நான் பதவி விலகவும் தயாராகவே உள்ளேன்
நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து நீக்குங்கள் என்கிறார் சபாநாயகர்.
- பாராளுமன்ற செய்தியாளர்கள்
நான் குற்றம் செய்திருந்தால் நீதி, நியாயத்துக்காக ‘ஜம்பர்’ அணிவதற்கும் தயாராகவே இருக்கின்றேன். என்மீது நம்பிக்கை இல்லையென்றால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து என்னை நீக்குங்கள். நான் பதவி விலகவும் தயாராகவே உள்ளேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், சபாநாயகர் மீதான விமர்சனம் குறித்தும் ஹன்சார்ட் அறிக்கை பொய்யாக எழுதப்பட்டுள்ளதாகவும் அதனால் சபாநாயகர் சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் ஆளும் தரப்பு குற்றம் சுமத்தும் கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான மரிக்கார், ‘’சபாநாயகரின் சான்றுடன் வெளியிடப்பட்டுள்ள ஹன்சார்ட் அறிக்கையில் சில வசனங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதுடன், ஒருசில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. போலி ஆவணமொன்றை தயாரித்தால் குற்றவியல் சட்டத்தின்பிரகாரம் மூன்றாண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்கவேண்டிவரும். ஒருதரப்புக்கு சார்பான வகையில் பதவி நிலையை பயன்படுத்துவதும் இலஞ்ச, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரையில் சிறைதண்டனை அனுபவிக்கவேண்டிய குற்றமாகும். ஆகவே சபாநாயகர் ஜம்பர் அணிவதற்கு தயாராகவேண்டும்’’ என உதய கம்மன்பில எம்..பி. கொழும்பில் நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார். அவரின் இந்த கூற்று உண்மையா? சபாநாயகர் போலி ஆவணத்தை தயாரித்தாரா? இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்படவேண்டும். ஆகவே, விசாரணையை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார்,
இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய,
நான் குற்றமிழைக்கவில்லை. நீதி, நியாயத்துக்காக ஜம்பர் அணியவேண்டிய தேவை ஏற்படின் அதை செய்வதற்கு நான் தயார். என் வாழ்க்கையில் என்றுமே நான் மோசடியான செயலில் ஈடுபட்டதில்லை. விசாரணை நடத்தப்பட்டாலும், எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்க நான் தயார். சபாநாயகர் பதவிக்கு நான் தகுதியற்றவன் என்றால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து நீக்குங்கள். அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது போலி ஆவணம் தயாரித்துள்ளதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அதனை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. ஹன்சார்ட் அறிக்கை அவ்வாறு பொய்யாக தயாரிக்கப்படாது. பாராளுமன்ற செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர்கள் தவறான வகையில் செயற்பட மாட்டார்கள். அவ்வாறு அவர்கள் மீது குற்றம் சுமத்தும் நபர்கள் ஊடகங்கள் முன்னிலையில் பொய்களை கூறாது சாட்சியங்களுடன் கூறுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.
மேலும் எனது உருவத்தை வைத்து கொடும்பாவி எரிப்பதை நான் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. அவ்வாறு எரிப்பது என் மீதான தீய பார்வைகள், தீட்டுக்கள் என்னை விட்டு விலகிவிடும் ஆகவே அதனை பற்றி நான் கருத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli