இலங்கையில் சுமார் 3000 அரபு மத்ரஸாக்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன பகிரங்கமாக முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. மத்ரஸாக்களில் மாணவர்கள் நல்வழிப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அவரை நேரில் சந்தித்து தெளிவுகளை வழங்கியது.
நேற்றுக் காலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் தலைமையிலான உலமா சபையின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல ஜயவர்தனவின் இல்லத்துக்கு சென்று அரபு மத்ரஸாக்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்கள்.
இலங்கையில் 3000 அரபு மத்ரஸாக்கள் இயங்கவில்லை எனவும் 315 அரபு மத்ரஸாக்களே இயங்கி வருவதாகவும் உலமா சபையினால் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அரபு மத்ரஸாக்களில் எத்தனை பிரிவுகள் இயங்கி வருகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அரபுக் கல்லூரிகள், அஹதியா பாடசாலைகள், மக்தப் பாடசாலைகள், ஹிப்ளு மத்ரஸாக்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மத்ரஸாக்கள் தொடர்பாக தான் கொண்டிருந்த தவறான கருத்துகளுக்கு தெளிவுகள் பெற்றுக் கொண்டதாக அவர் உலமா சபை பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ஏ. பரீல்
vidivelli