நீதியை, ஒழுக்கத்தை நேசிக்கும் மக்கள் நாட்டிலே தங்கள் பாட்டில் அமைதியாக வாழ்ந்து வருகையில் காவிதரித்த காடையர்களாகச் சில பிக்குகள் நாட்டையே குழப்பிக்கொண்டு, இனவாதத்தைத் தூண்டி, சட்டத்தின் ஆட்சிக்கே சவால்விட்டுக் கொண்டு சுதந்திரமாக இயங்கி வருகின்றனர்.
ராஜபக்ச சிந்தனையால் உருவாக்கிப் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பும் இருப்பதாகத் தெரிகிறது. இக்காவிப் பயங்கரவாதம் இப்போது அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது. நாட்டின் சட்டமும் சட்டத்தின் ஆட்சியும் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்று வியப்படைய வேண்டிய நிலையில் அரசாங்கம் கையறுநிலையில் இருக்க, அரசியல் தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு கிடக்கிறார்கள்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறைப் படுத்தப்பட்டிருந்த ஒரு பிக்கு, ஜனாதிபதியின் எதேச்சாதிகாரத்தைக் கொண்டு மன்னிப்பளித்து, விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை சிறைப்படுத்தி வைப்பதன் நோக்கங்களுள் ஒன்று, குற்றவாளிகளைச் சமூகத்திலிருந்து தனியாக்கி, பிரித்துவைப்பதனூடாக, அக்குற்றவாளிகளின் செயற்பாடுகளால் கொஞ்ச காலத்திற்கேனும் சமூகம் பாதிக்கப்படக் கூடாது என்பதாகும்.
இந்த அடிப்படையைக்கூடக் கவனத்திற் கொள்ளாமல் ஜனாதிபதி சிறிசேன, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட, தர்ம நியமங்களையெல்லாம் துச்சமாகப் புறந்தள்ளி, இவ்வாறு மன்னிப்பளித்திருப்பதன் மூலமாக, போத்தலின் மூடியைத் திறந்து பூதத்தை வெளியே திறந்து விட்டுள்ளார். அந்தப் பூதமோ உச்சகட்டப் பேயாட்டத்தில் இறங்கி, சட்டத்தையும் சட்ட ஆட்சியையும் சட்டத்தின் காவலர்களையும் ஆட்சியாளரையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறது.
இந்தப் பேரழிவுக்கான பொறுப்பை நேரடியாக ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டாமா? ஆகக்குறைந்த பட்சம், இத்தகைய காடையர்களைக் கட்டுப்படுத்தத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள சட்ட, ஒழுங்கு அமைச்சின் அதிகாரங்களையாவது பயன்படுத்தக் கூடாதா?
இவ்வாறு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருப்பது, ஜனாதிபதிக்கும் இந்தக் காவிக் காடையர்களுக்கும் இடையே உள்ள மறைமுகமான இணக்கப்பாடுகள், ஒத்துழைப்புகள் காரணமாகவா?
குருநாகல் வைத்தியர் ஒருவர் குறித்து திவயின பத்திரிகை வெளியிட்ட போலியான செய்தியால் நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரச் சூழ்நிலை இன்றுவரை தொடர்வதோடு மேலும் மேலும் அதைத் தீவிரப்படுத்தும் தீவிர முயற்சியில் காவிதரித்த இன்னொருவர் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். இவர், நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நின்றுகொண்டு ஆக்ரோஷமாகக் கத்துகிறார், கோபத்தில் வெடித்துச் சத்தமிட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை, சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்களை, பொலிஸ் அதிகாரிகளை எல்லாம் கண்டபடி விமர்சிக்கிறார், திட்டுகிறார், எச்சரிக்கிறார், அச்சுறுத்துகிறார்! இவரின் நடத்தையானது ‘பஜார் எக்கே சண்டியா’ தெருச் சண்டியன் போலவே உள்ளது.
இதிலுள்ள பேராபத்து என்னவென்றால் – இவரது இச்செயற்பாடுகள் மிகத்தெளிவாக, நேரடியாகவே நீதிமுறைமைச் செயற்பாட்டின் சுயாதீனத்தை, சுதந்திரதை அச்சுறுத்துவதாகும்! தினமும் இது நடந்து வருகிறது. சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்படும்போது, விசாரணை அதிகாரிகள் மீது எச்சரிக்கை விடுக்கப்படும்போது நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட முடியும்?
தான் சொல்வதே உண்மை, தான் சொல்வது போலவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும், இதற்கப்பால் எதுவுமில்லை என்று சொல்வதைப் போலவே இந்த நபருடைய தீவிரவாதச் செயல்கள் காணப்படுகின்றன!
