பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள விவகாரம் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் இவ்வாறு இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான குப்பைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கொள்கலன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் காணப்படுவதுடன், மெத்தைகளுக்குள் மருத்துவ மற்றும் வேறு வகையிலான கழிவுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட இந்த குப்பைகள், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் வளாகம் ஆகியவற்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இவ்வாறு இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து குப்பைகளும் சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பெருமளவில் தீங்கு விளைவிக்கும் வகையிலான குப்பைகள் என மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டுநாயக்க பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் 130 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட 27,685 மெற்றிக் தொன் எடையுடைய குப்பைகள் 50,000 அடி நீளத்திற்கு கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் குறித்த குப்பைகளினுள் இரத்தம், மனித அவயவங்கள் உள்ளிட்ட கழிவுகளும் காணப்படுவதால் இதன் மூலம் பாரிய சுகாதார ரீதியான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இவற்றிலிருந்து வெளியாகவும் கழிவு நீர் முத்துராஜவல பாதுகாக்கப்பட்ட வனத்தைச் சென்றடைவதாகவும் சுற்றுச் சூழல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில் இலங்கைக்கு குப்பைகளைக் கொண்டு வந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சூழலை பாதுகாக்கும் கேந்திர நிலையத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குப்பைகளை நாட்டிற்குள் கொண்டு வந்த தரப்பினர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த மனுவின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் 1980ஆம் ஆண்டு 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம், ஏதேனும் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால், மத்திய சுற்றாடல் அதிகார சபையிடமிருந்து சுற்றாடல் தேசிய பாதுகாப்பு அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனினும், சுற்றாடல் அதிகார சபையிடமிருந்து இந்த குப்பைக் கொள்கலன்களைக் கொண்டு வந்த குறித்த தனியார் நிறுவனங்கள் எந்தவொரு அனுமதியையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.
சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி இந்த குப்பைகள் நாட்டிற்குள்கொண்டு வரப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் இலங்கை நிதிச் சட்டத்தில் 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பிரகாரமே இந்த குப்பைகளை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, நிதி அமைச்சர் என்ற விதத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்த வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி மீள் ஏற்றுமதி மத்திய நிலையம் என்ற போர்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு இந்தக் குப்பை கொள்கலன்களின் பின்னணியில் பல மறைகரங்கள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. பல்தேசிய கம்பனிகளின் நலன்களுக்காக இவ்வாறு ஆபத்தான வெளிநாட்டுக் குப்பைகள் இலங்கைக்குள் தருவிக்கப்படுகின்றனவா எனும் கேள்வியும் அச்சமும் தற்போது எழுந்துள்ளது. புத்தளம் அருவாக்காலு குப்பை கொட்டும் திட்டம் நிர்மாணிக்கப்பட்டதற்கும் இதற்கும் தொடர்புகள் உள்ளனவா எனும் சந்தேகமும் எழ ஆரம்பித்துள்ளன.
இலங்கையில் சேரும் குப்பைகளையே முறையாக நிர்வகிக்கத் திராணியற்ற அரசாங்கம் இவ்வாறு வெளிநாட்டுக் குப்பைகளையும் நாட்டுக்குள் கொண்டுவர அனுமதி வழங்கியிருக்குமாயின் அது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் குப்பைகளைக் கொண்டுவர சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அனுமதியும் உடன் இரத்துச் செய்யப்பட வேண்டும். அத்துடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது போன்று கட்டுநாயக்க ஏற்றுமதி வளாகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குப்பைகளை, தமது செலவிலேயே ஏற்றுமதி செய்த நாட்டிற்கே மீள் ஏற்றுமதி செய்ய வேண்டியதும் அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
vidivelli