரில் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குப்பைகள் அந்த இடத்தை அசிங்கப்படுத்தியுள்ளன. இந்தக் கழிவுகளில் ஐக்கிய இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட மெத்தை மற்றும் படுக்கை விரிப்பு உட்பட மனித கழிவுகளும் உள்ளடங்குகின்றன. குறித்த பகுதியில் மழைநீர் வழிந்து செல்ல முறையான வடிகான் கட்டமைப்பு இல்லாததால் மழை நீருடன் கழிவுகள் படிந்து துர்நாற்றம் வீசும் நிலையும் தோன்றியுள்ளது. மேலும் சிறியரக கழிவுகள் காற்றில் பரவி சுற்றுச் சூழல் மாசை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே பாவனைக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவது உலகளவில் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒன்றுதான். ஆனால் இலங்கைக்கு நேர்ந்துள்ள இந்த கதியைப் பார்க்கும் போது இலங்கை வெளிநாடுகளின் குப்பைத் தொட்டியா? என்ற கேள்வி நம்முள் எழுந்துள்ளது. இந்தக் குப்பைக் கழிவுகளின் தாக்கத்தினால் முத்துராஜவனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதுடன் தொற்றுநோய்கள் பரவும் அபாய நிலையும் தோன்றியுள்ளது.
களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கழிவுகள்
சுங்கத்திணைக்களத்தின் தரவுகளின்படி 2017 தொடக்கம் கழிவுகள் அடங்கிய 241கொள்கலன்கள் இலங்கைக்கு பல்வேறு கால கட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுள் 130 கொள்கலன்களை ஒரு பிரபல தனியார் நிறுவனம் தற்போது பொறுப்பேற்றுள்ள போதிலும் மீதமுள்ள 111 கொள்கலன்கள் கேட்பார் பார்ப்பாரின்றி கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
மீள் ஏற்றுமதிக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 130 கொள்கலன் கழிவுகள் தற்போது கட்டுநாயக்க ஏற்றுமதி ஒழுங்குபடுத்தல் வலயத்தில் 50 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் நிறை சுமார் 27 ஆயிரத்து 658 மெட்ரிக் தொன் ஆகும். இந்தக் கழிவுகளில் பிரித்தானியாவில் பாவனைக்கு உட்படுத்திய மெத்தைகள், படுக்கை விரிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. மேலும் பிரேத அறையிலிருந்து நீக்கப்படும் மனித கழிவுகள், சத்திர சிகிச்சைக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கழிவுகள் கொண்டுவரப்பட்டதன் பின்னணி
கழிவுகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் ஹேலீஸ் ப்ரீ ஸோன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நிறுவனம் உலகளாவிய ரீதியில் உள்ள ஏனைய வர்த்தக வலயங்களில் இடம்பெறுவதைப்போன்று மீள் ஏற்றுமதிக்காக பொருட்களை சேகரிக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டதாகும் எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி பாவனைக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி மீண்டும் ஏற்றுமதி செய்வதே கழிவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டதன் காரணம் என அந்நிறுவனம் தம்மை பறைசாற்றுகிறது.
குறித்த நிறுவனம் அவ்வாறு தெரிவித்துள்ள போதிலும் கடந்த 2017 ஒக்டோபரில் ஹேலீஸ் நிறுவனத்தினால் மீள் ஏற்றுமதி நோக்கில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 130 கொள்கலன்களில் 29 கொள்கலன்கள் தற்போது வரை மீள் ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு இறக்குமதிக்கு அங்கீகாரம் வழங்கக்கூடிய வகையிலான சுற்றாடல் அல்லது அபாயகரமான கழிவுகள் தொடர்பான அனுமதிப் பத்திரத்தையும் குறித்த நிறுவனம் பெற்றிருக்கவில்லை எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
2013 ஜூலை 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகவே கட்டுநாயக்க ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தினுள் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளை இந்நிறுவனம் செயற்படுத்தியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மூலம் தெரிய வந்துள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய வர்த்தகமொன்றை ஆரம்பிப்பதற்கு வெளிநாட்டு மூலங்களின் ஊடாக குறைந்தபட்சம் 65% முதலீடு செய்யப்பட வேண்டும். அத்துடன் புதிய வர்த்தகத்தின் ஊடாக 50 இலட்சம் அமெரிக்க டொலர் (87. 89 கோடி இலங்கை ரூபா) குறைந்தபட்ச முதலீட்டுடனான உடன்படிக்கையில் குறித்த நிறுவனமும் முதலீட்டு சபையும் கையொப்பமிட வேண்டும்.
கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள சுங்கத் திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை சுங்கத் திணைக்களம் ஏற்பாடு செய்தது. குறித்த சந்திப்பில் சுங்கப்பிரிவின் ஊடகப் பிரிவு பேச்சாளர் சுனில் ஜயரத்ன பின்வருமாறு விளக்கமளித்தார்.
