குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவின் விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என சுகாதார அமைச்சு நேற்று வியாழக்கிழமை அறிவித்தது.
இதனால் குறித்த குழுவின் இறுதி அறிக்கை இன்னும் சுகாதார அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவின் இறுதி அறிக்கையின் பின்னரே குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த குழுவிற்கு மேலதிகமாக குருநாகல் நீதிவானின் உத்தரவிற்கமைய மூன்று விசேட பெண்ணியல் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றும் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐந்து வருட காலப் பகுதிக்குள் சுமார் 30,000 பேருக்கு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அனைத்து சிசேரியன் சத்திர சிகிச்சைகள் தொடர்பிலும் பரந்துபட்ட விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.
(றிப்தி அலி)
vidivelli