சஹ்ரானை கைதுசெய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் முதற்கொண்டு சகல விதத்திலும் தேடினோம். முகப்புத்தக கணக்கினை முடுக்கி அதன் மூலமாகக் கண்டறியவும் முயற்சி எடுத்தோம். சஹ்ரான் எங்கு இருந்தார் என்பதைக் கண்டறிய முடியாமலேயே போய்விட்டதென பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி தரங்க பத்திரண பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கிய சாட்சியத்தின் போது தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை சாட்சியமளிக்க வந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
சஹ்ரான் என்ற நபர் முகப்புத்தகத்தின் ஊடாகவே பிரசாரத்தை முன்கொண்டு சென்றார். 2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இவருடைய இந்த செயற்பாடு தொடர்பில் அறிந்துகொண்டோம். அவருடைய சகல செயற்பாடுகளையும் நாம் பின்தொடர்ந்து வந்தோம். ஒவ்வொரு இரண்டு வாரத்துக்கும் ஒருதடவை தனது முகப்புத்தகத்தில் வீடியோவை தரவேற்றுவார்.
அனைத்து வீடியோவும் ஜனநாயகத்துக்கு எதிராக இருந்தது. எமது பிரச்சினையை நாமே தீர்க்கவேண்டும், சகலவற்றையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாது. போராட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் உதவியை நாடத்தேவையில்லை. எமது பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனக் கூறிவருவார். அவருடைய வீடியோக்களுக்கு பலர் லைக் போடத் தொடங்கினர். ஒவ்வொரு வீடியோக்களையும் நாம் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கினோம். இந்த வீடியோவின் சிங்கள மொழிபெயர்ப்புக்கள் அடங்கிய அறிக்கையொன்றை 2017ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்தோம்.
2017ஆம் ஆண்டு காத்தான்குடியில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்படுகிறது. இதுவே முதன் முறையாக சஹ்ரானின் மோதல் புலப்படுகிறது. இதில் சஹ்ரானும் அவருடைய இரண்டாவது சகோதரரும் தப்பிச் செல்கின்றனர். இச்சம்பவத்தின் பின்னர் சஹ்ரான் தொடர்பில் எந்தவிதமான மோதல்களும் முறைப்பாடு செய்யப்படவில்லை. இதனுடன் அவர் ஒளித்துக்கொண்டார். அன்றிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை அவரைத் தேடி விசாரணைக் குழுக்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். கல்முனை பிரதேசத்தில் எமது உபபிரிவொன்று உள்ளது. சஹ்ரான் பற்றி தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமித்தோம்.
இவரைத் தேடிவரும்போதும் சஹ்ரான் இருக்கும் இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு முறைகளை பயன்படுத்தினோம். அவருடைய தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்து அவற்றை ஆராய்ந்தபோதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின்னர் முகப்புத்தக நிறுவனத்துடன் தொடர்புகொள்ளத் தீர்மானித்தோம். எஸ்.எல்.சேட் நிறுவனத்தின் உதவியுடன் இவருடைய முகப்புத்தக கணக்கை கண்காணித்தோம். இவருடைய கணக்கை முடக்குவதாயின் அவருக்கு எதிராக பிடியாணை இருக்க வேண்டும் எனக் கூறினார்கள். இதற்காக கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு பிடியாணை பெற்றுக் கொண்டோம். 2018ஆம் ஆண்டு ஜுன் 12ஆம் திகதி சட்டமா அதிபருக்கு மற்றுமொரு உப அறிக்கையொன்றை அனுப்பிவைத்தோம். அவருடைய வீடியோக்களின் உள்ளடக்கங்களையும் நாம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
2018-.07.-09 ஆம் ஆண்டு சஹ்ரானுக்கு எதிராக பிடியாணை பெற்று எஸ்.எல்.சேட் நிறுவனத்துடன் இணைந்து பேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். குறித்த கணக்கின் ஐ.பி. இலக்கம், சம்பந்தப்பட்ட நபரின் தொலைபேசி இலக்கம், செயற்படுத்தும் முகவரி உள்ளிட்ட விபரங்களைக் கோரி அக்கடிதத்தை அனுப்பியிருந்தோம். 2018-.10.-17 ஆம் திகதி அனுப்பிய இந்தக் கடிதத்துக்கும் எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை. பேஸ்புக் போஸ்ட் பற்றி முறைப்பாடு செய்யும்போது அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம். இதனாலேயே நாம் பிடியாணையைப் பெற்று அதனுடன் இணைந்து கடிதத்தை அனுப்பியிருந்தோம்.
