2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை இன்னும் முற்றுப்பெறவில்லை. முஸ்லிம் விரோதப் போக்குகள் திட்டமிட்ட அடிப்படையில் வளர்ந்துகொண்டிருப்பதை ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்கள் ஊடாக புரிந்துகொள்ள முடிகின்றது. இதற்குப் பிரதான காரணம் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படக்கூடிய பௌத்த தீவிரவாத அமைப்புக்களை வழிநடத்துபவர்கள் பௌத்த சமூகத்தின் அடிமட்டத்தை தேர்ந்தெடுத்து முஸ்லிம் விரோதிகளை உருவாக்குவதன் மூலம் இஸ்லாம் பயங்கரவாதம் என்ற அடிப்படையில் பலமான பொதுமக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்பி நாட்டில் இஸ்லாமிய விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதை பாரிய திட்டமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு நாளுக்கு நாள் இத்தகைய எதிர்ப்பலை பலம் பெற்று இலங்கை முழுவதற்கும் விரிவடைந்தால் சாதாரண சிங்கள பௌத்த மக்களையும், தமிழர்களையும், முஸ்லிம் விரோதிகளாக மாற்றிவிடலாம். அத்தகைய ஒருநிலை பலமடைந்தால் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் பாரிய சவால்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடலாம். எமது எதிர்கால சந்ததியினர் இந்நாட்டில் வாழ்வுரிமைகளை அனுபவிப்பதில் பாரிய சவால்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம். அத்தகைய ஒரு நிலை ஏற்படுவதை தடுக்க இன்றைய இஸ்லாமிய தலைமைத்துவங்கள் தற்போதைய நிலைமைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு அதற்கு நீண்டகால அடிப்படையில் முஸ்லிம் எதிர் செயற்பாடுகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
“முழு தேசமும் ஒரே சக்கரத்தில் ஒன்றிணைவோம்” என்ற தொனிப் பொருளில் 2019 ஜூலை 07 ஆம் திகதி கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் கூட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் வஹாபிஸம் என்பவற்றை தோற்கடிக்க சிங்கள பௌத்தர்கள் அணிதிரள வேண்டுமென்ற அடிப்படையில் பௌத்தர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கூட்டத்தில் முக்கியமான பேசு பொருளாக அமைந்தது இஸ்லாமிய பயங்கரவாதமும் வஹாபிசமுமாகும். அதனை காட்டி சிங்கள மக்கள் மத்தியில் எந்தளவிற்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த முடியுமோ அதற்கான ஏற்பாடுகள் அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணியை அதுரலியே ரதன தேரரும் ஞானசார தேரரும் இரண்டு கோணங்களிலிருந்து நன்கு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் பக்க பலமாக அதற்கு ஆதரவளிக்கக்கூடிய சிவில் சமூக பிரதிநிதிகள் குழுக்கள் பின்னால் இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் காத்தான்குடியில் இதுவரையில் ஷரீஆ சட்டம் மூலம் 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று புதிய புரளியொன்று கிளப்பப்பட்டிருக்கின்றது. அவ்வாறே 90.000 பௌத்த மதத்தைச் சேர்ந்த பெண்களை மதம் மாற்றி முஸ்லிம் இளைஞர்கள் திருமணம் முடித்திருப்பதாகவும் புதிய தேடல் ஒன்று செய்யப்பட் டிருக்கின்றது. இவர்களை விரைவில் மீண்டும் பௌத்தர்களாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அதுரலியே ரதன தேரர் கூறிவருகின்றார். அத்துடன் பௌத்த மதத்தை ஏற்ற முஸ்லிம்களை ஷரீஆ சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் கொலை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே ஷரீஆ சட்டம் என்ற வார்த்தை மூலம் நாட்டில் ஒரு அச்சம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் இது மற்றுமொரு புதிய குண்டுத் தாக்குதல் போன்ற கதையாகும். இவ்வாறு மக்களை அச்சமடையச் செய்யும் கதைகளை பரப்பி அதனை அப்பாவி மக்கள் ஏற்கும்படி செய்தால்தான் அந்த மக்களை இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திசைதிருப்ப முடியும். ஏற்கனவே தெற்கில் மட்டும்தான் இத்தகைய கதைகளை பரப்பிய சிங்கள தீவிரவாதிகள் இப்போது வடக்கு, கிழக்கில் தமிழர்களை பீதியடைச் செய்ய இன்னும் பல புதிய தகவல்களை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
சாதாரண மக்கள் முதல் எல்லாத் தரப்பினர்களிடமும் கைகளில் தவழும் ஸ்மார்ட் போன்கள் ஊடாக இத்தகைய கருத்துக்கள் பரிமாறப்படுவதால் அவை மிக வேகமாக சிங்கள பௌத்தர்களையும் மறுபுறமாக தமிழர்களையும் சென்றடையக் கூடியதாக உள்ளன. அவற்றின் ஊடாக அரபு நாடுகளில் நடைபெறும் சில இஸ்லாமிய தொடர்பே இல்லாத மனிதப் படுகொலைகள், அடி, உதை, இம்சைப்படுத்தும் காட்சிகளை பரிமாறி அவை முஸ்லிம்களால் இஸ்லாத்தின் பெயரில் செய்யப்படுகின்ற அநியாயங்கள் என்று கூறப்படுகின்றன. இதில் உள்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய விரோதக் குழுக்களின் செயற்பாடுகள் போன்றே வெளிநாடுகளில் தொழில் புரியக்கூடிய இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் விரோத உணர்வுள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களை இலங்கைக்கு பரிமாறி பாதகமான சூழலை உருவாக்குவதில் துணையாக செயற்பட்டு வருகின்றனர்.
