முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் : ஏன் இந்த நிலை? எதற்கு இன்னும் குழுக்கள்?

0 965

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டத் திருத்தம் தொடர்­பி­லான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்­கென நீதி­ய­மைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம் 2018 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 22 ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்­டது.

முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­னாலும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னாலும் ஆரா­யப்­பட்ட இவ்­வ­றிக்கை இவர்­களின் பிரே­ர­ணை­க­ளுடன் நீதி­ய­மைச்­ச­ருக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்­கான இறுதித் தறு­வாயில் இருந்­தமை ஊட­கங்­க­ளி­னூ­டாக நாம­னை­வரும் அறிந்த உண்மை.

இத­னி­டையில் ஒரு சில தினங்­க­ளுக்கு முன்னர் ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்ட ஒரு செய்தி மீண்டும் இவ்­வி­டயம் தொடர்­பி­லான ஒரு கேள்­விக்­கு­றி­யையும், திருப்­தி­யற்ற நிலை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டத் திருத்­தங்­க­ளுக்­கான சிபா­ரி­சு­க­ளுக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் வழங்­கப்­பட்ட அங்­கீ­கா­ரத்தை மீளாய்வு செய்­வ­தற்கு நான்கு பேர­டங்­கிய குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. அக்­கு­ழுவில் ஹலீம், பைஸர் முஸ்­தபா, ஹக்கீம், றிஸ்வி முப்தி உள்­ள­டக்கம்” என்­ப­துதான் அந்தச் செய்தி.

கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் தொடர்பில் பல வழக்­கு­களில் காதிகள் சபை முதல், உயர் நீதி­மன்றம் வரை ஆஜ­ரா­கின்ற மற்றும் காதி நீதி­மன்­றங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட பல திறத்­த­வர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கு­கின்ற ஒரு சட்­டத்­த­ரணி என்ற ரீதி­யிலும் நாட­ளா­விய ரீதியில் இவ்­வி­டயம் தொடர்பில் சேவை­யாற்­றிய கள அனு­பவம் மற்றும் காதி­க­ளுக்குப் பல வரு­டங்­க­ளாகப் பயிற்சி வழங்­கிய வள­வா­ளர்­களில் ஒருவர் என்ற ரீதி­யிலும் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழுவில் 9 வரு­டங்­க­ளுக்கு மேலாக அய­ராது சேவை­யாற்­றிய ஒரு உறுப்­பினர் என்ற ரீதி­யிலும் இந்தச் செய்தி என்னைச் சற்று நிலை­கு­லைய வைத்­தது.
முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­னாலும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னாலும் வழங்­கிய அங்­கீ­கா­ரத்தை மீளாய்வு செய்­வ­தற்கு மீண்டும் எதற்­காக ஒரு குழு அமைக்­கப்­பட வேண்டும்?

பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களும், அமைச்­சர்­களும் கொண்ட ஒரு குழுவில் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வரோ, அமைச்­சரோ அல்­லாத ஒருவர் குழு அங்­கத்­த­வ­ராக எவ்­வாறு நிய­மிக்­கப்­பட முடியும்?

அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழுவில் அகில இலங்கை ஜம்­மி­யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி எவ்­வாறு உள்­ள­டக்­கப்­ப­டுவார்?

அஷ்ஷேக் றிஸ்வி முப்தி, நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் ஒரு அங்­கத்­த­வ­ராக இருந்து இரு கருத்­துக்கள் கொண்ட அவ்­வ­றிக்­கையில் ஒரு கருத்து சார்­பாகக் கையெ­ழுத்­திட்­டவர். இவ்­வாறு இருக்­கும்­போது அவர் இந்தக் குழுவில் எவ்­வாறு ஓர் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்?

9 வரு­டங்­க­ளாகக் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்டுச் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்கை தொடர்பில் தற்­போது முடி­வெ­டுக்­க­வேண்­டிய முழுப்­பொ­றுப்பும் அர­சியல் தலை­வர்­க­ளிடம் இருக்­கத்­தக்க, அகில இலங்கை ஜம்­மி­யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி இக்­கு­ழுவில் எவ்­வாறு நிய­மிக்­கப்­ப­டுவார்?

இவர் இக்­கு­ழுவில் உள்­ள­டக்­கப்­ப­டு­வா­ராக இருந்தால் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழுவில் மறு கருத்­துக்கு சார்­பாகக் கையெ­ழுத்­திட்­ட­வர்­களும் இந்தக் குழுவில் உள்­வாங்­கப்­பட வேண்டும். பெண்­க­ளையும் ஒரு பகு­தி­யி­ன­ராகக் கொண்­டுள்ள விட­யங்­களை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் ஆள்­கின்­ற­மை­யினால் தகு­தி­வாய்ந்த, பெண்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் உறுப்­பி­னர்­களும் நிய­மிக்­கப்­பட வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்­தினால் இயற்­றப்­பட்ட ஒரு நாட்டின் சட்­டத்தைத் திருத்­து­வ­தற்­கு­ரிய சிபா­ரி­சு­களை ஆராய்­வ­தற்கு அமைச்­சர்­க­ளு­டனும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டனும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைவர் நிய­மிக்­கப்­ப­டு­வா­ராக இருந்தால், சட்­ட­வல்­லு­நர்­களின் பங்­க­ளிப்பு இவ்­வி­டத்தில் எவ்­வாறு கணிக்­கப்­ப­டு­கின்­றது? இந்த சந்­தர்ப்­பத்தில் நீதியும், நியா­ய­மு­மான ஒரு பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்­கான நம்­பிக்கைச் சாத்­தியம் எந்­த­ள­விற்கு உள்­ளது?

ஒரு நாட்டின் பாரா­ளு­மன்­றத்­தினால் இயற்­றப்­பட்ட சட்­ட­மா­னது, அச்­சட்டம் மதம் சார்­பான தனியாள் சட்­ட­மாக இருக்கும் பட்­சத்தில், மதக்­கோட்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்கும் அதே­வே­ளையில் அந்­நாட்டின் பொது­வான சட்­டங்­க­ளுக்கும், அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­திற்கும் மாறு­ப­டாத வகையில் அமை­ய­வேண்டும்.

பெண்­க­ளுக்கு உரிய சுதந்­தி­ரமும், சமத்­து­வமும், அந்­தஸ்தும் வழங்­கப்­பட்­டுள்ள மித­மான கோட்­பா­டு­க­ளையும் கொள்கைகளையும் கொண்ட இஸ்லாம், குறிப்பிட்ட சிலரின் சுய இலாபங்களுக்காக தவறாகப் பொருள் கோடல் செய்யப்பட்டு அடிப்படைவாதக் கோட்பாடுகளாகவும், தீவிரப் போக்கான கொள்கைகளாகவும் மாறக்கூடாது. இதன் மூலம் யாராக இருந்தாலும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்த ஒரு மனிதனினதும் சமத்துவம், அடிப்படைச் சுதந்திரம், உரிமை, கௌரவம், கண்ணியம் என்பன பாதிக்கப்படக்கூடாது என்பதனை உரியவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். இல்லையெனில் வரலாறு காணாத பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

சட்டத்தரணி ஸபானா குல் பேகம்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.