அதன் பின்னர் சஹ்ரானின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் ஆராய்ந்தோம். அவர்; 2009.-01.-08 ஆம் திகதி ஹொங்கொங் மாத்திரம் சென்றிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் எமக்குத் தெரியப்படுத்தியிருந்தது. 2018ஆம் ஆண்டில் கெக்குனுகொல்ல, காத்தான்குடி ஆகிய இடங்களுக்கு அவ்வப்போது விசாரணைக் குழுக்களை அனுப்பி அவரைத் தேடுவதற்கு நடவடிக்கை எடுத்தோம். 2007ஆம் ஆண்டே மௌலவியாகி வெளியே வருகின்றார். தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை நலன்புரி அமைப்பாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி பதிவுசெய்தார். அதற்கு முன்னர் அவர் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் உறுப்பினராக செயற்பட்டுள்ளார். பின்னர் அதிலிருந்து பிரிந்து வந்தே தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை ஆரம்பித்தார்.
அவருடைய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்று அவர் ஏதாவது கையடக்கத்தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ளாரா என்பதையும் ஆராய்ந்து பார்த்தோம். இவர் சிறந்த போதகராக இருந்துள்ளார். தன்னுடைய நிலைப்பாடு சரியானது என்பதை நிரூபிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
2019-.03.-12 மாதம் சட்டமா அதிபர் திணைக்களத்தினர் எம்மை அழைத்து நாம் அனுப்பிய அறிக்கையில் காணப்பட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்யுமாறு கூறினார்கள். 2017.-03.-17 காலியிலுள்ள அமைப்பொன்றின் பிரதிநிதி ஒருவர் எம்மிடம் முறைப்பாடொன்றை செய்திருந்தார். இதுபற்றியும் சட்டமா அதிபருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். இந்த முறைப்பாட்டின் விபரங்கள் போதுமானதாக இல்லை. மேலதிக விபரங்களை இணைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது. மலீக் அஸீஸ் என்ற அரசாங்க சட்டத்தரணியே எம்மை அழைத்து இந்த விபரத்தைக் கூறியிருந்தார்.
கேள்வி: முறைப்பாடு என்ன?
பதில்: சஹ்ரானின் செயற்பாடுகள் குறித்து குறிப்பிடுமாறும் அவர்கள் கூறியிருந்தனர்.
கேள்வி: கலந்துரையாடலுக்கு அழைத்தபோது பேஸ்புக் பற்றி ஆலோசனை வழங்கவில்லையா?
பதில்: கேட்டோம். சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக அறிக்கையை சரிசெய்து இரண்டு மாதங்களுக்குள் கொண்டுவருமாறு கூறியிருந்தார்கள். இதனை சமர்ப்பிப்பதற்கு முன்னர் தாக்குதல் நடைபெற்றுவிட்டது. சஹ்ரான் பற்றி நாம் செய்த விசாரணை, பேஸ்புக் வீடியோ உள்ளிட்ட சகல விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கோரப்பட்டது.
கேள்வி: இந்த அறிக்கையின் ஊடாக தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை தடைசெய்யவா எதிர்பார்த்திருந்தீர்கள்?
பதில்: தடை செய்வது மாத்திரமன்றி அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு எதிராக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றியே நாம் கோரியிருந்தோம்.
கேள்வி: குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றி முன்னரே உங்களுக்குத் தெரியவந்திருந்ததா?
பதில்: சஹ்ரான் பற்றியும் தெஹிவளை ட்ரொப்பிக்கல் இன் விடுதியில் குண்டை வெடிக்கவைத்த நபர் பற்றியுமே தகவல்கள் கிடைத்திருந்தன. தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டுவைக்க வந்த நபர் அதனை வெடிக்கவைக்க முயற்சித்துள்ளார். 2019-.04-.12 ஆம் திகதி பேஸ்புக் நிறுவனத்தினால் சஹ்ரானின் கணக்கு முடக்கப்பட்டது.
கேள்வி: ஏப்ரல் 10ஆம் திகதி நாட்டில் நடத்தப்படக்கூடிய தாக்குதல்கள் தொடர்பில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததா?
பதில்: ஆம் எமக்கு முன்னெச்சரிக்கை கடிதம் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களை கண்டுபிடிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். தாக்குதல் நடத்தப்படுவதற்கு இடையிலான 10 நாட்களுக்குள் ஒரு சிலரைப் பற்றியே அறிந்துகொள்ள முடிந்தது.
கேள்வி: சஹ்ரான் தரப்பினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இற்கும் இடையில் காணப்படும் தொடர்பு பற்றி உங்கள் விசாரணைகளில் வெளிப்பட்டதா?
பதில்: அவருடைய போதனைகள் அடங்கிய வீடியோக்களைப் பார்க்கும்போதும் எப்பொழுதும் இஸ்லாமிய இராச்சியத்தை உருவாக்குவது பற்றியே கூறுவார். இறைவனால் மாத்திரம் நிர்வகிக்கப்படும் நாட்டிலேயே நாம் வாழவேண்டும். இலங்கையிலும் அவ்வாறானதொரு இராச்சியத்தை உருவாக்கும் நாளிலேயே தமக்கு வெற்றி கிடைக்கும் எனக் கூறியுள்ளார். ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியுள்ளார். நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக அவர் கூறியிருந்தாலும் அது தொடர்பில் எந்தவித தகவல்களும் வெளிப்படவில்லை.
(ஆர்.யசி)
vidivelli