விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும்
அனைவருக்கும் ஒரே சட்டம். இந்தப் பிரசாரம் யாரை இலக்கு வைக்கிறது?
சட்டம் சட்டமாக இருக்கமுடியாது. அது நிலைத்த நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறிச் செயற்படும்போது
-Lydia Maria Child
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்களில் முதன்மையானவை. அதன் அடிப்படையில் தான் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்ற இன்னொரு விழுமியம் பெறப்படுகின்றது. வாய்ப்புக்கேடாக பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் இந்த விழுமியம் வெறும் கோட்பாடாகவே உள்ளது. சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின்படி ஒரு நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் அரசின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுப் பின்பற்றுவது இன்றியமையாதது. பண்பட்ட நாகரிகமடைந்த சமூகமொன்றில் இதுதான் பிரஜைத் தன்மை (Citizenship) எனப்படுகின்றது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய சர்வதேச ஒழுங்கில் சட்ட ஆட்சிக்கு (Rule of Law) இன்னொரு பக்கம் உள்ளது. ஐ.நா. வும் அதன் கிளை நிறுவனங்களும் அவற்றின் கோட்பாடுகளும் பன்மைத்துவத்தினை (Pluralism) அடிப்படையாகக் கொண்டது. சட்டத்தின் ஆட்சி பல்வேறு சமூகங்களின் தனிப்பட்ட கலாசார, பண்பாட்டு, சமய அடையாளத்தை (Identify) அங்கீகரிக்கும் வகையிலேயே தேச அரசுகளின் எல்லைக்குட்பட்ட சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இதுவே சர்வதேச மரபு.
இன,மொழி, சமய, கலாசார, பிராந்திய, தனித்துவங்களைக் கொண்ட எந்தவொரு சமூகக் குழுமத்தினதும் அடையாளங்களைச் சிதைத்து ஒரு நாட்டில் கணித ரீதியில் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளவர்கள் எத்தகைய திணிப்பையும் மேற்கொள்ள முடியாது என்பதுதான் இதன் மறு அர்த்தமாகும்.
அனைவருக்கும் ஒரே சட்டம்
4/21 ற்குப் பிந்திய விவாதங்களில் “அனைவருக்கும் ஒரே சட்டம்” என்ற பிரசாரம் முன்பை விட மிகக் கறாரான தொனியில் முன்னெடுக்கப்படுகின்றது. மதத் தீவிரவாதக் குழுக்கள் மட்டுமின்றி சில அரசியல்வாதிகளும் இந்த இனவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் வஜிர அபேவர்த்தன உள்ளிட்டு சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர வரை பலரும் இதே கருத்தைக் கூறி வருகின்றனர். பயங்கரவாதமற்ற எதிர்கால இலங்கையை உருவாக்கும் சுதந்திரக் கட்சியின் முன்மொழிவுகளில் ஒன்றாகவும் இந்தக் கோஷம் முன்வைக்கப்பட்டுள்ளது. கண்டியில் நடந்த பொதுபலசேனாவின் ஒன்றுகூடலிலும் இந்தக் கோரிக்கை மிகக் காட்டமாக வைக்கப்பட்டது.
“அனைவருக்கும் ஒரே சட்டம்”என்ற வாதம் பல்வேறு கோணங்களில் நோக்கப்பட வேண்டியதாகும். காரணம் அதற்குள் சில சுய முரண்பாடும் மங்கலான பக்கங்களும் உள்ளன. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் தாய் சட்டமாக உள்ள நிலையில் அதையொட்டியதாகவே பொருண்மைச் சிவில் சட்டங்கள் (Substantive Civil Law) நடைமுறையில் உள்ளன. வணிகச் சட்டம் (Commercial Law), சொத்துச் சட்டம் (Property Law), காணி, போக்குவரத்து, சுற்றுச் சூழல், பணக் கொடுக்கல் வாங்கல் (Financial Transaction ), குற்றவியல், குடும்பவியல் மற்றும் இன்ன பிற சட்டங்கள் உள்ளன. இவற்றில் குடும்ப விவகாரம் தவிர ஏனைய அனைத்து சட்டங்களும் இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. அனைத்து பிரஜைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை. இதில் இன, மத, கலாசார வேறுபாடுகள் எதுவும் இல்லை. இந்நிலையில் “அனைவருக்கும் ஒரே சட்டம்” என்று கூச்சல் போடுபவர்கள் வைக்கும் இலக்கு என்ன? எனும் கேள்வி தவிர்க்க முடியாதது.
