- பேருவளை நிருபர்
பேருவளை சீனன்கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் மரணமான முஹம்மத் தாரிகின் ஜனாஸா நேற்றுமாலை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் பெரும் திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பேருவளைஹேன பகுதியிலுள்ள வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஜனாஸாவுக்காக சீனன்கோட்டை பாஸிய்யா பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடைபெற்றது. மாணவனின் சகோதரன் முஹம்மத் தமீம் ஜனாஸா தொழுகையை நடாத்த பெருகமலை ஸாக்கிரீன் பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எஸ்.எச்.எம் இம்ரான் ரஹ்மானி துஆ பிரார்த்தனை புரிந்தார். அஷ்ஷெய்க் பஹ்ரி அனஸ் (நளீமி) விஷேட அனுதாபச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாணவனின் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் ஜனாஸாவில் கலந்துகொள்ளத் திரண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மதகுருமார்கள், அரசியல்வாதிகள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்குபற்றினர்.
அதே சமயம் மேற்படி பாடசாலை நேற்றைய தினம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
-Vidivelli