இறைவன் பலரை எவ்வித அங்கவீனமுமின்றிப் படைக்கின்றான். சிலரை அங்கவீனத்தோடு படைக்கின்றான். அவ்வாறு எவ்வித அங்கவீனமுமின்றிப் பிறக்கின்றவர்கள் இயற்கையாக அல்லது செயற்கையாக நிகழ்கின்ற ஆபத்துகளுக்குள்ளாகி அதனால் அங்கவீனமுடையவர்களாக மாறுகின்றார்கள்.
இருப்பினும், அவ்வாறானவர்களிடத்தில் மாற்றுத் திறன்கள், ஆற்றல்கள், ஆளுமைகள் மறைந்து காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படுகின்ற ஆற்றல்கள், திறன்கள் அடையாளம் காணப்பட்டு அவை வலுப்படுத்தப்படுகின்றபோது, அத்தகைய விஷேட தேவையுடையவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும், ஆளுமையுள்ளவர்களாகவும் சமூக நீரோட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.
மாறாக, சமூகத்தின் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினாலும், சூழலினாலும் புறக்கணிக்கப்படுகின்றபோது, அவர்களின் உரிமைகள் மதிக்கப்படாதபோது, அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டப்படாது அவர்களை சமூக நீரோட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படாதபோது, அத்தகைய மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் ஆளுமைகளை வெளிப்படுத்த முடியாது, அடைவுகளை அடைந்து கொள்ளாது ஒதுங்கி ஓரமாகி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.
இவ்வாறான மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் மத்தியிலிருந்து ஓரமாக்கப்படாது அவர்கள் மனிதாபிமானத்துடன் அணுகப்படுவதும் அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதும் அவர்களுக்கான கல்வி வாய்ப்பு வழங்கப்படுவதுடன் அவர்கள் பாதுகாக்கப்படுவதும் அவசியமாகும். இதனை அடைந்து கொள்வதற்கான ஒரு செயற்றிட்டமாகவே உட்படுத்தல் கல்வி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
மாற்றுத்திறனாளிகளும் உரிமைகளும்
உடலிலோ அல்லது உள்ளத்திலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலரினால் சில விடயங்களைப் புரியமுடியாமல் போய்விடும். அவ்வாறானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகின்றனர். மரபணுவினால் பிறப்பில் ஏற்படும் மாற்றங்கள், தாயின் கருவில் இருக்கும்போது அல்லது பிறந்தவுடனே ஏற்படும் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள், விபத்தினால், தெரியாத காரணங்களினால் என உடலில் அல்லது உள்ளத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களினால் பலர் நிரந்தர வலுவிழந்தவர்களாக மாறுகின்றனர்.
உடல் ஊனம், புலன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கேள்விக் குறைபாடு, நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறைபாடு, மனவளர்ச்சிக் குறைபாடு, உளப் பிறழ்ச்சி என்பவற்றுக்கு உள்ளாகுவோர் இந்த மாற்றுத்திறனாளி நபர்கள் என்ற வகைக்குள்ளாகின்றனர்.
இவர்கள் தமது தனிப்பட்ட வாழ்விலும் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் என பல்வேறு துறைகளிலும் பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறு இடர்பாடுகளை எதிர்நோக்குகின்ற இவர்கள் மீது மனிதாபிமானம் காட்டப்படுவது அவசியமாகும். அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் முக்கியமாகும்.
2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களின் உரிமைக்கான ஒப்பந்தமானது இந்நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்துகிறது. அதில், மாற்றுத்திறனாளி நபர்களின் உரிமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
“நாம் அனைவரும், உலக அமைதி, சுதந்திரம் மற்றும் நியாயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமத்துவமான மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் என்றும், நாம் அனைவரும் சமம் மற்றும் நம் அனைவருக்கும் மனித உரிமைகள் உண்டு என்றும் மாற்றுத்திறனாளி நபர்கள் அனைவரும் அனைத்து மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு எதிராக எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுப்புறச் சூழல் மற்றும் மக்களுடைய எண்ணங்களும்தான் மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை ஊக்கப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி நபர்களின் முன்னேற்றத்திற்காக உலகளவில் உள்ள பொதுவான விதிகள் மற்றும் செயற்பாடுகளால் அவற்றை அடைவதற்கு உருவாக்கப்படும் சட்டங்கள், விதிகள், திட்டங்கள், முடிவுகள் மற்றும் செயல்கள் ஆகியவற்றை நாம் கருத்திற்கொள்வது மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு அரசாங்கமும், சர்வதேச நிறுவனங்களும் வறுமை ஒழிப்பு, தொழில்வாய்ப்பு போன்ற தேசிய வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்ளும்போது மாற்றுத்திறனாளி நபர்களின் நிலைமையையும் சம அளவில் கருத்திற்கொள்ள வேண்டும்.
