முஸ்லிம் விவாகம், விவாக ரத்துச் சட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்த கடிதம் நேற்றைய தினம் உலமா சபையினால் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவித்த உலமா சபையின் பொதுச் செயலாளர் முபாரக் மௌலவி, முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து இரு அறிக்கைகள் நீதி அமைச்சரிடம் நாம் சமர்ப்பித்துள்ளோம்.
இதன்போது, முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்போது உலமாக்களின் வழிகாட்டலுடனேயே முன்னெடுக்கப்படும் என முஸ்லிம் எம்.பி.க்கள் தெரிவித்திருந்தனர். எனினும் தற்போது அவசரப்பட்டு குறித்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்கின்றனர்.
குறித்த திருத்தத்தின்போது வயதெல்லை ஒரு பிரச்சினையே கிடையாது. சிறு வயது திருமணங்கள் இப்போது இடம்பெறுவதில்லை. அதற்கு நாம் எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. எனினும், திருமணப் பதிவின்போது பெண் ஒப்பமிட்டால்தான் நிகாஹ் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரண் என்பதை நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அது மட்டுமல்லாது, திருமணத்தின்போது பெண்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருக்கும் ஏற்பாடுபோல் நாமும் ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறோம். அது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு ஒருசில விடயங்கள் பேச வேண்டியிருக்கிறது. இதற்கமைய உலமாசபையுடன் பேச்சுவார்த்தைக்கு அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்து நேற்றைய தினம் நாம் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
(எஸ்.என்.எம்.ஸுஹைல்)
vidivelli