ஆகஸ்ட் 15, 16 ஆம் திகதிகளில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை
அமைச்சர் ஹலீம் நடவடிக்கை
முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால்வழங்கப்படும் விடுமுறையைத் தொடர்ந்து மேலும் இவ்வாரத்தில் காணப்படும வியாழன் மற்றும் வெள்ளி 15, 16 ஆம் திகதி ஆகிய இரு நாட்களிலும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஆகஸ்ட் 12 ஆம் திகதி முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு அரசாங்கப் பாடசாலை 13 ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மறுநாள் 14 ஆம் திகதி போயா விடுமுறை தினத்தைத் தொடர்ந்துமீண்டும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் பாடசாலை நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
பெருநாள் விடுமுறையுடன் குறித்த 15, 16 ஆம் திகதிகளில் தூர இடங்களில் உள்ள ஆசிரியர்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். மேலும் மாணவர்களின் பாடசாலை வரவும் மிகவும் குறைந்து காணப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஆகஸ்ட் 15, 16 ஆகிய இரு நாட்களையும் விடுமுறை தினங்களாக ஆக்கித்தருமாறு தூர இடங்களிலுள்ள ஆசிரியர்களும், பெற்றோர்களும் எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே ஆகஸ்ட் 15, 16 ஆம் திகதிகளில் வழங்கப்படும் விடுமுறை தினங்களை எதிர்வரும் ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களிலுள்ள சனிக்கிழமை நாளில் பாடசாலை இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சிடம் அமைச்சர் ஹலீம் மேலும் கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இக்பால் அலி
vidivelli