உதாரணமாக, மத்தியகிழக்கில் வீட்டுப் பணிப் பெண்களுக்கு அந்நாட்டு வீட்டு உரிமையாளரால் (பொஸ்) அநியாயங்கள் செய்யும் அதிகமான காட்சிகளை அத்தகைய வீடுகளில் சாரதியாக அல்லது பணியாளர்களாக இருக்கும் முஸ்லிம் அல்லாத நபர்கள் வீடியோவாக பதிவு செய்து இலங்கைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறே உள்நாட்டில் முஸ்லிமாக இருந்து பொருளாதார ரீதியாகவும் வேறு காரணிகளாலும் பாதிக்கப்பட்ட பெண்களை தேடி அவர்களுக்கு பணம் கொடுத்து இஸ்லாத்திற்கும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கும் எதிராகப் பேசவைத்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களாக பரிமாறப்படுகின்றன. ஷரீஆ (இஸ்லாமிய சட்டம்), மதமாற்றம், முஸ்லிம்களின் வர்த்தக வாணிபம், திருமணம், காதி நீதிமன்ற நடவடிக்கைகள் என்று பல விடயங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தேடல் செய்து பரப்புவதற்காகவே சில குழுக்கள் பணத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில் பிரதான பாத்திரங்களை இஸ்லாமிய விரோத சார்பு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களும் செய்து வருகின்றன.
அத்தகைய கருத்துக்கள் இலங்கை மக்களது வியாபாரம், கல்வி நடவடிக்கைகள், அலுவலக நடவடிக்கைகள், பொதுவான நடமாட்டம், சகவாழ்வு என்ற அடிப்படையில் எல்லா மட்டங்களிலும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இலங்கையை ஐரோப்பியர் ஆட்சிய செய்த காலப்பகுதிக்குள் இங்கு உரோமன் டச்சு மற்றும் ஆங்கிலேய சட்டங்கள் அறிமுகமாகின. அதனோடு முஸ்லிம்களுக்கென்று தனியார் சட்டமாக இஸ்லாமிய சட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டன.
அவ்வாறே மலைநாட்டு சட்டம், கரையோர சட்டம், முக்குவர் சட்டம், தேசவழமை சட்டம் என்ற அடிப்படையில் மேலும் சட்டங்கள் நடைமுறையில் இருந்துள்ளன. அரபி மொழியில் “ஷரீஆ” என்றால் சட்டம் என்ற அர்த்தமாகும். இஸ்லாமிய ஷரீஆ என்பது இஸ்லாமிய சட்டத்தை குறிக்கின்றது. அரபு நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற முழுமையான இஸ்லாமிய சட்டங்கள் இலங்கையில் இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. முக்கியமான நான்கு விடயங்களில் மாத்திரமே இலங்கையில் முஸ்லிம்களால் இஸ்லாமிய சட்டம் (ஷரீஆ) பின்பற்றப்படுகின்றது. திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, மஸ்ஜித் நிர்வாகம் (வக்ப் சட்டம்) அவையாகும்.
