தன்னை கைது செய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு கோரி, குருநாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது. இதன்போதே இவ்வாறு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இம்மனுவை பரிசீலிக்க நீதியரசர்கள் தீர்மானித்தனர்.
நேற்றைய தினம் இவ்வடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான வைத்தியர் ஷாபி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் பிரசன்னமானார். சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகே மன்றில் ஆஜரானார்.
இந்நிலையில் மனு ஆராயப்பட்டபோது தனது கருத்தினை முன்வைத்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகே,
“பிரதிவாதிகளுக்கு சரியாக அறிவித்தல்கள் கிடைக்கவில்லை. எனவே பிரதிவாதிகளுக்கு உரிய முறையில் அறிவித்தலை வழங்க உத்தரவிட்டு, இம்மனுவை பரிசீலிக்க வேறு திகதியொன்றை நிர்ணயிக்கவும்” என கோரினார்.
இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, தற்போது தனது சேவை பெறுநர் தடுப்புக்காவலில் இல்லை எனவும் அவரை நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையிலேயே இம்மனுவை பரிசீலிப்பதை ஆகஸ்ட் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு, மீள பிரதிவாதிகளுக்கு அதுகுறித்து அறிவித்தல் வழங்குமாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டது.
முன்னதாக குருநாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குருநாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டு வைத்தியர் ஷாபி அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தான் வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானதென அறிவிக்குமாறும், எந்த நியாயமான காரணிகளுமின்றி தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சட்டவிரோதமானதெனத் தீர்ப்பளிக்குமாறும், மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, பாதுகாப்பு செயலரின் அனுமதியுடன் தடுப்புக்காவல் அனுமதிக்கு இடைக்கால தடையத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப்.எம்.பஸீர்
vidivelli