குருநாகல் நீதிவானின் நடவடிக்கைகளுக்கு எதிராக சி.ஐ.டி. நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு
நீதவானின் முகப்புத்தகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய பதிவொன்று தொடர்பிலும் சுட்டிக்காட்டு
குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பிலான விவகாரத்தில் குருநாகல் நீதிவானின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணையொன்றை நடாத்துமாறு சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சுயாதீன நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்துள்ளது. குறித்த வழக்குடன் தொடர்பில்லாத குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், பல் வைத்தியர் சரத் வீர பண்டாரவுக்கு பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பில் மன்றில் கருத்துக்கூற இடமளித்தமை, அவ்வாறு அவர் கூறிய கருத்துக்களை வழக்குப் பதிவுகளிலிருந்து நீக்க உத்தரவிட்டமை ஆகியவற்றை மையப்படுத்தி சி.ஐ.டி. இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
அத்துடன் இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகளுக்குத் தேவையான மிக அவசியமான சில உத்தரவுகளை வழங்காது குருநாகல் நீதிவான் பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகத் தோன்றுவதாகவும் சி.ஐ.டி. தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, சி.ஐ.டி.யை தூற்றும் வகையில் குறித்த நீதிவானின் முகப்புத்தகத்தில் பதிவொன்று இடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலும் ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கையொன்றை எடுக்குமாறும் சி.ஐ.டி. சுயாதீன நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப்பிரின் அதிகாரிகளை மாற்ற முடியாதென பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரிகளை மாற்றுவது பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கும் எனவும் அதனால் அந்த விசாரணைகளை வேறு பிரிவொன்றுக்கு கையளிக்க முடியாது எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
வைத்தியர் ஷாபி விவகாரத்தை விசேட குழுவொன்றிடமோ அல்லது எஸ்.ஐ.யூ. எனப்படும் விசேட விசாரணைப் பிரிவினரிடமோ கையளிக்க முடியுமாவெனப் பரிந்துரைக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டிருந்த நிலையிலேயே இந்த பதில் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். கடந்த வாரம் கருத்தடை விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லையெனத் தெரிவித்து அந்த விவகாரம் தொடர்பில் முறைப்பாடளித்த தாய்மார்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்டத்தரணி சேனாரத்ன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருந்தார்.
அந்த முறைப்பாட்டில் சி.ஐ.டி. முன்னெடுக்கும் வைத்தியர் ஷாபி குறித்த விசாரணைகளை சி.டி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத மற்றும் விசாரணை பிரிவு சி.சி.டி எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, குருநாகல் பொலிசாரை உள்ளடக்கிய விசாரணைக் குழுவொன்றிடத்தில் கையளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பொதுமக்கள் முறைப்பாட்டு விசாரணை பிரிவு பணிப்பாளர் டபள்யூ.ஏ.வீ .லக் ஷ்மன் பதில் பொலிஸ்மா அதிபருக்கு விசேட அறிவித்தலொன்றை அறிவித்ததாகவும் அதில் வைத்தியர் ஷாபி குறித்த விசாரணை விசேட குழுவொன்றிடம் ஒப்படைப்பது அல்லது விசேட விசாரணைகளை, விசேட விசாரணை பிரிவினரிடம் ஒப்படைப்பது தொடர்பில் பரிந்துரைக்குமாறு கோரியிருந்தார்.
இந்நிலையிலேயே பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமத்ன சி.ஐ.டியிடம் உள்ள வைத்தியர் ஷாபி குறித்த விசாரணைகளை வேறு பிரிவிடம் மாற்ற முடியாதெனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதுகுறித்த பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வைத்தியர் ஷாபி விவகாரம் தொடர்பில் குற்றவியல் சட்டக்கோவையின் 125 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாகவே குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை பொறுப்பேற்றது. அது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரும், சி.ஐ.டி. சார்பில் நீதிமன்றில் ஆஜராகி வருகின்றார்.
இவ்விசாரணைகள் மிக வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. இவ்வாறான சூழலில் குறித்த விசாரணைகளை சி.ஐ.டியிடமிருந்து பறித்து அதனை விசேட குழுவொன்றிடமோ, அல்லது எஸ்.ஐ.ஐ.யூ. எனப்படும் விசேட விசாரணைப்பிரிவிடமோ ஒப்படைப்பது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுடன் சட்டரீதியிலும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
எனவே, அவ்வாறான விசாரணைகளை பிரிவு மாற்றத்திற்கு பரிந்துரைக்க முடியாது” என பதில் பொலிஸ்மா அதிபரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எம்.எப்.எம்.பஸீர்
vidivelli