முஸ்லிம்கள் குறித்து 2012 ற்குப் பின்னர் மதத் தீவிரவாதக் குழுக்களாலும் சில அரசியல் இனவாதிகளாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்கள் பல. முஸ்லிம் சனத்தொகை அதிகரிப்பு, ஹலால் விவகாரம் ஊடாக முஸ்லிம்கள் பெரும்பான்மையினரின் பணத்தை சூறையாடுகின்றனர். அளவுக்கு அதிகமாகப் பள்ளிவாசல்களை நிர்மாணிக்கின்றனர். மத்ரஸாக் கல்வி முறையில் தீவிரவாதம் ஊட்டப்படுகின்றது. மற்றும் இன்ன பிற. இவற்றின் தொடர்ச்சியால் வந்த ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் அனைத்து விவகாரங்களிலும் பிரத்தியேகமான சட்டமும் நீதிமன்றங்களும் இருக்கின்றன. அதை ஒழிக்க வேண்டும் என்ற பிரசாரமாகும்.
“அனைவருக்கும் ஒரே சட்டம்” என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என விவரம் தெரியாமல் உளறிக் கொட்டும் இனவாதிகள் ஏதோ முஸ்லிம்களுக்கு இந் நாட்டில் வேறொரு தனிச் சட்டம் (Distictive Law) இருப்பதான ஒரு பூச்சாண்டியைக் காண்பிக்கின்றனர். ஏலவே பயமூட்டப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தை மென்மேலும் கிளர்ந்தெழச் செய்ய இந்த பூதத்தைக் கையில் எடுக்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களுக்கு இங்கு நடைமுறையில் இருப்பது முஸ்லிம் தனியார் சட்டமே (Muslim Personal Law) ஒழிய முஸ்லிம் தனிச் சட்டம் (Separate Law for Muslims) அல்ல. இந்த உண்மையை சிங்கள சிவில் சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டியது சமூக நிறுவனங்களின் பொறுப்பாகும்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதுதான் அனைவருக்கும் ஒரே சட்டம்
என்பதன் அடிநாதமா?
2012 தம்புள்ளைப் பள்ளிவாசல் சம்பவத்திற்குப் பின்னர் எகிறி எழுந்த முஸ்லிம் விரோதப் பிரசாரங்களில் முஸ்லிம் தனியார் சட்டமும், காதி நீதிமன்றங்களும் முக்கியமானவை. அவற்றை இல்லாதொழிக்க வேண்டும் என 2014 இல் தலைகாட்டிய பொதுபலசேனா கர்ச்சித்து வருவதை நாம் அறிவோம். முதலில் தனியார் சட்டம் என்றால் என்னவென்பதை ஞானசாரர் புரிந்து கொள்ள வேண்டும். அதன் நீண்ட வரலாற்றையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏலவே நாம் குறிப்பிட்ட அனைத்து சட்டங்களிலும் முஸ்லிம்களுக்கு நாட்டின் பொதுச் சட்டத்திலிருந்து முற்றிலும் வேறான, தனித்த பிரத்தியேகமானதொரு சட்டம் இங்கு நடைமுறையில் உள்ளது என்றும் அதற்கு தனியான நீதிமன்றங்கள் உள்ளது என்றும் ஞானசாரர் ஒரு பிரசாரத்தை பெரும்பான்மை மக்களிடையே கொண்டு செல்கிறார். இந்தப் பொய்ப் பிரசாரம் மிக ஆபத்தானது. முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களைக் கிளர்ந்தெழச் செய்யும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
இந்த வெறுப்புப் பிரசாரத்தினால் பெரும்பான்மையினர் முஸ்லிம்களை வெறுப்புக் கண்கொண்டு பார்க்கும் ஒரு கொதிப்பான சூழலை உருவாக்க பலசேனா முயல்கிறது. தெரண, ஹிரு, சுவர்ணவாஹினி போன்ற அலைவரிசைகள், நெத் எப்.எம். போன்ற வானொலிகளும் மேலும் சில அச்சு ஊடகங்களும் இந்தப் பொய்ப் பிரசாரத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து கொதிப்பான சூழலுக்கு (Boiling Situation) களம் அமைக்கின்றன. 4/21 ற்குப் பின்னர் இந்தப் பிரசாரத் தீ எகிறி வீசுகின்றது.
