முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று அமைச்சு பொறுப்புகள் ஏற்பு?
பிரதமருடனான சந்திப்பின் பின் இணக்கத்துக்கு வந்ததாக தகவல்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைக்கு தீர்வுகளைக் கோரி தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினமா செய்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தங்களது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர் பீடம் இன்று (நேற்று) அவசரமாக ஒன்றுகூடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இச்செய்தி எழுதப்படும் வரையில் கலந்துரையாடல் நடாத்தி வந்தது.
நேற்றுமாலை, அமைச்சுப்பதவிகளை இராஜினமா செய்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முஸ்லிம்களின் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள், வடமேல் மாகாணத்தில் அண்மையில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பில் கலந்துரையாடினார்கள். அந்நஷ்டஈடுகள் அடுத்த வாரம் வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.
பிரதமருடனான சந்திப்பினையடுத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் இல்லத்தில் ஒன்றுகூடி அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பது தொடர்பில் கலந்துரையாடினார்கள்.
இக்கலந்துரையாடலின்போது பெரும்பாலானவர்கள் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேர் தங்கள் அமைச்சுப் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்து கொண்டனர். அவர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிமும் எம்.எச்.ஏ.ஹலீமும் தங்களது முன்னைய அமைச்சுப் பதவிகளை ஏற்கனவே பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 7 பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏ.ஆர்.ஏ. பரீல்