எவரையும் கொலை செய்ய இதுவரையில் முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றவில்லை. விபசாரம், வட்டி, மதுபான பாவனை, கொலை, களவு, அவதூறு போன்ற குற்றச் செயல்களுக்கு இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இஸ்லாமிய சட்டம் பயன்படுத்தப்பட்டதாக இல்லை. அத்தகைய சட்டங்களை முஸ்லிம்கள் அமுல்படுத்த இலங்கை ஒரு இஸ்லாமிய நாடாக இருக்க வேண்டும். சவூதி அரேபியா அல்லது ஈரான் போன்ற முழுமையான இஸ்லாமிய நாடுகளில் கடைப்பிடிக்கும் சட்டங்களை இங்கு ஒருபோதும் முஸ்லிம்கள் அமுல்படுத்த எதிர்பார்க்கவும் முடியாது. அதற்காக முயற்சி செய்ததும் இல்லை. இதனை முஸ்லிம்கள் இலங்கையில் மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். இந்த உண்மை பௌத்த தரப்பினருக்கு புரிய வைக்கப்பட வேண்டும்.
அத்துடன், முஸ்லிம்கள் ஒருபோதும் இலங்கையில் நடைமுறையிலுள்ள ஆங்கிலேய சட்டங்களை நிராகரித்ததாகவும் வரலாறு இல்லை. அனைத்து சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் இந்நாட்டில் பின்பற்றப்படுகின்ற உரோமன், டச் மற்றும் ஆங்கிலேய சட்டத்தின் அடிப்படையிலே நிவாரணங்களை நாடுகின்றனர். அரசாங்கத்தின் சட்டத்திற்கமைவாகவே உள்நாட்டு நீதிமன்றங்கள் வழங்குகின்ற தண்டனைகளையே முஸ்லிம்களும் ஏற்று தண்டனை அனுபவிக்கின்றனர். இலங்கையில் முஸ்லிம்கள் 1200 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்தாலும் திருமணம், வாரிசுரிமை, விவாகரத்து, மஸ்ஜித் நிர்வாகம் தவிர்ந்த ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஷரீஆ என்று பௌத்த தீவிரவாதிகளால் பீதி ஏற்படுத்தப்படுகின்ற சட்டங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் தமிழர்களையும் தெற்கில் சிங்களவர்களையும் தூண்டி வன்முறைக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு முயற்சியாகவே இவ்வாறான குற்றச்சாட்டுகளைக் காணவேண்டியிருக்கின்றது.
திருமணம், வாரிசுரிமை, விவாகரத்து, மஸ்ஜித் நிர்வாகம் ஆகிய விடயங்களை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்களது அன்றாட வாழ்வில் இவை நேரடியாக சம்பந்தப்படுவதால் பிரித்தானியர் ஆட்சி முதல் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு உரிமையாகக் கருதி இந்த செயற்பாடுகளில் இஸ்லாமிய சட்டம் பின்பற்றப்படுகின்றது. விவாகரத்து தொடர்பாக பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்காக இஸ்லாமிய நீதிமன்றமாக காதி நீதிமன்ற நடைமுறை இருந்து வருகின்றது. அதேநேரம் முஸ்லிம் சமூகத்தில் சிறிய சிறிய பிணக்குகள் ஏற்படும்போது பொலிஸ் நிலையம் செல்வதை தவிர்த்து அவற்றை ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிரதான பள்ளிவாசலான மஸ்ஜித் நிர்வாகத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகின்றது. இதே பணியை நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் இணக்க சபைகளும் செய்கின்றன.
நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்கள் கூட மஸ்ஜித் நிர்வாகங்கள் செய்து வருகின்ற முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் நடைமுறையை அனுமதித்திருக்கின்றது. அதனால் பொலிஸ் நிலையங்களதும் நீதிமன்றத்தினதும் சுமை குறைவாக இருந்து வருகின்றது. இவை தவிர முஸ்லிம் சமூகம் எவரையும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் கொலை செய்ததாக இல்லை. அத்துடன் இந்த தனியார் சட்டங்கள் தொடர்பாக முஸ்லிம்கள் தமிழர்களையோ சிங்களவர்களையோ நிர்ப்பந்தித்து அதனை திணிப்பதற்கு முயற்சி செய்ததாகவும் வரலாறு இல்லை.
பொதுபல சேனா அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்க்கும் 70 இலட்சம் சிங்கள வாக்குகளைத் திரட்ட சிங்கள சமூகத்தில் ஏதாவதொரு வகையான அச்சமும் பீதியும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களை நசுக்குவதற்கு தருணம் தேடிக்கொண்டிருந்த நிலையில் இப்போது இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றோடு வஹாபிஸம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதற்காக சிங்கள மற்றும் தமிழர்கள் மத்தியில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாக வெறுப்பையும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் நோக்கில் புதிய கதைகளை பரப்புவதே இந்த பௌத்த தீவிரவாதிகளது திட்டமாகும். வடக்கு கிழக்கில் காலா காலமாக இருந்து வருகின்ற தமிழ் – முஸ்லிம் உறவு பாதிக்கப்பட இடமளிக்க முடியாது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் புதிய இன முரண்பாடு உருவாகாமலிருக்க வேண்டும்.