வடமாகாண தமிழ் சமூகத்திற்கு தேச வழமைச் சட்டம் இருப்பது போல கண்டி சிங்களவர்களுக்கு கண்டிய சட்டம் உள்ளது போல, அமுல்படுத்தப்படாவிட்டாலும் முக்குவர் சாதிக்கு முக்குவர் சட்டம் அங்கீகரிக்கப்பட்டிருப்பது போல் முஸ்லிம்களுக்கு தனியார் சட்டம் இருக்கிறதே ஒழிய தனிச் சட்டம் என்று எதுவும் கிடையாது. விவாகம், விவாகரத்து, வாரிசுரிமை, பொதுச் சொத்து ஆகிய 4 விடயங்களையும் உள்ளடக்கியதே முஸ்லிம் தனியார் சட்டம். தேச வழமை, கண்டி, முக்குவர் சட்டம் என்பனவற்றிலும் அதே உள்ளடக்கம் ஏனைய விவகாரங்கள் அனைத்திலும் இலங்கை முஸ்லிம்கள் நாட்டிலுள்ள பொதுவான சிவில் சட்டங்களையே பின்பற்றுகின்றனர். அதில் யாருக்கும் ஐயம் இருக்க வேண்டியதில்லை. முஸ்லிம்களுக்கு தனியான கல்விச் சட்டமோ, குற்றவியல் சட்டமோ, காணிச் சட்டமோ, வீதிப் போக்குவரத்துச் சட்டமோ இல்லை.
முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்கிவிட்டால் அனைவருக்கும் ஒரே சட்டமாகிவிடும் எனக் கோருவது ஆவேஷம் நிறைந்த ஒரு வாய்ச்சவடால் மட்டுமல்ல, கடைந்தெடுக்கப்பட்ட முட்டாள்தனமும் ஆகும். காரணம் அனைவருக்கும் ஒரே சட்டம் என்றால் கண்டியச் சட்டம், தேச வழமை, முக்குவர் என அத்தனை சட்டங்களையும் இல்லாதொழிக்க வேண்டும். அது சாத்தியமேயில்லை. இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு 300 ஆண்டுகால வரலாறு உள்ளது. முஸ்லிம்கள் விவாக, விவாகரத்து விவகாரங்களை தமது சமய அடிப்படையில் கையாள்வதற்கு ஒல்லாந்தரினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் ஆங்கிலேயரால் தொடர்ந்தும் அங்கீகரிக்கப்பட்டு பல திருத்தங்களோடு 1951 லிருந்து இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருவது.
முஸ்லிம் தனியார் சட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் என்ன தொடர்பு? தனியார் சட்டத்தில் ஏதும் தீவிரவாதம் உள்ளதா? முஸ்லிம்கள் தமது தனித்துவங்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் அவற்றைப் பின்பற்றுவதால் நாட்டுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஞானசாரருக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. எந்தவொரு சமூகத்திற்கும் அதனால் அச்சுறுத்தலோ பிரச்சினையோ இல்லை. சிலர் தமது அந்தரங்க உறுப்புக்களை அடிக்கடி சொறிவதால் சுகம் கொள்வது போல முஸ்லிம் சமூகத்தின் உள்விவகாரங்களை தேசியத்தோடு தொடர்பான தனிப்பட்ட விஷயங்களை ஞானசாரர் தொடர்ந்தும் சொறிந்து கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன?
தோல்வியடைந்து வரும் சட்டத்தின் ஆட்சி
ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதற்கான ஒரே ஆதாரம் சட்டத்தின் ஆட்சிதான். ஓர் அரச இயந்திரம் அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளது. வாய்ப்புக்கேடாக இலங்கையில் சட்டத்தின் ஆட்சி வீழ்ந்து வருகிறது என்பதை உறுதி செய்யும் உதாரணங்கள் பெருகி வருகின்றன. கண்டியில் ரத்ன தேரரும் காலியில் சில பிக்குகளும் கல்முனையில் ஒரு பிக்குவுடன் சில அரசியல்வாதிகளும் ஈடுபட்ட உண்ணாவிரதங்களும் கோரிக்கைகளும் சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற அமைச்சரை பதவிநீக்கம் செய்வதற்கு ஒரு ஜனநாயக வழிமுறை நாட்டில் உள்ளது. அதற்கென சட்ட ஒழுங்கும் நீதிமன்றப் படிமுறைகளும் இருக்கின்றன. அரசாங்கம், நீதித்துறை, சட்ட ஒழுங்கு முகவர்கள் என்றெல்லாம் இருக்கின்றனர். வெறும் விமர்சனமோ அவதானமோ ஊகமோ பொய்க் குற்றச்சாட்டோ ஒருவரைப் பதவி நீக்குவதற்கான அல்லது ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்களாக முடியாது. இந்நிலையில் ஒரு தேரர் ஓர் அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தி உண்ணாவிரதம் இருந்தால் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற ஒரு கேவலமான அரசியல் சூழல் உருவானால் சட்டத்தின் ஆட்சி என்பதன் அர்த்தம் என்ன?
இலங்கை ஒரு ஜனநாயக சோஷலிஸக் குடியரசு என்கிறோம். ஆனால் உண்ணாவிரதங்களும் மதகுருக்களின் ஆவேஷ அடாவடித்தனங்களும் இன்னொரு சமூகத்திற்கு எதிரான வெறுப்புக் குற்றங்களும் (Hate Crimes) சட்டத்தின் ஆட்சியைக் கேலிக் கூத்தாக்குகின்றனர். அவசரகால சட்டத்தின் கீழ் பெரும் தொகையானோர் ஒன்று கூடுவதற்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டும். ஆனால் அவசரகால சட்ட விதிகளை மீறி கண்டியில் மதகுருக்கள் பெரும் இனவெறி மாநாட்டை நடத்தினர். சட்டத்தின் ஆட்சி ஏன் இங்கு பிரயோகிக்கப்படவில்லை.
நாட்டில் ஒரு மக்கள் ஆணையைப் பெற்ற ஜனநாயக அரசும் சட்டங்களை அமுலாக்கும் முகவர்களும் (Law Enforcing Agencies) இருக்கின்ற நிலையில் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரர் என்பதைப் போல அரசியல்வாதிகளும் மதவாதிகளும் செயல்பட முனைவது ஜனநாயக விரோதமாகும். முஸ்லிம்கள் இதைத்தான் உண்ண வேண்டும், இதைத்தான் படிக்க வேண்டும், இஸ்லாத்தின் இந்தப் பிரிவைத்தான் பின்பற்ற வேண்டும், அபாயாவைக் கழற்ற வேண்டும், பயான்களைப் பதிவு செய்ய வேண்டும், அறபுப் பதாதைகளை நீக்க வேண்டும், மத்ரஸாக்களை மூட வேண்டும், முஸ்லிம்களின் வாழ்வியல் இந்த நாட்டில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கோடு கிழிக்கும் அதிகாரம் இன்றைய தேச அரச முறையில் எந்தவொரு அரசாங்கத்திற்கும் கிடையாது. அரசாங்கத்திற்கே இல்லாத இந்த அதிகாரம் ஞானசார போன்ற, ரத்ன தேரர் போன்ற ஒற்றை மனிதர்களுக்கு எங்கிருந்து வருகின்றது? முஸ்லிம்கள் இவ்விவகாரங்களை சட்ட ரீதியான முறையில அணுக வேண்டிய தேவை உள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள்
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பது தான் சட்ட ஆட்சியின் அடித்தளமாகும். ‘நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம்’ எனக் கோஷம் எழுப்புவோர் இந்த அர்த்தத்தில் அக்கோஷத்தை எழுப்புவார்களாயின் அதனை முஸ்லிம்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்பர். துரதிஷ்டமாக சட்டம் பாகுபாடாகவே பிரயோகிக்கப்படுகின்றது. பெரும்பான்மை என வரும்போது ஒரு மாதிரியாகவும் முஸ்லிம்கள் என்று வரும்போது வேறொரு மாதிரியாகவும் சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது. சட்டத்தில் முஸ்லிம்கள் மிக மோசமான பாகுபாட்டுடனும் துவேஷமாகவும் நடத்தப்படுகின்றனர்.
4/21 க்கும் பிந்திய இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள், பாதுகாப்புக் கெடுபிடிகள் தான்தோன்றித்தனமான கைதுகள், தடுத்து வைப்புகள், விசாரணைகள் சட்டம் எவ்வளவு தூரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதற்கு உதாரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக சந்தேகத்திற்கிடமான வழிகளில் பணம் சம்பாதித்துள்ளாரா என்று வைத்தியர் ஷாபி மீது விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். ஆனால் ஷாபியை விட மிகப் பெரிய ஊழல் பெருச்சாளிகளும் நாட்டைத் தின்று சுற்றியுள்ள கடலில் கைகழுவிய பெரும் பெரும் பண மோசடிக்காரர்களும் அரசியல் களத்தில் ஒய்யாரமாக உலா வருகின்றனர். அவர்கள் மீது சட்டம் பாயவில்லையா?
திகன கலவரத்திலும் குருநாகல் இனவெறியாட்டத்திலும் நேரடியாகப் பங்கு கொண்ட அமித்வீரசிங்க கைது செய்யப்பட்டு ஒரு சில தினங்களிலேயே விடுதலையானான். ஆனால் அற்ப சொற்ப காரணங்களுக்காகவும் இராணுவத்தினரின் தவறான புரிதல்களாலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல அப்பாவி முஸ்லிம்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. மே மாதம் தலதா மாளிகைப் பக்கம் சென்ற இரு முஸ்லிம் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் இராணுவமும் பொலிஸாரும் பார்த்திருக்க கடுமையாகத் தாக்கப்பட்டு இரத்தம் ஓட்டப்பட்டனர்.
புனித ரமழானில் முஸ்லிம்களின் ஆன்மாவாகக் கருதப்படும் பள்ளிவாசல்களின் நடுப்பகுதிக்குள் ஊடுருவிய காடையர் கூட்டம் அங்கிருந்த குர்ஆன் பிரதிகளை நடுப்பள்ளிக்குள்ளேயே எரித்துச் சாம்பலாக்கி புனித இடங்களையெல்லாம் நொறுக்கித் தகர்த்தனர்.
எந்தவொரு குற்றவாளியும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு முறையாகத் தண்டிக்கப்படவில்லை. இந்நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமமா? என்ற ஆவேஷமான கேள்வியை இது எழுப்புகின்றது.
தர்மச் சக்கரம் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்ததாக ஒரு அப்பாவி முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் 1915 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரங்களில் பல நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அதன் சூத்திரதாரிகளுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
இந்தக் கோணத்திலிருந்து ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற பிரசாரத்தை முன்வைப்பார்களாயின் அதற்கு முஸ்லிம்கள் முழு ஆதரவு வழங்குவார்கள். அதை விடுத்து முஸ்லிம் விரோத பகையுணர்வையும் முஸ்லிம்கள் குறித்த பயத்தையும் சிங்களவர்கள் மத்தியில் விதைத்து இனக்கலவரங்களைத் தூண்டும் நோக்கிலான இத்தகைய பொய்ப் பிரசாரங்களை முஸ்லிம்கள் அறிவுபூர்வமாக எதிர்கொள்ள வேண்டும். மத, கலாசார சுதந்திரம் மூச்சுக்காற்றுக்கு ஒப்பானது என்ற அடிப்படை உண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு கவனமாகச் செயற்பட வேண்டும்.
முஸ்லிம்கள் விடும் தவறுகள்
முஸ்லிம்கள் செறிவாக வாழும் சில பிரதேசங்களில் இளைஞர்கள் சிலர் போக்குவரத்து ஒழுங்குகளை மீறிச் செயற்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகி இருந்தன. கல்முனை, காத்தான்குடி, பேருவளை, திஹாரி, அக்குரணை போன்ற பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டை போக்குவரத்து பொலிஸார் பலமுறை முன்வைத்துள்ளனர். இது குறித்த சில வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி சிங்கள சமூகத்தின் கடும் விமர்சனங்களை எழுப்பியது. கலவரங்களைத் தூண்ட விளையும் விஷம சக்திகளுக்கு இது வாய்க்கு அவலாகியது.
சமீபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித பேருவளையில் இவ்விடயம் குறித்து முஸ்லிம் மக்களோடு தான் கலந்துரையாடிய பின்னர் தற்போது தலைக்கவசம் அணிந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இன்னும் சில இடங்களில் முஸ்லிம்கள் இத்தகைய வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை தொடர்ந்தும் மீறி வருவது கண்கூடு. நான் வசிக்கும் திஹாரியில் இதனை ஒவ்வொரு நாளும் நான் காண்கிறேன்.
கடத்தல், இலஞ்சம் வழங்கல், தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருத்தல், தலைக்கவசம் அணியாதிருத்தல், நிறுவனங்களைப் பதிவு செய்யாதிருத்தல், நிதிக்கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படைத் தன்மையுடன் கையாளாதிருத்தல் போன்ற சில விடயங்களில் நாட்டின் சட்டங்களை மதித்துச் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை கவனிப்புக்குரியது. இவை முஸ்லிம்கள் தரப்பில் இடம்பெறும் பாரதூரமான தவறுகளாகும். இதை முஸ்லிம்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கான பரந்துபட்ட விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள் உள்ளக ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கலாநிதி றவுப் செய்ன்
vidivelli