முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்துள்ள அறிக்கைக்கு ஒன்பது வருடகால நிறைவின் பின்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிபாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். நீதியமைச்சும், முஸ்லிம் சமய விவகார அமைச்சும் கூட்டாக இணைந்து விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பித்து முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை உள்வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை காலம் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் கீழ் இயங்கிவரும் காதி நீதிமன்றங்களுக்கு இலங்கையின் நீதிக்கட்டமைப்பில் மாற்றாந் தாய் மனப்பான்மையே காட்டப்பட்டு வந்தது. காதி நீதிமன்றங்கள் இதுவரை காலம் பாடசாலைகளிலும் வீடுகளிலும் பள்ளிவாசல் கட்டடங்களிலுமே இயங்கிவருகின்றன. ஒரு சில காதி நீதிமன்றங்களுக்கே குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. காதி நீதிபதிகளுக்கு சிறிய தொகையே கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகிறது. ஒருசிலர் இப் பதவியை துஷ்பிரயோகம் செய்கின்ற போதிலும் பெரும்பாலானோர் சமூக நலன் கருதி தங்களது கடமைகளைச் செய்து வருகின்றனர். அவர்கள் தொடர்பில் இதுவரை காலமும் அரசாங்கமோ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களோ, உலமா சபையோ அக்கறை செலுத்தவில்லை.
ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு சமர்ப்பித்த சிபாரிசுகள் காதி நீதிமன்றக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் அமைந்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதாகும்.
காதி நீதிபதிகள் தரமும் காதி நீதிமன்றக் கட்டமைப்பும் உயர்த்தப்படவுள்ளன. காதி நீதிபதிகளாக இஸ்லாமிய சட்டம் பயின்ற சட்டத்தரணிகள் நியமிக்கப்பட வுள்ளார்கள். இதில் பெண்களும் அடங்கவுள்ளனர். அவர்கள் முழு நேர நீதித்துறை அலுவலர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிரிக்கப்படவுள்ளது. பெண் ஒருவர் தலாக் கூறப்படும் போதும், கணவரின் வற்புறுத்தலினால் பஸஹ் செய்து கொள்ளும்போதும் மத்தாஹ் (நஷ்டஈடு) பெற உரித்துடையவராகும் வகையில் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.
பலதார மணம் செய்து கொள்ள விண்ணப்பிப்பவர்களுக்கு நிபந்தனைகளுடனேயே அனுமதி வழங்கப்படவுள்ளது. தாபரிப்பு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மேற்படி விடயங்களில் முஸ்லிம் எம்.பி.க்கள் குழு இணக்கம் கண்டுள்ள போதிலும் தற்போது அதற்கெதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உலமா சபை இதனை எதிர்த்து வருகிறது. இந் நிலையில் இந்த திருத்தங்கள் மீண்டும் கிடப்பில் போடப்படலாம் எனும் அச்சம் தோற்றம் பெற்றுள்ளது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்கு ஒன்பது வருடகாலம் எடுத்துள்ளது. உண்மையில் அது மிக நீண்ட காலமாகும். இவ்வாறான நீண்ட காலத்தை ஏற்கனவே செலவிட்டிருக்கையில் தற்போது மீண்டும் முரண்பட்டுக் கொள்வதும் திருத்தங்களைத் தாமதப்படுத்துவதும் ஆரோக்கியமானதல்ல. அத்துடன் இந்த முரண்பாடுகள் எம்.பி.க்கள் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் மத்தியில் பேசித் தீர்க்கப்பட வேண்டுமே தவிர அவை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படக் கூடாது. ஏற்கனவே இந்த விடயங்கள் மிம்பர் மேடைகளில் தாராளமாகப் பேசப்பட்டுள்ளன. பல உலமாக்கள் விடயம் விளங்காது இவற்றுக்குத் தவறான அர்த்தங்களைக் கற்பித்து மக்களை பிழையாக வழிநடாத்த முற்பட்டுள்ளார்கள். மீண்டும் மீண்டும் இந்தத் தவறு நிகழ அனுமதிக்க முடியாது. எனவேதான் இது விடயத்தில் தனியார் சட்ட திருத்த குழு மட்டத்திலேயே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் இன ரீதியான சட்டங்கள் தேவையில்லை. ஒரு பொதுவான சட்டமே தேவை என்னும் கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது. பதுளை மற்றும் அக்குறணை காதி நீதிமன்றங்களுக்கு எதிராக எம்மவர்களினாலே சவால்கள் விடப்பட்டுள்ளன. பேரின ஊடகங்கள் இதனைப் பெரிதுபடுத்தி வருகின்றன. இவ்வாறான சூழலில் எமது தனியார் சட்டத்தை நாம் பாதுகாத்துக் கொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அவசரப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளோம். தொடர்ந்தும் நமக்குள் முரண்பட்டுக் கொள்வதானது இருக்கின்ற சட்டத்தையும் இல்லாதொழிக்கவே வழிவகுப்பதாக அமையும்.
எனவேதான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாமதியாது ஒன்று கூடி இறுதித் தீர்மானத்தை எட்ட வேண்டும். இதில் மேலும் மேலும் தாமதத்துக்கு இடமளிக்க முடியாது.
vidivelli