அதுரலியே ரதன தேரர் மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் பலத்தை உறுதி செய்வதற்காகவும், ஞானசார தேரர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவை உறுதி செய்வதற்காகவும் மொத்தத்தில் இரண்டுபேரும் ஐ.தே.க.வை தோற்கடித்து சிங்கள மேலாதிக்கத்தை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டே காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவது தெளிவாகத் தெரிகின்றது. அந்த இலட்சியத்தை அடைவதற்காக சிங்கள மக்களை திசை திருப்புவதற்காகவே வஹாபிஸம், சூபிசம், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய ஷரீஆ சட்டம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பதங்களை பயன்படுத்தி சிங்கள மக்களை அச்சத்திலும் பீதியிலும் மூழ்கடித்து வாக்குகளை வேட்டையாடும் திட்டம் வெற்றியளிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆனாலும் இத்தகைய விஷமிகளால் ஒவ்வொரு நாளும் செய்தியாளர் மாநாடுகளை கூட்டி முன்வைக்கும் முஸ்லிம் விரோத கதைகளுக்கு முஸ்லிம்களால் பதிலளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இருந்து வருகின்றது. இட்டுக்கட்டப்படும் கதைகளில் உண்மையில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டியதோடு அவற்றை பகிரங்கமாக மறுக்க வேண்டிய பொறுப்பும் இருந்து வருகின்றது. அவ்வாறு செய்யாவிட்டால் அத்தகைய கதைகளே உண்மைகளாக சோடிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் பொது வாழ்க்கை மற்றும் அரச மற்றும் தனியார் துறைகளில் கடமை புரிகின்ற ஊழியர்கள் முதல் அடிமட்டம் வரையில் அவைதான் உண்மை என்று மக்கள் நம்பும் நிலை ஏற்படுகின்றது.
இது முஸ்லிம்களின் இருப்புக்கு ஆரோக்கியமானதாக இல்லை. அத்துடன் வடக்கில் தமிழர்களுடனும் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியிலும் எத்தகைய சவால்கள் வந்தாலும் முயற்சியை கைவிடாமல் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த நிலையான திட்டங்கள் முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அரேபிய தீபகற்பத்தில்கூட முஸ்லிம்களால் அவ்வளவாக கவனத்தில் எடுக்கப்படாத ஒரு கோட்பாடாகவே இந்த வஹாபிஸம் பற்றிய சிந்தனை இருந்து வருகின்றது.
அதற்காக முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் ஒன்றுசேர வேண்டும். ஏற்கனவே முன்னெடுக்கப்படுகின்ற சில இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய காலத்திற்கேற்ற விதமாக புதிய அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சிங்கள மக்கள் முஸ்லிம்கள் என்றாலே வெறுப்புடனும் அச்சத்துடனும் பார்க்கும் நிலை மேலும் உக்கிரமடையாமல் தடுக்க அவசரமாக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இது ஒருவகையில் இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பை உறுதி செய்வதற்காக இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அறிவியல் யுத்தமாக (Intellectual War against to Counter attack Anti Islamism) இருக்கலாம். அதற்காகவே முஸ்லிம் கல்விமான்கள் புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து வியூகங்களை வகுக்க வேண்டிய தேவை உணரப்படுகின்றது.
அல்குர்ஆனில் இடம்பெறும் சிலவகையான காபிர்கள் தொடர்பான வசனங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், சிங்கள இனத்தை அழிப்பதற்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு எதிரான ‘கருவறை யுத்தம்’ என்ற அடிப்படையிலும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
வஹாபிசம், சூபிசம், சுன்னா போன்ற விடயங்களில் பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும் குழப்பநிலையையும் போக்க நடவடிக்கைகள் தேவை. ஒவ்வொரு கிராம மட்டத்திலும் இத்தகைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட வேண்டும். சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள், நியாயங்கள் முஸ்லிம் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றை மறுப்பதற்கான பரந்தளவிலான திட்டங்கள் அவசியமாகின்றன. கடந்த காலங்களில் அவை சரியான முறையில் செய்யப்படவில்லை. சொல்வதை சொல்லிவிட்டு போகட்டும் என்று உதாசீனமாக இருந்துவிட முடியாது. பௌத்த சமூகத்தில் உள்ள அறிஞர்கள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள், பொதுமக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்பும் ஆற்றல் உள்ளவர்கள் ஆகியோருடன் அதற்காகக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். இதே கலந்துரையாடல்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் அவசியமாகின்றன.
எம்.எஸ். அமீர் ஹுசைன்
vidivelli