2018 ஒக்டோபர் 26 வெள்ளிக்கிழமை மாலை, இலங்கையின் அரசியல் வரலாற்றில் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறின. கிட்டத்தட்ட அவை ஓர் அரசியல் சதிப்புரட்சிக்கு ஒப்பானதாகவிருந்தன. இந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியது வேறு யாருமல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே.
கடந்த ஒரு வார காலமாக மிகவும் இரகசியமான முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தான் நடாத்தி வந்த பேச்சுவார்த்தைகளினடியாக எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமையவே கடந்த வெள்ளிக்கிழமை மாலை அதிரடியான நகர்வுகளை ஜனாதிபதி முன்னெடுத்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி, தனது சுதந்திரக் கட்சியின் முக்கிய எம்.பி.க்கள் சிலரை தனது வாசஸ்தலத்தில் சந்தித்தார். இதன்போது ”நான் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப் போகிறேன். அதன் பிறகு உங்கள் அனைவருக்கும் தேவையானதை செய்து தருவேன். புதிய அமைச்சரவையிலும் நீங்கள் இப்போது வகிக்கும் பதவிகளைத் தொடரலாம். சிலருக்கு அதைவிட மேலதிக பொறுப்புகளும் தரப்படும்” என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதற்கு அங்கிருந்த சுமார் 24 எம்.பி.க்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
எனினும் புதிய அரசாங்கம் எவ்வாறு அமையும்? அதன் பிரதமர் யார்? என்பது பற்றி எந்தவித தகவல்களையும் ஜனாதிபதி அச்சமயம் வெளியிடவில்லை. மாலை 5 மணிக்கு தொடங்கிய அக் கூட்டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது.
இக் கூட்டம் முடிந்த மறுகணமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு அழைப்புவிடுத்தனர். அச் சமயம் மஹிந்த, ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ‘ஷங்கிரி லா’ ஹோட்டலில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார். அங்கிருந்து அவர் ஜனாதிபதி மாளிகையை வந்தடைந்தவுடனேயே அவர் இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். அத் தருணம் வரை சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்கள் பலருக்கு பிரதமராகப் பதவியேற்கவிருப்பவர் யார் என்பது தெரிந்திருக்கவில்லை.
அரசியலமைப்பின் பார்வையில் மிகுந்த சர்ச்சைக்குரியதாக கருத