இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கிழக்கு ஜெரூசலத்தில் பலஸ்தீனர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவத்தினை அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் கண்டித்துள்ளது.
உலகில் வாழும் சுன்னி முஸ்லிம்களின் அதியுயர்நிலைக் கல்விக்கூடமான அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் கடந்த செவ்வாய்க்கிழமை இச் சம்பவத்தினை பலஸ்தீன மக்களின் உரிமைகளை மீறும் கொடூரச் செயலாகும் என வர்ணித்துள்ளது.
ஜெரூசலத்தின் சட்டரீதியான அந்தஸ்த்தை பாதுகாக்குமாறும் அதன் அடையாளத்தை பேணிக் காக்குமாறும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களிடம் அல்அஸ்ஹர் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உள்ளூர் எதிர்ப்பு மற்றும் சர்வதேச விமர்சனங்களை புறந்தள்ளி சூர் பாஹர் பலஸ்தீனக் கிராமத்திலுள்ள வீடுகளை நூற்றுக்கணக்கான இஸ்ரேலியப் படையினர் கடந்த திங்கட்கிழமை புல்டோஸர்களைக் கொண்டு இடித்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையில் இஸ்ரேலின் எல்லைச்சுவருக்கு அருகில் அமைந்துள்ள இவ் வீடுகளை தனது பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக இஸ்ரேல் இராணுவம் கருதுகின்றது.
அனுமதியின்றி சட்டவிரோதமாக இக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது. 1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரபு – இஸ்ரேல் யுத்தத்தின அடுத்து அல்-அக்ஸா அமைந்துள்ள கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.
சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத இந்த நகர்வில் 1980 ஆம் ஆண்டு முழுமையான நகரை ஒன்றிணைத்த இஸ்ரேல் யூத தேசத்தின் பிரிக்கமுடியாத தலைநகரம் என சுய பிரகடனம் செய்தது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை மக்கா மற்றும் மதீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது புனிதத்தலமாக அல்-அக்ஸா காணப்படுகின்றது. யூதர்களைப் பொறுத்தவரை புராதன காலத்தில் இரு யூத வணக்கஸ்த்தலங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் என்பன ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலப் பிரதேசங்களாக சர்வதேச சட்டத்தினால் தொடர்ந்தும் கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
vidivelli