” சர்வதேச வர்த்தகம் தொடர்பில் வழங்கப்படும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி பாவனைக்கு உட்படுத்தப்பட்ட மெத்தை மற்றும் வேறு கழிவுகள் அடங்கிய 241 கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. அந்த வகையில் இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு சுதந்திர வர்த்தக வாய்ப்புக்களை பெற்றிருக்கும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றினால் 130 கழிவுக் கொள்கலன்கள் பொறுப்பேற்கப்பட்டு விட்டன. இதனுடன் மேலும் இரு பிரபல தனியார் நிறுவனங்கள் தொடர்புபட்டுள்ளன.
கழிவு முகாமைத்துவம் மற்றும் அதன் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பில் 1989 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ‘பாசெல்’ ஒப்பந்தத்தில் இலங்கையும் அங்கத்துவம் வகிக்கின்றது. அதன்படி கழிவுகள் என்று இனங்காணப்பட்டவற்றை ஒரு நாட்டில் இறக்குமதி செய்யும்போது அந்நாட்டின் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதன் சாதக பாதகத் தன்மை தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுகள் குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது எமக்குத் தெரியாது. எனினும் நாம் இவ்விடயம் தொடர்பில் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்தோம்.
உலகளவில் மருத்துவக் கழிவுகள், இலத்திரனியல் கழிவுகள், அணுக்கழிவுகள் உள்ளிட்ட பெருமளவான கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவை பல மில்லியன்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் பின்னணியிலுள்ள ஆபத்து இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. அரசாங்கத்திடமும் நாங்கள் இதுபற்றி எடுத்துக் கூறி வந்திருக்கிறோம்.
இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதன் முடிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளை மீள் ஏற்றுமதி செய்வதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்றார்.
இதேவேளை இலங்கைக்கு குப்பைகளை இறக்குமதி செய்ததாகக் கூறும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஹேலீஸ் ப்ரீ ஸோன் நிறுவனம் மறுப்பதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் ருவன் வைத்தியரத்ன தெரிவிக்கிறார்.
கப்பல் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் ஈ.டி.எல்.கலம்போ நிறுவனத்தினால் சிலோன் மெட்டல் ப்ரொசஸிங் கோப்ரேஷன் நிறுவனத்திற்கு உரித்தான பாவிக்கப்பட்ட இந்த மெத்தைகளை மீண்டும் பதப்படுத்தி மீள் ஏற்றுமதி செய்வதற்காக ஹேலீஸ் ப்ரீ ஸோன் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய சரக்கு வரையறுக்கப்பட்ட ஈ.டி.எல். கலம்போ தனியார் நிறுவனத்தினால் ஹேலீஸ் ப்ரீ ஸோனுக்கு அனுப்பப்பட்டது. இதன் உரிமையாளர்கள் வரையறுக்கப்பட்ட ஹேலீஸ் நிறுவனத்தாரே என சுங்கத் திணைக்களத்தினர் கூறினாலும் குறித்த சரக்குக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என வணிகப் பட்டியலில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் எவ்வித அபாயகரமான பொருட்களும் இல்லை என ஆவணங்களின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே குறித்த 130 கொள்கலன்கள் பொறுப்பேற்கப்பட்டன.
130 கொள்கலன்களில் 29 கொள்கலன்கள் தற்போது ஹேலீஸ் ப்ரீ ஸோன் நிறுவனத்தினால் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குறித்த மெத்தைகளை வேறுபடுத்தி அவற்றின் உறை, பஞ்சுகள் மற்றும் கம்பிகளை அகற்றி அவற்றை வெவ்வேறாக பொதியிட்டு சிலோன் மெட்டல் நிறுவனத்தின் தேவையின் பிரகாரம் மீள் ஏற்றுமதி செயற்பாடுகளையே நாம் மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில் தற்போதைய நிலையில் எஞ்சியுள்ள மெத்தைகளை விரைவாக செயன்முறைக்கு உட்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். கொழும்பு துறைமுகத்தில் உள்ள 111 கொள்கலன்களுக்கும் எமது நிறுவனத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.
பாராளுமன்றில் கேள்வி
கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் குறித்த குப்பை விவகாரம் குறித்த பிரச்சினை விவாதிக்கப்பட்டது.
கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் எந்த நிறுவனத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன என்ற தகவலை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பாராளுமன்றத்தில் விசேட கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, கழிவுப்பொருட்கள் அடங்கிய 200 க்கும் அதிகமான கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றுள் 102 கொள்கலன்கள் சுங்கத் திணைக்களத்தினால் துறைமுகத்தில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளை விட அதிகமான காலப்பகுதியில் இவை கண்டறியப்படாமல் இருந்துள்ளன. இவை தொடர்பான அவதானம் இல்லாமல் இருந்துள்ளது. இதில் இதுவரை காலமும் கொண்டுவரப்பட்ட கழிவுகள் எவ்வளவு? இதில் எவ்வளவு தொகையான கழிவுகள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகளில் ஒரு தொகை குப்பைகள் மிகவும் சூட்சுமமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரப்பி விடப்பட்டுள்ளன. இதனால் சூழலுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலைமைகள் உருவாகும். 2013 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலில் வழங்கப்பட்ட சுதந்திரத்துக்கு அமையவே இந்த கழிவு வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதான சில நிறுவனங்கள் தொடர்பில் இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஆனால் இது குறித்து இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே எந்த நிறுவனம் இந்தக் குப்பைகளை கொண்டு வந்துள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச, கடந்த 2013 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வைத்துக்கொண்டு 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குப்பைகளை எம்மீது கொட்ட முயற்சிக்கின்றனர். 2013 இல் இவ்வாறு சுங்கச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் 2013 இல் இருந்து குப்பைகளை கொண்டு வரவில்லை. 2017 ஆம் ஆண்டில் தான் குப்பைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆகவே இந்தக் குப்பைகளை கொண்டு வரும் நிறுவனம் யார் என்பதை வெளியிட வேண்டும். அப்போது இவர்கள் எந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என்றார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பியும் அதற்கான பதிலைக்கூற அரச தரப்பினர் சபையில் இருக்கவில்லை. எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்த வார இறுதிக்குள் பதில் வழங்க உரிய அமைச்சர்களை வலியுறுத்துவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக எமது நாடு ஏதாவது ஒரு பிரச்சினையை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரித்தானியாவிலிருந்து சட்ட விரோதமாக குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த விவகாரம் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
இந்தக் குப்பைகள் மூலம் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் குறித்த குப்பைகளினுள் இரத்தம், மனித அவயவங்கள் உள்ளிட்ட கழிவுகளும் காணப்படுவதால் இதன் மூலம் பாரிய சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இவற்றிலிருந்து வெளியாகும் கழிவு நீர் முத்துராஜவெல பாதுகாக்கப்பட்ட வனத்தை சென்றடைவதாகவும் சூழலியல் வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதற்கிடையில் இலங்கைக்கு குப்பைகளைக் கொண்டு வந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சூழலை பாதுகாக்கும் கேந்திர நிலையத்தினால் மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குப்பைகளை நாட்டுக்கு கொண்டு வந்த தரப்பினர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த மனுவின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம் ஏதேனும் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியை பெற வேண்டும். ஆனால் குறித்த அனுமதி பெறப்படவில்லை என்று தற்போது ஊர்ஜிதம் ஆகியுள்ள நிலையில் சுங்கத்திணைக்களத்திடம் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
இந்தக் குப்பை விவகாரத்தின் பின்னணியில் பல மறைகரங்கள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளன. பல்தேசிய கம்பனிகளின் நலன்களுக்காக இவ்வாறு ஆபத்தான வெளிநாட்டுக் குப்பைகள் இலங்கைக்குள் தருவிக்கப்படுகின்றனவா எனும் கேள்வியும் அச்சமும் தற்போது எழுந்துள்ளது. புத்தளம் அருவாக்காலு குப்பை கொட்டும் திட்டம் நிர்மாணிக்கப்பட்டதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழ ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் சேரும் குப்பைகளையே முறையாக நிர்வகிக்கத் திராணியற்ற அரசாங்கம் வெளிநாட்டுக் குப்பைகளை கொண்டு வர அனுமதி வழங்கியிருக்குமாயின் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் குப்பைகளைக் கொண்டுவர சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அனுமதியும் உடன் இரத்து செய்யப்பட வேண்டும்.
பிந்திக் கிடைக்கும் தகவல்களின்படி, குறித்த குப்பைக் கொள்கலன்களை மீளவும் பிரித்தானியாவுக்கே அனுப்பி வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. அதேபோன்று பிரித்தானியாவின் பெயருங்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்தும் அந்நாட்டிலும் பிரத்தியேக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எது எப்படியிருப்பினும் இலங்கையை சர்வதேச நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாற்ற அனுமதிக்க முடியாது. இதற்கு எதிராக இன மத பேதமின்றி சகலரும் இணைந்து களத்தில் இறங்கிப் போராட வேண்டும். இன்றேல் அடுத்த சந்ததியினர் குப்பைக்காடுகளின் நடுவிலேயே நோயுடனும் நொம்பலத்துடனும் வாழ்க்கையைக் கொண்டு செல்ல நேரிடும்.
எம்.ஏ.எம்.அஹ்ஸன்
vidivelli