பார்த்த பார்வையிலேயே பொய்யெனத் தோன்றும் திவயின வெளியிட்ட குறித்த செய்தியால் பாதிக்கப்பட்டிருப்பது டாக்டர் ஷாபி மட்டுமல்ல! இந்நாட்டில் வாழும் நீதியை நேசிக்கும் சட்டத்தை மதிக்கும் சட்ட ஆட்சியை அவாவும் இனச் சுமுகத்தை ஆராதிக்கும் ஒவ்வொரு பிரஜையும் இப்பொய்யான செய்தியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவ்வாறாக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் காவிக் காடையர்கள் சொல்லும் விதமாக, விரும்பும் படியாக மட்டும் சட்டம் செயற்படக் கூடாது. அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு அவர்களுக்குத் தேவையான தீர்ப்பை நீதிமன்றம் கொடுத்துவிடக் கூடாது. விஞ்ஞான ரீதியான, சட்டப்படியான விசாரணைகள், பக்கசார்பற்ற ஆய்வுகளின் பின்னரே விடயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும்! எனவே சட்டப்படியான, விஞ்ஞானபூர்வமான விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதைத் தடுப்பதற்கோ இடையூறு செய்வதற்கோ எவருக்கும் அதிகாரம் இருக்கக் கூடாது. அவ்வாறு தலையீடு செய்வோர், தடுப்போர் யாராக இருந்தாலும் அவர் இந்நாட்டின் மொத்தச் சட்டத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்குமே எதிராகச் செயற்படுகிறார். இக் காவிக்காரரும் இவ்வாறான வேலைகளையே செய்து கொண்டிருக்கிறார். நீதியான, நியாயமான எல்லா விசாரணைகளிலும் தலையிடுகிறார். தன்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறும் வரையிலும் பைத்தியம் பிடித்தவர் போலவே செயற்படுகிறார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ பிரதமரின் வாசஸ்தலத்திற்கோ முறையான முன்னனுமதி இன்றி எவராவது நினைத்த நேரத்தில் அத்துமீறி உள்ளே நுழையலாமா? எவராவது சாதாரண ஒரு பொதுமகன் அவ்வாறு செய்தால் அவர் மீது சட்டம் எப்படிப் பாயும்? எனினும் காடையர் போலச் செயற்படும் காவிதாரிகள் தம்மிஷ்டப்படி எல்லா விடயங்களையும் செய்வது எப்படி? காவிதாரிகளுக்கு எதிராக இந்நாட்டுச் சட்டங்கள் செயற்படாதிருப்பது எப்படி? ஏன்?
அவர்களின் அத்துமீறல்களை உடனுக்குடன் அவ்வப்போது எதிர்கொள்ள முடியாமற் போனாலும் பின்னராவது அதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியாதா? சட்டத்தை மீறிச் செயற்படுவதற்கான அனுமதியை காவிக்காரர்களுக்கு வழங்கியது யார்?
இத்தகைய காவிக் காடையர்கள் இவ்வாறெல்லாம் செய்வதற்கு வசதியாக இருப்பது அவர்கள் இன்னமும் ‘சிவுர’ காவியில் இருப்பதாகும். நாட்டிலும் சமூகத்திலும் சிவுரவுக்கு இருக்கும் மதிப்பையும் அங்கீகாரத்தையும் இந்தக் காடையர்கள் துஷ்பிரயோகம் செய்து களங்கப்படுத்துகின்றனர். அவர்கள் காவிதரித்துக் காட்சியளித்தாலும் உண்மையான புத்தரின் சிவுரவை அவமானப்படுத்துவோர் ஆவர். இத்தகைய கொடூரத்தன்மைகளை, காடைத்தனங்களை அழித்தொழிக்கவே புத்தர் உபன்யாசம் செய்தார். இத்தகைய துர்ச்செயல்களைக் களையவே புத்தரின் பின்னால் ஊரூராகச் சென்று உபன்யாசம் பண்ணும் சீடர்கள் அன்று காவி தரித்தனர். இன்று புத்த சாசனத்துக்குள்ளேயே காடையர்களும் சண்டியர்களும் புகுந்திருக்கும் இக்காலத்தில் புத்தசாசனத்திற்கு என்னதான் நடக்காதிருக்கும்?!
(பெளத்த பிக்குகளை – “சீவரதாரீன்” என்று பொதுவாகக் குறிப்பிடுவதில்லை. அவ்வாறு குறிப்பிடப்படும் ஒருசில பிக்குகளின் சில செயற்பாடுகள் புத்த தர்மத்துக்குப் பொருத்தமானவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டும் நோக்கிலேயே சிங்களவர் மத்தியில் இப்பிரயோகம் உள்ளது. நாம் இந்தச் “சீவரதாரி – காவிதரித்திருப்போர்” எனும் பிரயோகத்தைத் தவிர்த்துக் கொள்வது சிறந்தது.)
2019.07.21 ‘அணித்தா’
இதழின் ஆசிரியர்
தலையங்கம்
தமிழில்: அஜாஸ் முஹம்மத்
vidivelli