அமைதி, சமாதானம், மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு மேல்மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மிலின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்வதேச மதத் தலைவர்களின் பங்களிப்புடன் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு கொழும்பு தாமரை தடாக (நெலும்பொக்குன) அரங்கில் நடைபெறவுள்ளது.
மூன்று நிக்காயாக்களினதும் மகாநாயக்க தேரர்கள், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய சமயங்களின் ஆன்மிகத் தலைவர்களின் பங்கேற்றலுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த தேசிய மாநாட்டில் பிரதமான அதிதியாக சவூதி அரேபியாவின் உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகமும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத் தலைவருமான கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல்இஸா கலந்துகொள்கிறார்.
மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல்இஸா சவூதி அரேபியாவின் முன்னாள் நீதியமைச்சராக பதவி வகித்தவராவார். உலகளாவிய மட்டத்தில் சமய நல்லிணக்கம், சகவாழ்வு உறுதி செய்யும் பொருட்டு பாடுபட்டுவரும் சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் பெரும் அனுபவங்களைக் கொண்ட அறிஞராவார்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆபிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அவர் மேற்கொண்ட சமய நல்லிணக்க சகவாழ்வுக்கான பணிக்காக விருதுகள் பல பெற்றுக்கொண்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் சமாதான சகவாழ்வுக்கு அவர் ஆற்றியவைகளுக்காக உலகப் புகழ்பெற்ற கலிலியோ சர்வதேச விருதையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அண்மைக்காலத்தில் மேலோங்கிக் காணப்படும் அடிப்படைவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியாக நின்று செயற்படுபவருமாவார்.
முக்கியமாக பல்லின மக்கள் வாழும் நாடுகளில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்காக மிக முக்கிய பணிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநாட்டின் பிரதான நோக்கங்களாக இலங்கையில் சமயம் மற்றும் இனங்களுக்கிடையே அமைதி, சமாதானம், சகவாழ்வு, பொறுமை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தல், இலங்கையில் வாழும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் சகவாழ்வோடும் வாழக்கூடிய செய்தியை உலகளாவிய மட்டத்துக்கு எடுத்துச் செல்லல், இலங்கையில் அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் சகல விதமான அடிப்படைவாதங்களையும் நிராகரிக்கும் செய்தியை உலக மக்களுக்கு எடுத்துக்கூறுதல், இலங்கையின் சகல சமூகங்களும் தாய் நாட்டின் கலாசாரம், சம்பிரதாயம், பாரம்பரியங்களை மதித்து அவற்றினை பாதுகாத்துக்கொண்டு வாழ்வதற்கு ஊக்கமளித்தல், இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு வாழும் அமைதி மிக்க நாடு என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களது வாழ்வை இயல்பு நிலைக்குகொண்டு வருதல், பெரும்பான்மை சமூகத்தின் குறிப்பாக பௌத்த மக்களின் மத உணர்வுகளைத் தூண்டாமல் அவர்களது மத அனுஷ்டானங்ளையும் பாரம்பரியங்ளையும் மதித்து அன்னியோன்ய மாக நடந்து கொள்ளல் ஆகிய அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.
ஏ.எஸ்.எம். ஜாவித்,
அஷ்ரப் ஏ சமத்
vidivelli