வைத்தியர் ஷாபி விவகாரம் : குருநாகல் நீதிவானிடம் விசாரணை நடத்தவும்
நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு
குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பிலான வழக்கில் குருநாகல் நீதிவானின் நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட விசாரணைகளை நடாத்துமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் சுயாதீன நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
நேற்று அந்த சங்கம் இந்த முறைப்பாட்டை எழுத்து மூலம் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. குருநாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் என்பதுடன், அவருக்கு எதிராக விசாரிக்க உத்தரவிட்ட குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஆகியோரின் மனைவிமாரும் குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர்கள் என குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரு வழக்குத் தவணைகளின் போது, குருநாகல் நீதிவான் நடந்துகொண்ட முறைமை தொடர்பில் விரிவான விசாரணையொன்றை நடாத்துமாறும், வைத்தியர் ஷாபி விவகாரத்தில் நீதிவானின் கைகளால் தவறுகள் இடம்பெற்றுள்ளதா என ஆராயுமாறும் அவ்வாறு இடம்பெற்றிருப்பின் அது சதி நடவடிக்கையொன்றின் அங்கமான குற்றவியல் நடவடிக்கையா என ஆராயுமாறும் இளம் ஊடகவியலாளர் சங்கம் சுயாதீன நீதிச்சேவை ஆணைக் குழுவிடம் கோரியுள்ளது.
கடந்த 2019.06.27 அன்றைய வழக்கு விசாரணைகளின்போது, வழக்கின் அல்லது பாதிக்கப்பட்ட தரப்போ, பிரதிவாதி தரப்போ அல்லாத குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் சரத் வீரபண்டாரவுக்கு திறந்த மன்றில் கருத்துக்கூற அனுமதியளித்தமை, பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் விவகாரம் தொடர்பில் விஷேட நிபுணரல்லாத பல் வைத்தியரான அந்தப் பணிப்பாளரிடம் எச்.எஸ்.ஜீ. சோதனை குறித்து வினவி அதனை மையப்படுத்தி அச்சோதனைகளை இரத்துச் செய்தமை, அந்தப் பணிப்பாளர் மன்றில் கூறிய விடயங்களை வழக்குப் பதிவுகளிலிருந்து பின்னர் நீக்கியமை போன்ற விடயங்களை இளம் ஊடகவியலாளர் சங்கம் அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளால் முறைப்பாட்டாளர் தரப்பு, பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் சந்தேக நபர் தரப்புக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும், பொதுமக்களுக்கு நீதிமன்றம் குறித்த நம்பிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்பதாலும் இதுகுறித்து உடன் அவதானம் செலுத்தி விசாரிக்குமாறு அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் முக்கிய 5 விடயங்களை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் தண்டனை சட்டக் கோவையின் 311 ஆம் அத்தியாயத்தின் கீழ் சி.ஐ.டி.யால் கைது செய்யப்படாத சந்தேக நபரை (வைத்தியர் ஷாபியை) அதனை மையப்படுத்தி நீதிவான் எவ்வாறு விளக்கமறியலில் வைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
பொதுமக்கள் குழப்பம் ஏற்படுமென ஒருவரை விளக்கமறியலில் வைக்க அவர் சந்தேக நபராக இருக்க வேண்டும். எனினும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஷாபி அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக சி.ஐ.டி. தெளிவாக அறிவித்தது. வேறு எந்த சட்டத்தின் கீழும் அவரைக் கைது செய்வதாக அறிவிக்காத நிலையில், அவரை எப்படி பொதுமக்கள் குழப்பத்தை காரணம் காட்டி நீதிவானால் விளக்கமறியலில் வைக்க முடியுமெனக் கேள்வி எழுப்பியுள்ள இளம் ஊடகவியலாளர் சங்கம், குருநாகல் நீதிவானின் செயற்பாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு சதி நடவடிக்கையா என ஆராயுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எப்.எம்.பஸீர்)
vidivelli