அத்தோடு, வாழ்க்கையில் பல சூழ்நிலைகளிலும் உள்ள விடயங்களை நாம் புரிந்துகொண்டு செயற்படுவது மாற்றுத்திறனாளி நபர்களின் வாழ்க்கை மேம்பட உதவியாக இருக்கும். அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடையாத நாடுகளில் வாழும் மாற்றுத்திறனாளி நபர்கள் சமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைத்து செயற்பாடுகளிலும் சம அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளி நபர்களுக்கான ஒப்பந்தத்தின் சுருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நபர்களின் அடிப்படை உரிமைகளில் கல்வி உரிமையும் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்கான அமைப்பான யுனெஸ்கோ அமைப்பின் தகவல்களின் பிரகாரம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 90 வீதமான சிறுவர்கள் கல்வி வாய்ப்பை இழந்தவர்களாக உள்ளதாகக் குறிப்பிடப்படுள்ளது. இருப்பினும், இலங்கையைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உட்பட பாடசாலை செல்லாத மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
மாற்றுத்திறனாளி நபர்களான விஷேட தேவையுடைய மாணவர்களின் கல்வி மேம்பாட்டு நடவடிக்கை தொடர்பில் கடந்த பல வருடங்களாக மத்திய கல்வி அமைச்சினாலும். மத்திய கல்வி அமைச்சின் பரிந்துரைகளுக்கமைய மாகாணக் கல்வி அமைச்சுக்களினாலும், கல்வித்திணைக்களங்களினாலும்; அக்கறை செலுத்தப்பட்டு வருவது முக்கிய அம்சமாகும்.
விஷேட தேவையுடையோரும் பாடசாலைகளும்
இலங்கையில் விஷேட தேவையுடையவர்கள் ஆறுவகையினர்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
உடல் குறைபாடு, உளக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கேள்விக் குறைபாடு, பேச்சுக் குறைபாடு உடையவர்கள், மனவெழுச்சிக் குறைபாடு உடையவர்கள் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கல்வி வாய்ப்பை வழங்குவதற்காக விஷேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வருடந்தோறும் பயிற்சியளிக்கப்பட்டு குறித்த பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
கல்வியமைச்சின் 2014ஆம் ஆண்டுக்கான புள்ளி விபரங்களின் பிரகாரம். சகல மாகாணங்களும் அடங்கலாக 24 விஷேட தேவையுடையோருக்கான பாடசாலைகள் உள்ளன. அத்தோடு, தேசிய பாடசாலைகளில் 104 விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான பிரிவுகளும் மாகாணப் பாடசாலைகளில் 600 பிரிவுகளுமாக 704 விஷேட கல்விப் பிரிவுகள் உள்ளன. தேசிய பாடசாலைகளில் உள்ள பிரிவுகளில் 1,220 விஷேட தேவையுடைய மாணவர்களும், மாகாணப் பாடசாலைகளில் உள்ள பிரிவுகளில் 6,223 விஷேட தேவையுடைய மாணவர்களுமாக 7,443 மாணவர்கள் கல்வி கற்பதோடு, உதவி பெறும் விஷேட தேவையுடைய பாடசாலைகளில் 2,613 மாணவர்களும் கல்வி கற்கின்றனர். இதுதவிர, கல்வி அமைச்சினால் பதிவு செய்யப்படாத பல பாடசாலைகள் ஒருசில அமைப்புக்களினால் உருவாக்கப்பட்டு விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பை வழங்கி வருகின்றன.
இம்மாணவர்களை சாதாரண வகுப்பு மாணவர்களுடன் இணைக்கப்பட்டு உட்படுத்தல் கல்வியினூடாக கற்றல் செயற்பாட்டில் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் உட்படுத்தல் கல்வியின் அவசியம் உணரப்பட்டு அவற்றை சக்திமிக்கதாக்குவதற்கான செயற்பாடுகளும் கல்வி அமைச்சினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்ட வேண்டும்.
உட்படுத்தல் கல்வியும் நடவடிக்கைகளும்
மூன்றாம் உலக நாடுகளின் தேசிய எழுச்சிக் கோலங்களோடு தொழிலாளர் மத்தியிலும் எழுத்தறிவுப்பலம் அவர்களை புதிய சிந்தனை கொண்ட மனிதர்களாக திகழச் செய்ய உதவிற்று.
