- ஆர்.யசி
- எம்.ஆர்.எம்.வசீம்
ஆளும் கட்சியாக ஜனாதிபதியால் கூறப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் நேற்றைய தினமும் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்தனர்.
அத்துடன், நவம்பர் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையில் நடைபெற்ற சபை அமர்வுகள் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைய இடம்பெறவில்லையென ஆளும் கட்சியினர் கூறியுள்ளதுடன், அன்றைய தினங்களின் பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கையினை நீக்க வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு வெற்றிகொள்ளப்பட்ட பின்னர் கடந்த 14 ஆம் திகதி அரசாங்கம் பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் அறிவித்திருந்தார். அதனையடுத்து கடந்த 14, 15, 16, 19, 21, மற்றும் 23 ஆம் திகதிகளில் ஆளும் கட்சியினர் தொடர்ச்சியாக சபையில் குழப்பங்களை ஏற்படுத்தியதுடன் சபாநாயகரது அறிவிப்பையோ அல்லது அவரையோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் நேற்றும் பாராளுமன்ற அமர்வுகளில் ஆளும் கட்சியினர் பங்கேற்கவில்லை. நேற்று பகல் 1 மணிக்கு சபை கூடியபோது சபையில் எதிர்க்கட்சி ஆசனங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன. ஆளும் கட்சியின் ஆசனங்கள் வெற்றிடமாகவே காணப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக் குழுக் கூட்டம் கூடிய நிலையில் தாம் பாரளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருந்தனர்,
அதேபோல் கடந்த 14,15,16,19,21,23 ஆம் திகதிகளில் சபை அமர்வுகள் அரசியலமைப்புக்கும், பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கும் முரணான வகையில் கூடியதாகவும், ஆகவே அன்றைய தினம் நிகழ்த்தப்பட்ட சகல உரைகளும், தீர்மானங்களும் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, எஸ்.பி. திசாநாயக, நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டக்லஸ் தேவானந்தா, சமல் ராஜபக் ஷ, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கையொப்பமிட்டு கடிதமொன்றினை சபாநாயகருக்கு வழங்கியிருந்தனர்.
-Vidivelli