உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் மூன்று மாதங்கள் பூர்த்தியாகியுள்ளன. அன்றைய தினம் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் ஆகியவற்றில் திருப்பலி பூஜைகளும், விஷேட ஆராதனைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆராதனைகளில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை முக்கிய தகவல்கள் சிலவற்றைத் தெரிவித்திருக்கிறார். ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. முஸ்லிம் குழுவொன்றினால் இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே இதனை நான் நம்புகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தலைவர்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் அறைகூவல் ஒன்றினை அவர் விடுத்துள்ளார். மாற்று மதத் தலைவர் ஒருவர் வழங்கியுள்ள அறிவுரைகளை முஸ்லிம் சமூகம் மிகவும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
‘சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு முஸ்லிம் மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். எனவே சர்வதேச அதிகார சக்திகளுக்காக அடிப்படைவாதத்தை நோக்கிப் பயணிக்காமல் உண்மையான இஸ்லாமிய மதபோதனைகளைப் பாதுகாக்க சகல முஸ்லிம் மக்களும் ஒன்றுபடவேண்டும்” என முஸ்லிம்களை அவர் கோரியுள்ளார்.
அத்தோடு முஸ்லிம் தலைவர்களிடமும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். ‘இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத் திரிபுபடுத்தி அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இனங்காணப்பட்டால் அவர்களை சமூகத்தி லிருந்து முற்றாக ஒதுக்கிவிடவேண்டும். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் அவற்றை விற்பனை செய்வதற்கும், தமது தவறான கொள்கைகளை ஏனையோர் மீது திணிப்பதற்கும் அப்பாவி இளைஞர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதற்கு உள்நாட்டில் இடமளிக்கக் கூடாது’ என வேண்டியுள்ளார்.
சர்வதேசத்தின் தேவைகளுக்காக புலனாய்வுத் துறையை வலுவிழக்கச் செய்து சகல பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்பட்டதாகவும், எனவே எவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்படக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கப்பால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீனமான உறுப்பினர்களைக்கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்ற பேராயரின் கருத்தும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு இந்தியா புலனாய்வுத் தகவல்களை வழங்கியிருந்தது. அது மாத்திரமன்றி ஏப்ரல் 9 ஆம் திகதி மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. 21 ஆம் திகதி தாக்குதல்கள் இடம்பெற்று நூற்றுக்கணக் கானோர் பலியானார்கள். தாக்குதல்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டும் அது இதுவரை வெளியிடப்படவில்லை. ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் உரிய புலனாய்வு அறிக்கை தனக்குக் கிடைக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரும், பாதுகாப்புச் செயலாளரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவும் விசாரணைகளை நடாத்தி வருகிறது. விசாரணை அறிக்கை அடுத்தமாதம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டாலும் அவை சுயாதீனமானதா என சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதனையே பேராயரும் வலியுறுத்தியுள்ளார்.
பேராயரின் இந்தக் கருத்துக்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்தத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நம்பிக்கை தருவதாக இல்லை என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதாகும். அந்த வகையில் உண்மையைக் கண்டறிவதற்கும் தகவல்களை அறிந்திருந்தும் இந்த அனர்த்தத்தை தடுத்து நிறுத்த தவறியோர் யார் என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும். இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் மீது சுமத்தப்பட்டுள்ள அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் களையப்பட வேண்டும்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் அரசியல்,கருத்து வேறுபாடுகளுக்கப்பால் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.
vidivelli