எழுத்தறிவு என்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துக்களைக் குறிப்பிட்ட கருத்துடன் பொருத்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பென ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ வரைவிலக்கணப்படுத்துகிறது.
இருப்பினும், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உள்ள நாடுகள் எழுத்தறிவு தொடர்பான கருத்துக்களை விரிவாக்கம் செய்துள்ளது. அதாவது, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு என அந்நாடுகள் குறிப்பிடுகின்றன.
கி.மு.8000 ஆண்டளவில் எழுத்தறிவு சிந்தனை உருவானதாக எழுத்தறிவு தொடர்பான வரலாற்று ஆய்வு சுட்டிக்காட்டும் நிலையில், மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் எழுத்தறிவானது மேலாண்மை செயல்களில் ஈடுபடுவோர், அதிகாரத்திலுள்ளோர் மற்றும் சமூகத்தின் மேல் வர்க்கத்தினர்கள் என ஒரு வீதத்திற்கும் குறைவானவர்கள் மாத்திரமே எழுத்தறிவுடையவர்களாக இருந்தார்கள் என எடுத்துக் காட்டுகிறது.
எழுத்தறிவானது பரிணாம வளர்ச்சி கண்டுள்ள போதிலும், எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக பல மில்லியன் கணக்கானோர் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும், தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று வரையறை செய்யப்படுகிறது.
உலகில் பல்வேறு விடயங்கள் எழுத்துக்களாகப் பரவிக் கிடக்கும் நிலையில், எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்து, அறிந்து கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. ஆதலால், எழுத்தறிவின்மையானது கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் பலர் குடும்பங்களினாலும் சமூகத்தினாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாக அவர்களது வாழ்நாள் கழிந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இருப்பினும், கற்கும் வலுவுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து அனைவருக்கும் கல்வியில் சமசந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பது தேசிய ரீதியில் கவனயீர்ப்பைப் பெறலாயிற்று.
இதனால், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விஷேட கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அவர்களை சமூகத்துடன் இணைக்கும் உட்படுத்தல் கல்வி செயற்றிட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று உட்படுத்தல் கல்வி சிறப்பான இடத்தை பெற்று வருவதுடன் அதனை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உட்படுத்தல் கல்விச் செயற்பாடுகள் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வியில் சமசந்தர்ப்பம் வழங்கும் நோக்குடன் அவர்களை சாதாரண வகுப்பு மாணவர்களுடன் இணைத்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படுகிறது.
உட்படுத்தல் கல்வி வெற்றி பெறுகையில் எல்லாத் தரப்பினரும் வெற்றிபெற்றவர்களாகக் கருதப்படுவர், ஏனெனில், பொதுவாக விலகியுள்ள மாணவர்கள் ஏனைய சராசரி மாணவர்களது கற்றல் செயற்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது. ஆதலால், இத்திட்டம் வெற்றிபெறும்போது எல்லோரும் வெற்றிபெற்றவர்களாக கருதப்படுவர். உட்படுத்தல்கல்வியினூடாக விஷேட தேவையுடைய மாணவர்கள் பல வழிகளிலும் நன்மையடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷேட தேவையுடைய மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் பழகி விடயங்களை பகிர வாய்ப்பேற்படுவதுடன், சமூகத்தில் ஒன்றிணைய அல்லது சமூகமயப்படுத்தப்பட வாய்ப்பேற்படுகிறது. ஏனைய சராசரி மாணவர்களுடன் சகஜமாகப் பழகவும், சமூகமயப்படுத்தவும் வாய்ப்பேற்படுகின்றது. வகுப்பறையில் விஷேட தேவையுடைய மாணவர்கள் ஏனைய சராசரி மாணவர்களுடன் பழகுவதால் சமூகத்திலும் பிரச்சினையின்றி ஒன்றிணைந்து வாழ முடிவதுடன், சமூக பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒருவருக்கொருவர் உதவுதல் என்பன ஏற்படுகின்றன. இதனால் சகலரும் நண்பர்களாகப் பழக சந்தர்ப்பம் கிடைக்கச் செய்யப்படுகிறது.
அத்துடன் உட்படுத்தல் கல்வி, விஷேட தேவையுடையவர்களை சமூகத்தில் இணைக்கவும், சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தவும் சிறந்த வழியாகக் காணப்படுகிறது. இவற்றுடன் மீத்திறனுடைய மாணவர்களும், ஏனையோருடன் இணைந்து பழகவும், அவர்களுக்கு கற்றலில் வழிகாட்டவும் உதவுகிறது. இத்துடன், ஏனைய மாணவர்களை மதிக்கவும் அவர்களுடன் தொடர்பாடலைப் பேணவும் முடிகிறது. இதனால், இவர்களிடையே நற்பண்புகள் வளரக்கூடிய வாய்ப்புக்கள் உட்படுத்தல் கல்வி தொடர்பான ஆய்வுகளினூடாக அறியமுடிகிறது.
ஆனால், உட்படுத்தல் கல்வி பல்வேறு காரணிகளினால் குறிப்பாக வடக்கு கிழக்கில் வெற்றியளிக்காத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதவாது, உட்படுத்தலால் ஏற்படும் நன்மை பற்றி இச்செயற்பாட்டில் ஈடுபடும் அனைவருக்கும் விளக்கமளிக்காமை. நிலைமைக்கேற்ப அதிவிரைவாக அல்லது மிகமெதுவாக நடைமுறைப்படுத்துதல், போதிய வளப்பங்கின்மை, அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளில் தொடர்ச்சியின்மை, அர்ப்பணிப்பற்றவர்களும் அதிக வேலைப்பளுவுள்ளவர்களும் இருத்தல், இது தொடர்பில் பெற்றோரின் பங்களிப்பும் விழிப்புணர்வின்மை போன்ற பல காரணிகள் கூறப்பட்டு வருகின்றன.
அத்துடன், பற்றாக்குறையாகவுள்ள ஆசிரியர் பயிற்சி, உட்படுத்தல் கல்வி மாணவர்களுக்கு பொருத்தமான பாடத்திட்டத்தை வழங்க முடியாமை, இவர்களுக்கு உதவக்கூடிய போதிய வளமின்மை, பாடசாலை மற்றும் வகுப்பறைகள் பொருத்தமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளமை, நிதி ஒதுக்கீட்டுப்பற்றாக்குறை போன்ற குறைபாடுகளும் உட்படுத்தல் கல்வி தொடர்பில் கூறப்படுகிறது.
இத்தகைய காரணங்கள் மற்றும் குறைபாடுகள் கவனத்திற்கொள்ளப்பட்டு உட்படுத்தல் கல்வித்திட்டத்தை வினைத்திறனாக்குவதை இலக்காகக் கொண்டு உலக வங்கியின் அனுசரணையுடன் பொதுக் கல்வித் திட்டத்தின் கீழ் 2019 முதல் 2023 வரையான காலப்பகுதிக்குள் அனைத்து கல்வி வலயங்களிலும் வெற்றிகரமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வியமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் விஷேட கல்விப் பிரிவின் பணிப்பாளர் கே. ஏ. டி புண்ணியதாச தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக இவ்வாண்டில் 16 கல்வி வலயங்களில் இத்திட்டத்தை வலுவூட்டுவதற்கான அறிவூட்டல் செயலமர்வுகளை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கல்வி வலயங்களின் அதிகாரிகள், அதிபர்கள் உட்பட விஷேட கல்வி துறைசார்ந்தோர் இந்த அறிவூட்டல் செயற்றிட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண தீபகம், சிலாபம், பதுளை, பண்டாரவளை, அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கம்பஹா ஆகிய கல்வி வலயங்களில் உட்படுத்தல் கல்வி திட்டம் தொடர்பான அறிவூட்டல் நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது.
விஷேட தேவையுடைய மாணவர்கள் உட்படுத்தல் கல்வித் திட்டத்தின் பயன்களை அடைந்து கொள்ளும் பொருட்டு அதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில், இக்கல்வித் திட்டம் தொடர்பில் அரசினர் ஆசிரிய கல்லூரி அதிபர்களுடனும் இத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்களை கல்வியமைச்சின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியின் அதிபர் பா. பரமேஸ்வரனுடன் கலந்துரையாடலொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.
ஆதலால், இத்தகைய நடவடிக்கைகளினூடாக உட்படுத்தல் கல்விச் செயற்றிட்டத்தை வெற்றி பெறச் செய்து விஷேட தேவையுடையவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும், ஆளுமையுள்ளவர்களாகவும் சமூக நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கு அனைத்து இன கல்விச் சமூகங்களினதும் அர்ப்பணிப்புக்கள் இன்றியமையாததாகும்.
எம்.எம்.ஏ.ஸமட்
vidivelli