சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் சமூக நலன் கருதியும் தங்கள் அமைச்சுப்பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக் கொள்வதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழ் தரப்பினருக்கும் இடையில் பூதாகரமாகியுள்ள பிரதேச செயலக பிரச்சினைகளில் முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை மீள கையேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்பே அவர் இந்தத் தீர்மானத்தை வெளியிட்டார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஒரு நெருக்கடியான நிலையில் தங்கள் அமைச்சுப்பதவிகளைத் துறந்தனர். 4 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 4 இராஜாங்க அமைச்சர்களும், ஒரு பிரதியமைச்சரும் கூட்டாக ஒருமித்து தங்கள் அமைச்சுப் பதவிகளைத் துறந்தது ஒரு வரலாற்றுச் சம்பவமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
‘முஸ்லிம்களுக்கு புதிய பிரச்சினைகள் பல எழ ஆரம்பித்துள்ளன. நீண்டகாலமாக வராத பிரச்சினைகள் பல இன்று புதிதாக உருவெடுக்கின்றன. எமது தரப்புக்கு பாதிப்பான விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்றால் நாம் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக தொடர்ந்தும் இருப்பதால் பிரச்சினைகள் உருவாகும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாம் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம். தனித்தனியாக எந்த முஸ்லிம் உறுப்பினர்களும் அமைச்சுக்களை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என ரவூப் ஹக்கீம் உறுதியாகக் கூறியுள்ளார்.
கிழக்கில் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நிர்வாக ரீதியில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சொத்துகளுக்கும் நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை.. தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் பின்பு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகள் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்றே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருக்கின்றனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் என்ன பதில் கூறப்போகிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில உறுதிமொழிகளை வழங்கியுள்ளார். இந்நிலையில் முஸ்லிம் தரப்பினருக்கு அவர் என்ன பதில் கூறப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டணி குறித்தும் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது. அரசாங்கம் முஸ்லிம் தரப்புக்கு வழங்கும் தீர்வுகளுக்கு அமையவே கூட்டணி குறித்து தீர்மானம் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போதைய களநிலைமையை ஆழ்ந்து அவதானித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். சட்டம் மற்றும் நீதியை நாசமாக்க ஒரு சிலர் முயற்சித்து வருகிறார்கள். அவர்கள் இனங்காணப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட இருவரைத் தவிர ஏனைய ஏழு பேரும் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருக்கின்றமை வரவேற்கத்தக்கது.
ஒன்றாக இருந்து அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலமே தங்கள் இலக்குகளை எய்து கொள்ளமுடியும். அதன் மூலம் சமூகத்தைப் பாதுகாக்க முடியும்.
vidivelli